குழந்தை வளர்ப்பு - 07: 'அப்பாவிப் பூனையும், அரக்கக் குணமுள்ள பெண்ணும்..!'


தாகித்த நாய்க்கு தண்ணீர் புகட்டியதால் சுவனப்பேற்றை அடைந்த ஒரு மனிதரின் கதையை கேட்டோம்.

அடுத்ததாக நபிகளார் சொன்ன பூனை கதை இதுதான். 

பூனையை அடித்ததால் நன்மையை இழந்த ஒரு துரதிஷ்டசாலியான பெண்ணைப் பற்றிய கதை இது.  

அவள் அந்தப் பூனையைச் சரியாக கவனிப்பதே இல்லை. அதற்கு உணவும் கொடுப்பதில்லை. நீரும் வைப்பதில்லை. 

அதனால், பூனை எலும்பும், தோலுமாய் மெலிந்து போனது. உடம்பில் சத்துக் குறைந்துபோய் முடி கொட்ட ஆரம்பித்தது.

அந்தப் பெண் முன்கோபி. கோபம் வரும் போது எல்லாம் பூனையை அடிப்பாள். எட்டி உதைப்பாள். தூக்கி வீசுவாள். வீதியில் விரட்டிவிட்டுக் கதவைச் சாத்தி விடுவாள். 

பாவம்! அந்தப் பூனை! இரவு முழுவதும் சாலையிலேயே படுத்துக் கிடக்கும். பசி தாளாமல், “மியாவ்..! மியாவ்..!!” – என்று அழும்.

பூனை அந்தப் பெண்ணைக் கண்டாலே பயந்து நடுங்கும். “மியாவ்..!” – என்று கத்திக் கொண்டே ஓடிவிடும். மறைவான இடம் தேடிப் பதுங்கிக் கொள்ளும்.

அந்த கொடுமைக்காரப் பெண்ணின் செயல் அவளது அண்டை – அயலார்க்குப் பிடிக்கவில்லை. “அய்யோ! பாவம்! அந்த வாயில்லா ஜீவனை என்னமாய் வதைக்கிறாள்!” – என்று சொல்லி வருந்துவார்கள். மனதிலேயே அந்தப் பெண்ணைத் திட்டித் தீர்ப்பார்கள்.

ஒருநாள். பெண்ணின் கொடுமையைத் தாள முடியாமல் பக்கத்து வீட்டுக்காரர் அவளிடம் சென்றார்.

“பூனையை இப்படியா அடித்து சித்திரவதை செய்வது? சரியான கொடுமைக்காரியாக இருக்கிறாயே! பூனையும் நம்மைப் போலவே இறைவனின் படைப்புகளில் ஒன்றல்லவா? அந்த வாயில்லா ஜீவனிடம் இப்படியா நடந்துகொள்வது? நீ செய்வது கொஞ்சமும் சரியல்ல” – என்று அறிவுரை சொன்னார்.

இதைக் கேட்டதும் அந்தப் பெண்ணுக்குக் கோபம் வந்தது. கூச்சலிட்டாள்: “முதலில் வீட்டை விட்டு வெளியே போ. பெரிசா அறிவுரை சொல்ல வந்துட்டார். அது என்னோட பூனை! அதை அடிப்பேன். பட்டினி போடுவேன். கொல்லுவேன். என் இஷ்டம். அதைக் கேட்க நீ யார்?”

பக்கத்து வீட்டுக்காரருக்கு வருத்தமாகிவிட்டது. பூனையை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று அவர் யோசித்தார். ஒரு திட்டம் போட்டார். அதற்காக இரவுவரை காத்திருந்தார்.

இரவும் வந்தது.

பக்கத்து வீட்டுப் பெண் பூனையை அடித்து, “சனியனே! வெளியே போ! இன்று உனக்கு வீட்டில் இடம் இல்லை!” – என்று சத்தம் போடுவது கேட்டது.

“மியாவ்.. மியாவ்.!” – என்று பூனை அழுதது. அதை அந்தப் பெண் பொருட்படுத்தவில்லை. கதைவைத் திறந்தாள். பூனையைத் தெருவில் வீசி எறிந்தாள்.”படார்!” – என்று கதவைச் சாத்திக் கொண்டாள்.

இதை மறைந்திருந்த பக்கத்து வீட்டுக்காரர் பார்த்தார். கொஞ்ச நேரம் பொறுத்திருந்தார். அந்தப் பெண் வீட்டிலிருந்து வெளியே வருவதாக இல்லை.

பூனையோ தெருவில் பரிதாபமாகக் கிடந்தது. வீசி எறிந்ததால்.. அதன் ஒரு காலில் அடிபட்டது. அது வலியால் துடிதுடித்தது. “மியாவ்..! மியாவ்..!” –என்று வலி தாளாமல் அழுதது. தனது எஜமானி எப்படியாவது கதைவைத் திறப்பார்!’ – என்று காத்திருந்தது. மன்னிப்பும் கேட்கும் விதமாக கதவைப் பிராண்டவும் செய்தது.

இதைக் கண்ட பக்கத்து வீட்டுக்காரரின் நெஞ்சம் பதறிப் போனது. பூனையின் வேதனையை அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

நேராக அவர் பூனையிடம் சென்றார். “புஸ்.. புஸ்..” – என்று அன்பாகக் குரல் கொடுத்தார். “வாடா என் செல்லம்!” – என்று ஆசையுடன் வாரி எடுத்தார். “வலிக்குதாமா?” – என்று அதன் உடலை நீவி விட்டார். “வா.. நமது வீட்டுக்குச் செல்வோம். உனக்கு வயிறு நிறைய உணவையும் தருகிறேன்” – என்று மார்புடன் அணைத்துக் கொண்டார். வீட்டுக்குச் சென்றவர் பூனைக்கு வயிறு நிரம்ப உணவும் அளித்தார்.

பாவம்! அந்தப் பூனை! சாப்பிட்டு எத்தனை நாள் ஆனதோ தெரியவில்லை. ஒரு நிமிடத்தில் உணவுத் தட்டை காலி செய்துவிட்டது. அவர் மறுபடியும் அதற்கு உணவு வைத்தார். வயிறு நிரம்ப சாப்பிட்ட பூனை தண்ணீரையும் குடித்தது. மகிழ்ச்சி தாளாமல், “மியாவ்..! மியாவ்..!” – என்று ஆசையோடு குரல் கொடுத்தது. அவரது காலை உரசி தனது நன்றியையும் தெரியப்படுத்தியது. களைப்பு மிகுதியால் காலடியில் படுத்து தூங்கியும்விட்டது.

அடுத்த நாள். பூனையைக் காணாமல் கொடுமைக்காரப் பெண் தேடினாள். வீதி, கடைத் தெரு என்று ஓர் இடம்கூட அவள் விடவில்லை. பூனை எங்கேயும் காணவில்லை. அதனால் அந்தப் பெண் கோபமடைந்தாள்.

“யாரோ என் பூனையை திருடிக் கொண்டார்கள்!” – என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டாள். அப்போது பக்கத்து வீட்டுக்காரரின் ஞாபகம் வந்தது. அவர்தான் ‘பூனையைக் கொடுமைப்படுத்தாதே!’-என்று அறிவுறுத்தி இருந்தார்.

“அந்த ஆள்தான் என் பூனையைத் திருடியிருக்க வேண்டும். என்ன செய்கிறேன் பார்  அந்த ஆளை!”-என்று கூச்சலிட்டாள். விறுவிறு என்று பக்கத்து வீட்டுக்குச் சென்றாள்.

ஓங்கி கதவைத் தட்டினாள். பக்கத்துக்கு வீட்டுக்காரர் கதவைத் திறந்தார். அவரைப் பார்த்ததும், “எங்கே என் பூனை? மரியாதையாய் என் பூனையைக் கொடுத்துவிடு!” – என்று கோபமாகக் கத்தினாள்.

“தர முடியாது! நீ இரக்கமே இல்லாத கொடுமைக்காரி! உன்னைப் போன்ற நெஞ்சில் ஈரமில்லாதவர்களுக்கு உயிரினங்களை வளர்க்கும் உரிமை இல்லை!” – பக்கத்து வீட்டுக்காரர் கறாறாகச் சொல்லிவிட்டார்.

அந்தப் பெண் அதை எல்லாம் காதில் வாங்கவில்லை. “என் பூனையை என்னிடம் கொடுத்துவிடு!” – என்று கேட்டவாறு இருந்தாள்.

“தர முடியாது என்றால் தர முடியாது! ‘பூனையை இனி கொடுமைப்படுத்துவதில்லை!’- என்று சத்தியம் செய்து கொடு! பூனையை உன்னிடமே கொடுத்துவிடுகிறேன்!” – என்றார் பக்கத்து வீட்டுக்காரர்.

