குழந்தை இலக்கியம்: 'நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே!'
http://mazalaipiriyan.blogspot.com/2013/10/blog-post_10.html
ஊஹீம்.. யாரும்
இதிலிருந்து தப்பவே முடியாது!
அதுவும் முஸ்லிம்களும்
அவர்கள் பின்பற்றி வாழும் கொள்கையான இஸ்லாமும் இன்று உலகம் முழுக்க கடுமையாக விமர்சிக்கப்படும்
இந்தக் காலத்தில் நீங்கள் எந்தவிதமான சாக்கு – போக்கும் சொல்ல முடியாதுதான்!
பொழுது விடிந்து..
பொழுது சாயும்வரை, வீட்டில் அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, பள்ளி ஆசிரியர்கள், அண்டை
– அயலார், மஸ்ஜிதின் இமாம் சாஹிப் வரை எல்லோரும் சொல்லும் ஒரே வார்த்தை, “நல்லவர்களாக
இருங்கள்! நல்லவர்களாக
இருங்கள்!” – என்பதுதான்!
உண்மைதான் பிள்ளைகளே!
நாம் நல்லவர்களாக வாழா விட்டால்… இந்த உலகத்திலும் வெற்றி பெற முடியாது. மறுமையிலும்
வெற்றி பெற முடியாது.
நாம் முஸ்லிம்கள்
அதாவது உலகத்தைப் படைத்த இறைவனுக்கு அடிபணிந்தவர்கள். இறைவன் அருளிய மிகச் சிறந்த வாழ்க்கையை
பின்பற்றி வாழ முன் வந்தவர்கள். அதனால், நாமும் மிகச் சிறந்த மனிதர்களாக வாழ வேண்டியதும்
முக்கியமானது.
நம் வாழ்க்கையின்
ஒவ்வொரு செயலையும் எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை ஒரு கதையின் மூலம் சொல்கிறேன்
கேளுங்கள்:
‘கண்ணில்லாத அந்த
சிறுவன் தன் முன்னால் ஒரு துண்டை விரித்து அந்த தெருவில் அமர்ந்திருந்தான். அவனுக்குப்
பக்கத்தில் ஒரு பலகையில் இப்படி எழுதப்பட்டிருந்தது. “நான் பார்வை இழந்தவன். தயவுசெய்து
எனக்கு உதவுங்கள்!’
அந்த வழியே சென்ற
ஒரு வழிப்போக்கர் சிறுவனைக் கண்டார். பரிதாபம் கொண்டார். தனது பாக்கெட்டில் கையைவிட்டார்.
இருந்த சில்லறை காசுகளை துண்டில் போட்டார். ஏதோ நினைத்துக் கொண்டவராய் அந்த பலகையின்
மறுபுறம் ஏதோ எழுதினார். மீண்டும் அதை அந்தச் சிறுவனின் அருகில் வைத்தார். அங்கிருந்தும்
சென்றுவிட்டார்.
கொஞ்ச நேரம் சென்றது.
சிறுவன் முன் விரித்திருந்த துண்டு முழுக்க காசு குவிந்தது. அந்த பக்கம் சென்றவர்கள்
எல்லோரும் சற்று நேரம் சிறுவனின் அருகே நின்றார்கள். பலகையில் எழுதியிருந்ததைப் படித்தார்கள்.
துண்டில் காசை போட்டுவிட்டுச் சென்றார்கள்.
அன்று மாலை.
காலையில் பலகையில்
புதிய வாக்கியங்களை எழுதியவர் திரும்பவும் வந்தார். அவரது காலடி சத்தத்தை வைத்தே அவரை
அந்த பார்வையற்ற சிறுவன் அடையாளம் கண்டு கொண்டான்.
“அய்யா, காலையில்
இந்த பதாகையில் புதிதாய் எழுதியது தாங்கள்தானே? அப்படி என்னதான் அதில் எழுதினீர்கள்?”
– என்று வியப்புடன் கேட்டான்.
“தம்பி அது நான்தான்!
உண்மையைத்தான் எழுதினேன். ஆனால், கொஞ்சம் வித்தியாசமாக” - என்றவர் தான் பலகையில்
எழுதியதையும் சொன்னார்:
“நான் அந்த பலகையில்
இப்படி எழுதினேன்: இன்றைய பொழுது எவ்வளவு அற்புதமானது! எவ்வளவு ரம்மியமானது! ஆனால்,
துரதிஷ்டசாலியான என்னால் அதை ரசிக்க முடியவில்லையே!”
குழந்தைகளே!
அந்த பலகையில்
முதலில் எழுதியதற்கும், இரண்டாவது எழுதியதற்கும் என்ன வித்யாசம்? சொல்ல முடியுமா?
சரி.. நானே சொல்கிறேன்.
கேளுங்கள்.
இரண்டு வாக்கியங்கள்;
ஒரே பொருளைத் தந்தாலும், அவற்றின் சொல்லப்பட்ட விதத்தில் வித்யாசம் இருந்தது.
இரண்டு
வாக்கியங்களும் சிறுவன் பார்வை இல்லாதவன் என்றுதான் குறிப்பிட்டன.
ஆனால, முதலில் எழுதப்பட்ட
வாசகமோ, ‘பார்வை இல்லை! உதவி செய்யுங்கள்!’ – என்று மட்டும் குறிப்பிட்டது.
இரண்டாவதாக திருத்தி எழுதப்பட்ட வாசகமோ,
“நீங்கள் என்னைவிட அதிஷ்டசாலிகள்! அழகான இந்த உலகத்தைப் பார்க்கிறீர்கள். ஆனால், என்னால்
(பார்வையின்மையால்) அந்த அழகை ரசிக்க முடியவில்லை!” – என்று உணர்வு பூர்வமாக சிறுவனின்
இயலாமையை எடுத்துரைத்தது.
குழந்தைகளே!
நாம் பெற்றிருக்கும் ஒவ்வொன்றுக்கும் இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும். இறைவனுக்கு அடிபணிந்த நன்றியுள்ளவர்களாக விளங்க
வேண்டும்.
“மனிதன் மீது,
அவன் குறிப்பிட்டதொரு பொருளாக இல்லாதிருந்த நீண்ட காலகட்டம் செல்லவில்லையா? நாம் மனிதனை
ஒரு துளியிலிருந்து படைத்தோம். நாம் அவனைச் சோதிக்க வேண்டும் என்பதற்காக! மேலும், இந்த
நோக்கத்திற்காக நாம் அவனை செவியுறுபவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம்” (76:1-3) என்கிறான் இறைவன் திருக்குர்ஆனில்.
கற்பனாத் திறன்
கொண்டவனாக.. சிந்தனைத் திறன் கொண்டவனாக.. அதிலும், வித்தியாசமாக நேர்மறை
(Positively) சிந்தனைத் திறன் கொண்டவனாக நாம் இருக்க வேண்டும்.
இந்த தன்மைகளை
திருக்குர்ஆன் இப்படி சுட்டிக் காட்டுகிறது: “அவர்கள் எத்தகையவர்கள்
என்றால்.. நிற்கும்போதும், உட்காரும்போதும், படுத்திருக்கும்போதும் ஆக எல்லா நிலைகளிலும்
இறைவனை நினைக்கிறார்கள். மேலும், வானங்கள் மற்றும் பூமியின் அமைப்பைக் குறித்துச் சிந்திக்கிறார்கள்.
பிறகு அவர்கள் உணர்ச்சிப் பொங்க இப்படிப் பிரார்த்திக்கிறார்கள்: “இறைவனே! இவை அனைத்தையும்
நீ வீணாக யாதொரு நோக்கமும் இல்லாமல் படைக்கவில்லை. வீணான செயல்களிலிருந்து நீ தூய்மையானவன்.
எனவே, நரக வேதனையிலிருந்து நீ எங்களை காப்பாற்றுவாயாக!” (3:9)
குழந்தைகளே!
ஞானத்தின் பக்கம்
மக்களை அழைப்பவராக நாம் இருக்க வேண்டும்.
"விவேகத்துடனும், அழகிய அறிவுரைகள் மூலமாகவும்
உம் இறைவனின் மார்க்கத்தின் பக்கம் அழைப்பீராக! மேலும், மிகச் சிறந்த முறையில், மக்களிடம்
விவாதம் புரிவீராக! தன்னுடைய பாதையிலிருந்து வழிபிறழ்ந்தவர் யார் என்பதையும், நேர்வழியில்
இருப்பவர்கள் யார் என்பதையும் உம் அதிபதி – இறைவன் நன்கறிவான்!” – (16:125) என்கிறது
திருக்குர்ஆன்.
ஒவ்வொரு நல்ல குணமும்,
உங்கள் வாழ்வில் நீங்கள் அடைய இருக்கும் முன்னேற்றப் படிகள் என்பதை மறக்க வேண்டாம்.
அதனால், நல்லவை, கெட்டவை என்பன எவை என்பதை நீங்கள் அடையாளம் காண்பது முக்கியம்.
நாம் இந்த உலகில்
வாழும்வரை நம்மை நல்லவர்களாக்கும் முயற்சி தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.
இந்த முயற்சி
‘ஐஸ் கிரீம்’ சாப்பிடுவது போல ரொம்பவும் எளிமையானது அல்ல. சுவையானதும் அல்ல. கொஞ்சம் சிரமமானது! நிறைய தியாகங்கள் செய்ய வேண்டியது.
ஆனால், காலம் உள்ளவரை மக்களிடையே பேசப்படுவது.