குழந்தை வளர்ப்பு -06: 'தாகத்தால் தவித்த நாய்! தண்ணீர் புகட்டிய மனிதன்!'


நபிகளார் குழந்தைகளிடம் எப்படி நடந்து கொண்டார்கள் தெரியுமா? சக உயிர்களிடம் இரக்கம் கொள்வதை சிறார்களிடம் வார்த்தெடுக்க பல்வேறு முறைகளைக் கையாண்டார்கள்.. அதற்காக கதை வடிவிலான பல நற்போதனைகளை எடுத்துரைத்து அவற்றை குழந்தைகளுக்கு சேர்ப்பிக்க முனைந்தார்கள்.

நம்மைச் சுற்றி வாழும் சக உயிர்களான இறைவனின் படைப்புகளிடம் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ள முடியுமா? 

பூனையைக் கட்டிப் போட்டு அதற்கு உணவும், நீரும் அளிக்காமல் துன்புறுத்திய பெண் நரகவாசி என்றார்கள் நபிகளார். 

அதேபோல, தாகத்தால் தவித்த நாய்க்கு நீர் புகட்டிய ஒரே காரணத்தால், பாவங்கள் மன்னிக்கப்பட்ட மனிதனைக் குறித்தும் அன்பு நபிகளார் புகழ்ந்துரைத்துள்ளார்கள்.

அது என்ன நாய்க்கதை? பூனைக்கதை?

நபிகளார் தமது தோழர்களுக்குச் சின்ன சின்ன கதைகள் சொல்வார்கள். அந்தக் கதைகளில் பல அறிவுரைகள் இருக்கும். கதையைக் கேட்டு நபித்தோழர்கள் பாடம் பெறுவார்கள். அதைப் பின்பற்றி நடப்பார்கள். மிகச் சிறந்த மனிதர்களாக மாறுவார்கள். அவர்களைப் பின்பற்றி குழந்தைகளும் நடப்பார்கள்.

அன்றும் அப்படிதான்!

அன்பு நபி தமது தோழர்களுக்குக் கதை சொல்ல ஆரம்பித்தார்கள். கதையின் தலைப்பு, ‘தாகத்தால் தவித்த நாயும், தண்ணீர் புகட்டிய மனிதரும்’

அந்தக் கதை இதுதான்:

அது ஒரு கடுமையான கோடைகாலம். வெய்யில் கொளுத்தோ, கொளுத்து என்று கொளுத்தியது. சூரியனின் வெப்பம் பாலைவனத்தில் பட்டு கண் கூசியது. மணல் நெருப்பாய் சுட்டது. அப்படிப்பட்ட வெய்யிலில் ஒரு வழிப்போக்கர் நடந்து கொண்டிருந்தார்.

வெய்யிலின் கடுமையை அவரால் தாள முடியவில்லை. “ஆஹ்..! என்ன வெய்யில்! உஸ்… ஸ்..” – என்று முணுமுணத்தார். துணியால் முகத்தைத் துடைத்துக் கொண்டார்.

வெகு சீக்கிரத்திலேயே அவர் சோர்வடைந்து விட்டார். ஓர் அடிகூட எடுத்து வைக்க முடியவில்லை. நாக்கு வறண்டது. தாகம் உயிரை எடுத்தது.

“தாகம்..! தாகம்..!” – என்றவாறு நாக்கால் உதடுகளை ஈரமாக்கிக் கொண்டார். உடனே தண்ணீர் குடித்தாக வேண்டும். இல்லையென்றால்.. தாகத்தால் சாக வேண்டியதுதான்!” – என்று தள்ளாடியவாறே நடந்தார். அங்கும், இங்கும் தண்ணீர் தேடி அலைந்தார். வெகு சீக்கிரத்திலேயே ஒரு கிணற்றையும் கண்டார்.

கிணற்றைக் கண்டதும் அவரது முகத்தில் உற்சாகம். “அப்பாடா! உயிர் பிழைத்தேன்!” – என்று மகிழ்ச்சியுடன் ஓடினார்.

பாவம்! அவரது போதாத காலம்! அந்தக் கிணற்றில் தண்ணீர் இல்லை. கிணறு வறண்டு கிடந்தது.

மறுபடியும் தண்ணீருக்காக வழிப்போக்கர் தேடி அலைந்தார். தொலைவில் ஒரு கிணறு தெரிந்தது. அதன் அருகில் ஓடினார். ஆசையுடன் கிணற்றில் எட்டிப் பார்த்தார். அடப்பாவமே! அந்தக் கிணறும் வறண்டு கிடந்தது. வழிப்போக்கர் மீண்டும் தண்ணீரைத் தேடி அலைந்தார்.

தேடித் தேடி கடைசியில், ஒரு கிணற்றையும் கண்டு பிடித்துவிட்டார். அதில் கொஞ்சம் தண்ணீர் இருந்தது.

“அல்ஹம்துலில்லாஹ்! புகழனைத்தும் இறைவனுக்கே!” – என்று இறைவனைப் புகழ்ந்தார். நிம்மதி பெருமூச்சுவிட்டார்.

தண்ணீர் இறைவனின் அருட்கொடைகளில் முக்கியமானது. மனிதனின் உயிர்வாழும் தேவைக்கானது. அந்த அருட்கொடையை அளித்த இறைவனைப் புகழுவது நியாயம்தானே?

ஆனால், கிணற்றின் அடியிலிருந்த நீரை மொண்டு குடிக்க அவரிடம் எந்த வசதியும் இல்லை. கயிறோ, வாளியோ இல்லாமல் தண்ணீரை எப்படி மொள்ள முடியும்? சுற்றிலும் தேடிப் பார்த்தார். கயிறும் கிடைக்கவில்லை. வாளியும் இல்லை.

“ம்.. தாகம் உயிர் போகிறது. தண்ணீர் மொண்டு குடிப்பது எப்படி?” – என்று யோசிக்க ஆரம்பித்தார்.

களைப்பும், தாகமும் வாட்டின. வெய்யிலோ மண்டையைப் பிளந்துவிடும் அளவுக்கு அனலாய் பொழிந்தது.

கடைசியில், வழிப்போக்கர் ரொம்பவும் சிரமத்துடன் கிணற்றில் இறங்கினார். கொஞ்சம் உள்ளே இறங்கியதும் வெய்யிலின் கடுமை குறைந்தது. அங்கு “ஜிலு.. ஜிலு..!” – என்று ஏ.சி. அறைபோல குளிர்ச்சியாக இருந்தது.

ஒரு வழியாக அவர் தண்ணிர் மட்டத்தை அடைந்தார். இரு கரங்களால் தண்ணீரை அள்ளி எடுத்தார். தாகம் தீரக் குடித்தார். அள்ளி.. அள்ளி முகம் கழுவினார். தலை, கழுத்து என்று தண்ணீரைத் தெளித்துக் கொண்டார். மீண்டும் தாகம் தீரத் தண்ணீர் குடித்தார். அதன் பிறகுதான், அவருக்கு உடலில் தெம்பு பிறந்தது.

நீரின்றி உலகம் இல்லை. உயிர்கள் இல்லை. வாழ்க்கை இல்லை. உயிர் வாழ அவசியமான தண்ணீரை அளித்த இறைவனுக்கே எல்லாப் புகழும்!” – என்று அவர் இறைவனுக்கு நன்றி செலுத்தினார். திரும்பவும் கிணற்றிலிருந்து வெளியே வர ஆரம்பித்தார். ஒரு வழியாய் கிணற்றிலிருந்து வெளியில் வந்தும் விட்டார்.

பக்கத்தில், ஏதோ சத்தம் கேட்டது. வழிப்போக்கர் அப்படியே நின்றுவிட்டார். "சத்தம் எங்கிருந்து வருகிறது?" - என்று சுற்றும்,முற்றும் பார்த்தார்.

கிணற்றின் பக்கத்திலேயே ஒரு நாய் நின்றிருந்தது. வெய்யில் கொடுமையை அதனாலும் சமாளிக்க முடியவில்லை போலும்! நாக்கைத் தொங்கப் போட்டுத் தவித்துக் கொண்டிருந்தது. அதன் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. கிணற்றைச் சுற்றியிருந்த மணலைக் கால்களால் பிராண்டியது. மணலின் அடிப்பகுதியில் இருந்த ஈரத்தை நக்கியது. அப்படியயும் அதன் தாகம் அடங்கவில்லை. பலவீனமான குரலில் முணங்கியது.

இந்தக் காட்சியை வழிப்போக்கர் கண்டார். அவரது உள்ளம் பரிதாபத்தால் இளகிவிட்டது. “அய்யோ! பாவம்! வாயில்லா ஜீவன்! தண்ணீர் தாகத்தால் தவித்துக் கொண்டிருக்கிறது. இன்னும் கொஞ்ச நேரத்தில் தண்ணீர் கிடைக்காவிட்டால்.. நாய் நிச்சயமாக செத்துப் போகும்!” – என்று அவர் வருத்தப்பட்டார்.

நாயை இரக்கத்துடன் பார்த்தார். “கவலைப்படாதே! நான் உனக்கு தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்!”- என்றார். சொன்னதுடன் நில்லாமல் கிணற்றில் வேக வேகமாக இறங்கவும் தொடங்கினார். தாகம் நீங்கிய தெம்பும், சக உயிரைக் காக்க நினைத்த நினைப்பும் அவரை அப்படிச் செய்ய வைத்தன.


“கிணற்றில் இறங்கியாயிற்று! சரி தண்ணீரை எப்படி மொள்வது?”

கொஞ்ச நேரம் யோசித்தவருக்கு ஒரு திட்டம் உதயமானது. “அதுதான் சரி!” – என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டார். காலில் மாட்டியிருந்த தோலால் ஆன ‘சாக்ஸை – காலுறைகளைக்’ கழற்றினார். இரண்டு காலுறைகள் நிரம்பத் தண்ணீரை மொண்டார். அதன் பிறகு, அவற்றை வாயில் கவ்விக் கொண்டார். மெதுவாகக் கிணற்றிலிருந்து வெளியே வர ஆரம்பித்தார்.

அது சாதாரணமான வேலையில்லை. சாக்ஸில் நீரை மொண்டு கொண்டு அதை வாயில் கவ்விக் கொண்டு கிணற்றிலிருந்து வெளியே வர வேண்டும் அல்லவா? 

பாவம்..! அவர் ரொம்பவும் சிரமப்பட்டார். தண்ணீர் நிரம்பிய காலுறை கனத்தது. வாயும், பல்லும் வலித்தது. வழிப்போக்கரின் கண்ணில் தாகத்தால் தவிக்கும் நாய் தெரிந்தது. சிரமப்பட்டு, சிரமப்பட்டு அவர் கிணற்றிலிருந்து வெளியே வந்துவிட்டார். குனிந்து நாயின் முன் முழங்காலிட்டு அமர்ந்தார். முதல் காலுறை நீரை நாய்க்குப் புகட்டினார்.

நாய் தண்ணீரை நக்கி நக்கிக் குடிக்க ஆரம்பித்தது. உயிரைக் காத்ததற்கு அடையாளமாக நன்றி உணர்ச்சியோடு வாலை ஆட்டியது. ஒரு சொட்டு நீரையும் வைக்காமல் இரண்டு காலுறை நீரையும் நாய் குடித்து முடித்தது. அவ்வளவு தாகம் அதற்கு!

வழிப்போக்கரின் முகத்தில் புன்னகை மலர்ந்தது. நாயின் தாகத்தைப் போக்கியதால்.. ஏற்பட்ட மகிழ்ச்சி அது.

நாயின் தாகத்தைத் தீர்த்த மகிழ்ச்சியுடன் அவர் நடக்க ஆரம்பித்தார். வழிப்போக்கரின் இந்தச் செயல் இறைவனுக்குப் பிடித்துப் போனது. உயிரினமான நாயிடம் அவர் காட்டிய கருணையால் இறைவன் அவருடைய பாவங்களை மன்னித்தான். அவருக்குச் சொர்க்கம் வழங்கினான்.

அன்பு நபிகளார் கதையைச் சொல்லி முடித்தார்கள்.

அதைக் கேட்டுக்  கொண்டிருந்த தோழர்களில் ஒருவர், "இறைவனின் தூதரே! நாம் உயிரினங்களிடம் நல்லவிதமாக நடந்துக் கொண்டால், இறைவன் நம் பாவங்களை மன்னிப்பானா?” – என்று சந்தேகம் கேட்டார்.

“நிச்சயமாக! நிச்சயமாக..! உயிரினங்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்வோருக்கு இறைவன் பரிசுகள் தருகிறான்!” – என்று நபிகளார் பதிலளித்தார்கள்.

பார்த்தீர்களா குழந்தைகளே … இறைவனின் பேரருளை!

வழிப்போக்கர் ஒரு சாதாரணமான நாயிடம் இரக்கம் காட்டினார். அந்த நல்ல செயல் அவருக்குச் சொர்க்கம் பெற்றுத் தந்தது.

இனி நீங்களும் அந்த வழிப்போக்கனைப் போல இறையருளைப் பெற முயற்சிப்பீர்கள்தானே?

Related

குழந்தை வளர்ப்பு 7809849554245254758

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress