நாளொன்று கற்போம்: 'நிக்காஹ்வில் ஓதப்படும் வசனங்கள்'
http://mazalaipiriyan.blogspot.com/2013/10/blog-post_9.html
மாலையில், மசூதியில்
இர்பான் மாமாவுக்கு நிக்காஹ் – திருமணம்.
சமீர் அப்பாவுடன்
சென்றிருந்தான்.
மக்ரீப் தொழுகை
– முடிந்தது.
தொழுது முடித்த
கையோடு அனைவரும் அமர்ந்தனர்.
வெள்ளுடை அணிந்து
தலைக்கு தலைப்பாகை கட்டிக் கொண்டு இர்பான் மாமா அமர்ந்திருந்தார்.
நிக்காஹ் நடத்தி
வைக்க இமாம் அவர்களும் வந்தமர்ந்தார்கள். ஜமாஅத்தார்கள் ஒரு பக்கம் அமர்ந்தார்கள்.
பெண் வீட்டார், உற்றார், உறவினர், அண்டை – அயலார், நண்பர்கள் எல்லோரும் சுற்றி இருந்தார்கள்.
பெண்ணின் சம்மதத்தோடு
நிக்காஹ் பதிவேட்டில் பதியப்பட்டது. மஹர் என்னும் மணப் பெண்ணுக்கான திருமண கொடையும்
வழங்கப்பட்டது.
இமாம் நிக்காஹ்
குத்பா ஓத நிக்காஹ்வும் முடிந்தது.
வீட்டுக்கு வந்த
சமீர் அப்பாவிடம் கேட்டான்: “அப்பா எனக்கு ஒரு சந்தேகம். கேட்கவா?”
மகனை அருகில் இருத்திக்
கொண்ட அப்பா, “கேள் மகனே!” – என்றார் அன்புடன்.
“அப்பா! இமாம்
சாப் ஓதினாரே குத்பா அதன் பொருள் என்ன?” என்று கேட்டான் சமீர்.
“நல்ல கேள்வி.
இப்படிதான் தெரியாதவற்றை கேட்டு தெரிந்து கொள்ளணும். அப்போதுதான் நமது அறிவும் வளரும்!”
– என்று தட்டிக் கொடுத்தார் அப்பா.
பிறகு சொல்ல ஆரம்பித்தார்:
“சமீர், நிக்காஹ்வில், திருக்குர்ஆனின் மூன்று முக்கிய வசனங்கள் ஓதப்படுகின்றன.
அவை மணமக்களுக்கான
அறிவுரைகள்.
மணமகனும், மணமகளும்
இறைவனுக்கு அஞ்சி ஒருவர் மற்றொருவரோடு எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
அவர்களுக்கு உள்ள
கடமைகள் என்ன? அவர்களுக்கான உரிமைகள் என்ன? போன்ற அறிவுரைகள் அவை.
சமீர் அப்பா சொல்வதை
ஆர்வத்தோடு கேட்டான்.
அப்பா தொடர்ந்து
சொன்னார்: "சமீர் உனக்கு போர் அடிக்கலேன்னா இதோ அந்த வசனங்களை அப்படியே தமிழில் நான்
ஓதிக் காட்டுறேன், கேள்!” –என்ற அப்பா வசனங்களை ஓதலானார்.
முதலாவது வசனம்
இது: “இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் இறைவனுக்கு அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்.
நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணமடைய வேண்டாம். (3:102)
இரண்டாவது வசனம்:
“மனிதர்களே! ஓர் ஆன்மாவிலிருந்து படைத்த உங்கள் இறைவனுக்கு நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள்.
மேலும், அதே ஆன்மாவிலிருந்து அதனுடைய துணையை அவன் படைத்தான். மேலும், அந்த இரண்டின்
மூலம் உலகில் ஆண்களையும், பெண்களையும் பரவச் செய்தான். மேலும், எந்த இறைவனின் பெயரைக்
கூறி நீங்கள் ஒருவர் மற்றவரிடம் உரிமைக் கோருகின்றீர்களோ
அந்த இறைவனுக்கே நீங்கள் அஞ்சுங்கள். மேலும், இரத்த பந்த உறவுகளை சீர்குலைப்பதிலிருந்து
நீங்கள் விலகி வாழுங்கள். திண்ணமாக, அறிந்து கொள்ளுங்கள், ‘இறைவன் உங்களைக் கண்காணித்துக்
கொண்டிருக்கின்றான்” (4:1)
“சமீர் இது மூன்றாவது
வசனம்: ‘ நம்பிக்கைக் கொண்டவர்களே! இறைவனுக்கு அஞ்சுங்கள். மேலும், நேர்மையான சொல்லை
மொழியுங்கள். இறைவன் உங்களுடைய செயல்களைச் சீர்த்திருத்திவிடுவான். மேலும், உங்களுடைய
குற்றங்களை மன்னிக்கவும் செய்வான். யார் இறைவனுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிகின்றாரோ
அவர் மகத்தான் வெற்றி அடைந்துவிட்டார்!” (33:70,71)
சமீர் அப்பா ஓதிக்
காட்டிய வசனங்களைக் கேட்டான்.
அதற்குள் அம்மா, சுடச் சுட தேனீர் கொண்டு வந்தார். புன்னகைத்தவாறே
சமீரின் தலையை வருடிவிட்டார். இந்த சந்தோஷத்துக்கு அவனது பெற்றோர் அவர்களது நிக்காஹ்வில்
ஓதிய திருவசனங்களைப் பின்பற்றிவருவதுதான் காரணம் என்பது அவனுக்கு புரியாத வயது அது.
வளர்ந்தால் நிச்சயம் புரிந்து கொள்வான்.
உங்களுக்கும் புரிகிறதல்லவா?