குழந்தை வளர்ப்பு: மலர்களை வெட்டி சாய்த்த கோடாரி!
http://mazalaipiriyan.blogspot.com/2013/05/blog-post_14.html
ஸ்காட்லாண்டின் ‘டன்பிளேனின்’ 13-ஆம், நூற்றாண்டைச்
சேர்ந்த தொன்மை வாய்ந்த தேவாலயம்.
தேவாலயத்தின் ஒரு பக்கம் ‘டன்பிளேன்’ ஆரம்பப்பள்ளி,
சிறகு வெட்டப்பட்ட பறவையைப் போல, ஒடுங்கி பள்ளிக்கும் – தேவாலயத்துக்கும் இடையே பெருக்கெடுத்தோடும்
‘அலன் வாட்டர்’ நதி.
மார்ச் 13,1996. அன்று இயல்பாய்தான் பொழுது
விடிந்தது. அலைகள் ஓய்ந்த கடலின் மௌனம் போன்ற அமைதி அது.
டன்பிளேன் ஆரம்பப்பள்ளியில், அனுதினமும்
காலை ஒன்பதடிக்க பத்து நிமிடங்கள் இருக்கும்போது, காணும் காட்சி விநோதமாய் இருக்கும்.
கரையில் மோதிய அலை, கற்குவியல்களின் மீது நுங்கும்.. நுரையுமாய் விட்டுச் செல்வதைப்
போல எழுநூறு சிறுவர், சிறுமிகளைள அழைத்துவரும் பெற்றோர் அவர்களை அங்கு விட்டுச் செல்லும்
காட்சி புத்தம்-புதியதாகவே இருக்கும். அந்த அழகிய குழந்தைகளைக் கண்டால்.. வாரி அணைத்து
முத்தம் கொடுக்க வேண்டும் என்பது போல மனம் துடியாய் துடிக்கும். ‘ஹோம் – வொர்க்’ சுமையில்லை.
கண்களை உருட்டி மிரட்டும் ஆசிரியர்களின் பயம் இல்லை. குழந்தைகள் பூரண மகிழ்ச்சியுடன்
கை – கால்களை அசைத்துத் கொண்டு நடந்து செல்லும் பாங்கு காண கண்கோடி வேண்டும். அதுவும்
டன்பிளேன் பள்ளியில் மட்டுமே இந்த பிரத்யேக காட்சியைக் காணலாம்! திறமையான தோட்டக்காரன்
அழகுபடுத்தி வைத்திருக்கும் தோட்டத்தைப் போல ஒழுக்கத்திற்கு இலக்கணமாய் திகழும் அந்த
மாணாக்கரைக் கண்டால்.. மகிழ்ச்சியால் மனம் பூரிக்கும்.
மணி ஓசைக்குச் செவித்தாழ்த்தி காத்திருக்கும்
குழந்தைகள், ஒன்பது அடித்ததும் ‘டாண்’ என்று வகுப்பறையில் அமர்ந்திருப்பார்கள். அதிலும்
குறிப்பாக ‘கெவின் மேயரின்’ வகுப்பு என்றால்.. குழந்தைகளுக்குக் கொள்ளைப் பிரியம்.
சதா புன்னகைத் தவழும் நாற்பத்தி நான்கு வயதான கெவின் மேடம், அந்தப் பள்ளியில் கடந்த
பதினைந்தாண்டுகளாய் பணிபுரிபவர். குழந்தைகளின் குணநலன்களைப் புரிந்து கொள்வதில் மிகவும்
கைத்தேர்ந்தவர். பள்ளியில் புதிய குழந்தைகளைச் சேர்க்கவரும் பெற்றோர் கெவின் மேடம்
வகுப்பில் சேர்க்க கடும் போட்டிப் போடுவார்கள். தலைமை ஆசிரியர் ‘ரான் டைலரிடம்’ விண்ணப்பங்களுக்கு
மேல் விண்ணப்பங்கள் குவியும்.
அன்று காலை ஒன்பது மணி.
கெவின் மேயர் தம் வகுப்பு பிள்ளைகளை அழைத்துக்
கொண்டு, ‘ஜிம்னாஸ்டிக்’ உடற்பயிற்சி அரங்கினுள் நுழைந்தார். வகுப்பின் இருபத்தொன்பது
குழந்தைகளின் வருகைப் பதிவேட்டை வாசித்துவிட்டு பயிற்சி களத்தில் இறங்கினார்.
முதலில் முந்தைய நாள் பயிற்சிகள். அது முடிந்ததும்
புதிய பயிற்சிகள்.
முதல் நாள் பயிற்சியினை குழந்தைகள் செய்து
கொண்டிருந்தார்கள்.
கெவின் மேயரின் கண்களில் திருப்தி. “வெரிகுட்!”
– என்று தனித்தனியே குழந்தைகளின் பெயர் சொல்லி அழைத்து அவர்களின் முதுகில் தட்டிக்
கொடுத்த உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார்.
உற்சாகம் கரைபுரள குழந்தைகள் இருந்தார்கள்.
அந்த உற்சாகம், அங்கு துள்ளிக் கொண்டிருந்த மகிழ்ச்சி இவைகளுக்குத் தடையாய் கருப்புத்
தொப்பியுடன், காதுகளில் ‘இயர்மப்புடன்’ ‘அவன்’ வந்து நின்றான்.
அவனது கைக்கடிகாரம் ஒன்பது மணி முப்பத்தைந்து
நிமிடங்களைக் காட்டியது. கையில் துப்பாக்கி. மூன்றே மூன்று நிமிடங்களில் .. யூகிக்க
முடியாத சோகம்.
ஜிம்மில் கேட்ட துப்பாக்கிச் சத்தம் பள்ளி
முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது.
என்ன நடந்தது? என்று தெரியாத நிலை. ஏதோ நடக்கக்கூடாதது
நடந்து விட்டதென்று மட்டும் அனைவருக்கும் புரிந்தது.
சத்தம் போட மறந்துபோன குழந்தைகள். சத்தம்
போட்டால் என்னவாகுமோ என்ற பயத்தால்.. தத்தம் வகுப்பு அறைகளை இறுக தாழிட்டுக் கொண்ட
ஆசிரியர்கள். மேஜையின் மீது இருந்த புத்தகங்கள் சிதறுவது பற்றிக் கவலையில்லாமல் ஆசிரியர்களின்
அரவணைப்பில் மேஜைக்கடியில் பதுங்கிக் கொண்ட மாணவர்கள். பயத்தில் உறைந்து போன திகில்
நேரம் அது.
தலைமை ஆசிரியர் ‘ரான் டைலர்’ ஆரம்பத்தில்
மற்றவர்களைப் போலவே திடுக்கிட்டாலும் அதன் பிறகு சுதாரித்துக் கொண்டார். உடனே போலீஸீக்குத்
தகவல் கொடுத்தார். இதைக் கண்டு பயம் தெளிந்த மற்றொரு ஆசிரியை 999 டயல் செய்து ஆம்புலன்ஸீக்கு
போன் செய்தார்.
அடுத்த சில நிமிடங்களில், போலீஸீம், ராயல்
ஆம்புலன்ஸைச் சேர்ந்த பத்து வண்டிகளும் சிவப்பு விளக்கு – சைரன் சகிதமாய் அங்கு பறந்து
வந்து சேர்ந்தன. அதற்கு சில நிமிடம் கழித்து வான் வழி – விமான ஆம்புலன்ஸீம் வந்துவிட்டது.
அதற்குள்ளாய் ஜிம்னாஸ்டிக் அரங்கம் ரத்த
கோலமாய் மாறிப் போனது. உடலை துளைத்துச் சென்ற தோட்டாக்கள் ஜன்னல் கண்ணாடிகளையும் தூள்
தூளாக்கி விட்டிருந்தன.
திருமதி மேயரைச் சேர்க்காமல் பதினாறு குழந்தைகள்
கொல்லப்பட்டிருந்தனர். பனிரெண்டு குழந்தைகள் படுகாயமடைந்திருந்தனர்.
துப்பாக்கிச் சத்தம் கேட்டு ஓடிவந்த இரண்டு
ஆசிரியர்களுக்கும் குண்டு காயம். இருபத்தி ஒன்பது பேர் கொண்ட வகுப்பறையில் ‘ராபழி ஹார்ஸ்ட்’
என்ற ஐந்து வயது சிறுவன் மட்டுமே தப்பியிருந்தான். கொலையாளி தன்னைத் தானே சுட்டுக்
கொண்டு தற்கொலை செய்து கொண்டான்.
இதேபோன்ற ஒரு சம்பவம் அதற்கு முன் அமெரிக்காவின்
கொலராடோவைச் சேர்ந்த ‘லிஸ்டன்’ பள்ளியில் நடந்திருந்தது.
இறுக்கமான முகங்களுடன் வந்து நின்ற அந்த
மாணவர்களின் கரங்களில் தானியங்கி துப்பாக்கிகள். ஓகே.. ஸ்டார்ட்..!” – என்று கத்திக்
கொண்டே துப்பாக்கி விசையை அழுத்தியதும்தான் தாமதம், “தட்.!தட்..!!” – என்று குண்டுகள்
சீறிப் பாய்ந்து 12 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியையின் உயிரைப் பறித்துக் கொண்டன. கண்மூடித்தனமாக
சுட்ட மாணவர்கள் இருவரும் கடைசியில் தற்கொலை செய்து கொண்டனர்.
பெரியவர் – சிறியவர் என்ற பேதமில்லாமல் உலகம்
குற்றமயமாகிக் கொண்டிருக்கிறது என்பதற்கு இவை நேற்றைய உதாரணங்கள். சுற்றுச் சூழல்களின்
தாக்கம் மற்றவர்களைவிட தாக்கம் மற்றவர்களைவிட குழந்தைகளையே அதிகமாக பாதிக்கிறது. அதனால்தான்
சமீப காலத்தில் குழந்தை குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக சமூக ஆய்வாளர்கள்
கூறுகிறார்கள். வன்முறையில் ஈடுபடும் குழந்தைகளின் எண்ணிக்கை 25 விழுக்காடு அதிகரித்து
இருப்பதாக அமெரிக்காவில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மாணவர்கள்
கொடிய ஆயுதங்களுடன் பள்ளிக்கு வருவது மேற்கத்திய நாடுகளில் வெகு சகஜமாகிவருகிறது.
அமெரிக்கா போன்ற வளர்ச்சியுற்ற நாடுகளில்
இளங்குற்றவாளிகளின் எண்ணிக்கை 5 விழுக்காடுகள் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதே நிலைதான் நமது நாட்டிலும். குழந்தைகளிடையே குற்ற மனோபாவம் அதிகரித்துவருவதற்கு
சமூகச் சூழல்களே பிரதான காரணம். அதிலும் குறிப்பாக சினிமா, தொலைக்காட்சி போன்றவை குழந்தைகளின்
மனங்களைச் சிதைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன.
அமெரிக்கக் குழந்தைகள், பதினொரு வயதை அடைவதற்குள்
8 ஆயிரம் கொலைகள், ஒரு லட்சத்திற்குள் அதிகமான வன்முறைக் காட்சிகளை தொலைக்காட்சியில்
பார்ப்பதாக, ‘அமெரிக்கன் சைகாலிஜிகல் அசோசியேஷன்’ நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது. நமது
நாட்டிலும் திரைப்படங்களும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் குழந்தைகளின் மென்மைத்தனத்தைப்
போக்கி வன்மையாக்கி வருவதை மறுக்க முடியாது.
இந்தப் போக்குக்கு முடிவு கட்ட வேண்டும்.
ஆனால், இன்றைய சூழலில் இது அசாதாரணமானது. சரிந்துவரும் ஒழுக்கவிழுமியங்களே இதற்குக்
காரணம் என்கிறார்கள் சமூகவியல் வல்லுநர்கள். இந்த நிலைமை மோசமடைவதற்கு முன்னால் பெற்றோர்கள்,
ஆசிரியர், அறிஞர் பெருமக்கள் என்று முப்பரிமாணத்தில் தீர்வு காண வேண்டியது அவசியம்.
குழந்தைப் பருவம் நாற்றங்கால் பருவம் போன்று அதி முக்கியமானது.
அன்பையும், மனிதநேயத்தையும், நல்லொழுக்கத்தையும்
ஊட்டி வீரியமாக வளர்க்க வேண்டிய பருவம் இது.
சரித்திரச் சிகரங்களைத் தொட்டவர்கள் பெற்றோரின்
மடியில் இத்தகைய நற்பண்புகளுடன் வந்தவர்கள்தான்!
இந்த வன்முறை எதானால்????கல்விமுறைஎதைபோதிக்கிறது???
ReplyDelete