சாந்திவனத்து கதைகள்: 'அறிவால் வெல்லலாம்'


சாந்திவனத்தில் இரண்டு நரிகள் வசித்துவந்தன. அவை பலே 'கில்லாடி' நரிகள். சரியான தந்திரசாலிகள். காட்டுக்கு அருகில் ஒரு கிராமம் இருந்தது. அங்கிருந்து வெள்ளாடுகளை மேய்ச்சலுக்கு காட்டுப் பக்கம் ஓட்டி வருவார்கள். இரண்டு குள்ளநரிகளும் தினமும் ஓர் ஆடாக கொன்று புசித்து விடும். நாளடைவில் ஆட்டு மந்தையில் ஒரே ஒரு வெள்ளாடு மட்டுமே மிஞ்சியது. 

அது கெட்டிக்கார ஆடு. எது செய்தாலும் நன்றாக யோசித்தே செய்யும். தன்னுடைய அறிவாலும், புத்திசாலித்தனத்தாலும் அது பலமுறை ஆபத்துகளிலிருந்து தப்பியிருக்கிறது.

'வெள்ளாட்டைக் கொன்று தின்பது எப்படி?' இரண்டு குள்ளநரிகளும் யோசித்தன. கடைசியில், ஆட்டை வஞ்சகமாய், ஏமாற்றி கொல்வது என முடிவெடுத்தன. 

 "நீ போய் வெள்ளாட்டுடன் நட்புடன் பழகி நண்பனாக்கிக் கொள். சில நாள் கழித்து நான் இறந்துவிட்டதாக சொல்லி ஏமாற்றி நம் குகைக்கு அழைத்து வந்துவிடு! பிறகு அதைக் கொன்று சாப்பிடுவது கஷ்டமல்ல!" - என்றது நரிகளில் ஒன்று.

அதனுடைய யோசனை நல்லதாக படவே இரண்டாவது நரி ஆட்டைத் தேடிச் சென்றது.

குள்ளநரி தன்னிடம் நெருங்கிப் பழக ஆரம்பித்ததும், "இதில் ஏதோ மோசடி இருக்கிறது! நான் எதற்கும் எச்சரிக்கையுடனேயெ இருக்க வேண்டும்!" - என்று  வெள்ளாடு தனக்குள் சொல்லிக் கொண்டது. திட்டப்படி குள்ளநரி வெள்ளாட்டின் நல்ல நண்பனாக தன்னைக் காட்டிக் கொண்டது. வெள்ளாடும் அதனுடன் எச்சரிக்கையுடனேயே பழக ஆரம்பித்தது.

ஒருநாள். குள்ளநரி அழுதபடியே ஆட்டிடம் வந்தது. 

அதைக் கண்டு, "நண்பா! ஏன் அழுகிறாய்?" - என்று வெள்ளாடு விசாரிக்க ஆரம்பித்தது.

"என் ஆருயிர் நண்பர் 'நரியார்' நோயுற்றிருந்தார். திடீரென்று நேற்று இரவு அவர் மரணமடைந்து விட்டார். அவருடைய அந்திம கடமைகளை நிறைவேற்ற வேண்டும். வா.. குகைக்குப் போய்ப் பார்ப்போம்!" - என்று குள்ளநரி அழுது கொண்டே வெள்ளாட்டை அழைத்தது. 

நரியின் தந்திரத்தை வெள்ளாடு புரிந்து கொண்டது. அது விவேகத்துடன் செயல்படலாயிற்று. 

நரியிடம், "அழாதே நண்பா! உன் துன்பம் எனது துன்பம் இல்லையா? அழுது புரண்டாலும் செத்தவர்கள் எப்படி மீண்டு வரமுடியும்? அதனால் அழாதே! நாம் ஆக வேண்டியதை உடனே பார்ப்போம்! நம் நண்பரின் இறுதிச் சடங்கை அனாதைப் பிணச்சடங்கு போல் செய்யக் கூடாது. சாந்திவனமே மெச்சுவது போல தட புடலாய் செய்ய வேண்டும். அதனால் என் நண்பர்கள் அனைவரையும் அழைத்து வருகிறேன். நாங்கள் இருக்கிறோம் நீ தைரியமாக இரு!" - என்று தந்திரம் கலந்த ஆறுதல் சொன்னது வெள்ளாடு.

இதைக் கேட்டதும் அதிர்ச்சியுற்ற குள்ளநரி, "உன் நண்பர்களா? யாரது? - என்றது பதைபதைப்புடன்.

"என் நெருங்கிய தோழர்களான இரு மோப்ப நாய்கள். அவைகளின் தோழர்களான இன்னும் நான்கு காவல்நாய்கள். அந்த நான்கு காவல்நாய்களின் தோழர்களான இன்னும் ஐம்பது வேட்டைநாய்கள். அந்த ஐம்பது வேட்டைநாய்களின் நண்பர்களான இருநூறு காவல்நாய்கள்! இப்படி நாம் எல்லோரும் சேர்ந்து நமது நண்பரின் இறுதிச் சடங்கை அமர்க்களமாய் நடத்துவோம்.. கவலைப்படாதே1" - என்ற வெள்ளாடு குள்ளநரியைப் பார்க்க திரும்பியது.

நரி அங்கிருந்தால்தானே!

அது அங்கிருந்து எப்போதோ தலைத்தெறிக்க ஓட்டமெடுத்து, குகையில் இருந்த நரியையும் அழைத்துக் கொண்டு சாந்திவனத்தைவிட்டு ஓடியே விட்டது.

Related

சாந்திவனத்து கதைகள் 4191170906694148528

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress