சிறுவர் தொடர்: (பகுதி 1) ரியாஸ் எழுத்தாளனாகின்றான்
http://mazalaipiriyan.blogspot.com/2012/11/1.html
மாமாவுக்கு நன்றி சொல்ல வேண்டும். அவர்தான் ரியாஸீத்தீனுக்கு எழுதக் கற்றுத் தந்தார்; அதுவும் எளிய முறையில் அவர் எப்படி சொல்லித் தருகிறார் என்பதை நீங்களே பாருங்களேன்!
எழுத ஆர்வமுள்ள ரியாஸ் முதலில் மாமா சொல்லச் சொல்ல எழுதினான்.
சிறிது நாள் இப்படியே தொடர்ந்தது.
இடையிடையே மாமா, “ரியாஸ் உனது அனுபவங்களை எழுது!” - என்பார்.
“அனுபவமா, அப்படியென்றால்.. என்ன மாமா?” – ரியாஸ் கேட்டான்.
“அதாவது உன் சம்பந்தமான ஏதாவது சம்பவம். அதில் ஒன்றை எழுது!” – என்று மாமா விளக்கினார்.
ரியாஸ் ஒரு சம்பவத்தை இப்படி எழுதலானான்:
‘ஒருநாள். அப்பா வாழைப்பழம் வாங்கி வந்தார்.
அம்மா அதில் எனக்கு ஒரு பழம் தந்தாள்.
“தோலை கண்ட இடத்தில் எறியக் கூடாது!”- என்றாள்.
நான் அம்மாவின் பேச்சைக் கேட்கவில்லை.
வாழைப்பழத்தைத் தின்று தோலை கீழே எறிந்துவிட்டேன்.
அது கிணற்றடியில் விழுந்ததைக் கவனிக்கவில்லை.
பிறகு விளையாட ஆரம்பித்தேன்.
விளையாடும் போது வாழைப்பழத் தோலை மிதித்தேன்.
சறுக்கி விழுந்தேன். சரியான அடி. வலியால் துடித்தேன். அழுதேன்.
அழும் குரலைக் கேட்டு அம்மா வந்தாள்.
“எப்படி விழுந்தாய்?” – என்று கேட்டாள்.
நான் நடந்ததைச் சொன்னேன்.
அதற்கு அம்மா, “பெரியவங்க பேச்சைக் கேட்கனும். இல்லையென்றால்.. இப்படித்தான் துன்பம் வந்துசேரும்!” – என்றாள்.
அம்மா சொன்னது உண்மை என்று புரிந்தது.
‘இனி எப்போதும் அம்மாவின் பேச்சை மீறக் கூடாது!’- என்று தீர்மானித்துக் கொண்டேன்.
இதுபோல, மாமா சிறிது நாள்வரை சொந்த அனுபவங்களை எழுதச் சொன்னார். அதுவும் சின்ன சின்ன வாக்கியங்களாக.
பிறகு ஒரு நாள் ரியாஸிடம், “இனி கண்ணால் பார்ப்பதையும் எழுதணும்!”- என்றார்.
“கண்ணால் பார்ப்பதா? புரியவில்லையே மாமா?”- ரியாஸ் சந்தேகம் கேட்டான்.
என்ன குழந்தைகளே இந்த சந்தேகம் உங்களுக்கும் வருகிறதா?
மாமா என்ன சொன்னார்? ரியாஸ் என்ன எழுதினான்?
>>>>> இறைவன் நாடினால்.. அடுத்த வாரம் பார்ப்போம்.. என்ன?
Superb, keep it up
ReplyDelete