இதைக் கேட்டதும் அந்தப் பெண்ணுக்கு சிரிப்பு வந்தது. “சரியான முட்டாள்!”-என்று மனதில் திட்டிக் கொண்டாள். இனி பேசிப் பயனில்லை. பொய்ச் சத்தியம் செய்தாவது பூனையை வாங்கிச் செல்வது என்று முடிவெடுத்தாள். கோபப்படுவதை விட்டு சிநேகிதமாய் சிரித்தாள்.

“நான் பூனையிடம் நல்லபடியாக நடந்து கொள்வதாய் சத்தியம் செய்து தந்தால் பூனையை என்னிடம் தந்துவிடுவீர்கள் அல்லவா?” – என்றாள் மென்மையாக.

“ஆமாம்! நீ சத்தியம் செய்து தருவதாக இருந்தால் பூனையை கொடுத்துவிடுகிறேன்!”

“சரி.. நான் இனிமேல் பூனையை அடிக்கமாட்டேன்! அதைக் கொடுமைப்படுத்த மாட்டேன்! இது சத்தியம்! போதுமா?” என்றாள் மனதிற்குள் சிரித்தவாறே.

“இது போதாது! பூனைக்குப் போதுமான உணவும் தர வேண்டும். இரவில் அதை வீட்டிலிருந்து அடித்து விரட்டக் கூடாது என்று சத்தியம் செய்து தர வேண்டும்!”

“அப்படியே செய்துவிட்டால் போச்சு. இதற்காக வீணாக ஏன் ‘டெனஷன்’ ஆகிறீர்கள்? இனி என் பூனையிடம் நல்லபடியாக நடந்து கொள்கிறேன். சரிதானே?”

பக்கத்து வீட்டுக்காரரின் முகத்தில் புன்னகை அரும்பியது. கோபம் மறைந்தது. அந்தப் பெண்ணின் பொய்ச் சத்தியதை அவர் நம்பி விட்டார். பூனையை அவளிடமே ஒப்படைத்துவிட்டார்.

இப்படி சத்தியம் செய்து தந்தவள் அதைக் காப்பாற்றினாள் என்றா நினைககிறீர்கள்?

இல்லை! அவள் தனது சத்தியத்தைக் காற்றில் பறக்கவிட்டாள். பூனையை வீட்டுக்குக் கொண்டு சென்றவள். அதை செமத்தியாக அடித்தாள். பூனையின் கழுத்தில் கயிறு கட்டி அதை நாற்காலியோடு கட்டிவிட்டாள.

பூனைக்கு உணவும் தரவில்லை. குடிக்க நீரும் வைக்கவில்லை.

பசியின் கொடுமைத் தாளாமல் கொஞ்ச நாளில் பூனை இறந்துவிட்டது.

கதைக் கேட்டுக் கொண்டிருந்த அன்பு நபியின் தோழர்கள் அழுது விட்டார்கள்.

“என்ன கொடுமை இது? அவள் துளியும் இரக்கம் இல்லாத கல் நெஞ்சம் கொண்ட பெண்ணாக இருப்பாள் போலிருக்கிறதே!” –என்றார்கள் வேதனையுடன்.

“உண்மைதான்! அந்தப் பெண்ணின் கொடுமையைக் கண்ட இறைவன் கோபமடைந்தான்!” – என்றார்கள் நபிகளார் தமது தோழர்களிடம்.

இறைவனின் கோபம் என்பது இறைவனின் தண்டனையாகும்.

குற்றவாளிகளான கெட்டவர்களுக்கு தண்டனை கிடைக்கும் இடம் நரகம் ஆகும்.

இதைத்தான் நபிகளார் தமது தோழர்களிடம் குறிப்பிட்டுச் சொன்னார்கள்.

அந்தப் பெண் கொடுமைக்காரி மட்டுமல்ல. பொய் சொல்பவள்கூட. பாவி! இறைவனின் படைப்புகளிடம், உயிரினங்களிடம் இரக்கத்துடன் நடந்து கொள்ளாத அரக்கி! பூனையை அடித்து நன்மையை இழந்துவிட்ட அதிர்ஷடம் கெட்டவள்.

நாயிடம் இரக்கம் காட்டிய வழிப்போக்கன் இறைவனின் பேரன்பைப் பெற்றார். சொர்க்கத்துக் சென்றார்.

பூனையைக் கொடுமைப்படுத்திய பெண் இறைவனின் கோபத்தைச் சம்பாதித்துக் கொண்டாள். நரகம் சென்றாள்.


Related

குழந்தை வளர்ப்பு 6282579071708918275

Post a Comment

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress