குழந்தை இலக்கியம் : மாங்கன்று
http://mazalaipiriyan.blogspot.com/2013/05/blog-post_15.html
ஊரிலிருந்து
தாத்தா வந்திருந்தார். வரும்போது, ஒரு மாங்கன்றை கொண்டு வந்தார்.
அடுத்த
நாள்.
பேரன்,
பேத்திகளை அருகில் அழைத்தார்.
“பிள்ளைகளே!
இந்த மாங்கன்றை நட வேண்டும். போய் மண்வெட்டி, கடப்பாறை ஆகியவற்றைக் கொண்டு வாருங்கள்!”
– என்றார்.
மாங்கன்று
நட குழி தோண்டப்பட்டது.
அடியில்
நன்றாக கிளறி மக்கிய எருவும் போடப்பட்டது. ஈரத்துணியால் சுற்றப்பட்டிருந்த மாங்கன்றை
அப்படியே கொட்டையுடன் குழியில் இறக்கிய தாத்தா மண்ணைத் தள்ளி குழியை மூடினார். செடியைச்
சுற்றி பாத்திக் கட்டினார். அதன் பின் நீர் ஊற்றினார்.
இந்த
வேலை முடிய பிற்பகலாகிவிட்டது.
வெய்யில்
கடுமையாக இருந்ததால் தாத்தாவுக்கு வியர்த்து வியர்வை கொட்டியது.
குழந்தைகள்
தாத்தாவையும், மாங்கன்றையும் மாறி மாறி பார்த்தார்கள்.
“தாத்தாவுக்கு
எப்படியும் 70 வயசுக்கு மேலிருக்கும்! இல்லையா?” – என்று தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.
அதன்
பிறகு தாத்தாவிடம் கேட்டார்கள்: “தாத்தா! வெய்யிலில் இப்படி கஷ்டப்பட்டு இந்த மாங்கன்றை
நடுகிறீர்கள். ஆனால், இது வளர்ந்து.. காய்த்துப் பலன் தரும்போது.. யார் யார் உயிரோடு
இருப்பார்களோ தெரியாது. உங்கள் உழைப்பின் பலனை உண்மையில் யாரோ அனுபவிக்கப் போகிறார்கள்.
அதற்கு இவ்வளவு சிரமப்பட்டு மாங்கன்று நட வேண்டிய அவசியம் என்ன?”
இதைக்
கேட்ட தாத்தா, ஒன்றும் பேசாமல் புன்னகைத்தார். முகம், கை – கால்களை கழுவிக் கொண்டார்.
பக்கத்திலிருந்த தென்னை மரத்தடியில் போடப்பட்டிருந்த கட்டிலில் சென்று அமர்ந்தார்.
முகம் துடைத்தவாறே, “பிள்ளைகளே! இப்படி வந்தமருங்கள்!” – என்று குழந்தைகளை அழைத்து
அருகில் அமர்த்திக் கொண்டார்.
தென்னை
மரத்தடியில் இளநீர்குலை ஒன்று பறித்து வைக்கப்பட்டிருந்தது. அதிலிருந்து இளநீர்க்காயை
வெட்டி தாத்தா ஒவ்வொருவருக்கும் கொடுத்தார்.
“ம்..
சூஃப்பர்..! வெய்யிலுக்கு என்ன இதம்?”- என்று குழந்தைகள் இளநீரை சுவைத்துப் பருகினார்கள்.
அவர்களைப்
பார்த்தவாறு தாத்தா சொன்னார்:
“பிள்ளைகளே!
நீங்கள் பருகும் இந்த இளநீர்க்காய்களை காய்த்த தென்னை மரத்தை நானோ நீங்களோ நடவில்லை.
என் சிறுவயதில் இப்படி வெய்யிலில் சிரமப்பட்டடுதான்
என் தந்தையார் தென்னங்கன்றை நட்டார். அதன் பலனை இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
ஒருவரது உழைப்பின் பலனை அனுபவிக்கும் நாம் மற்றொருவருக்காக உழைப்பதில் என்ன தவறு இருக்கிறது?”
தாத்தா
சொன்னது குழந்தைகளுக்குப் புரிந்தது.