சிறுவர் கதை:"என் தம்பிதான்!"


“யம்மா, பசிக்குது!”
“இன்னைக்கு சனிக்கிழமை. உங்கப்பா கூலி வாங்கிட்டு வருவார். வந்ததும் சமைச்சுப் போடறேன்டா ராசா. கொஞ்சம் பொறுத்துக்கோ!”
“போம்மா! நீ எப்பப் பார்த்தாலும் இப்படிதான் சொல்றே. கடைசியிலே கஞ்சி தண்ணி கொடுத்து தூங்க வச்சுடறே!’
“என்ன ராசா செய்யறது? நான் வெச்சுகிட்டா இல்லேன்றேன்?”
“பசிக்குதும்மா..! தாங்க முடியலே!”
பசி தாளாமல் ராஜா அழும்போதுதான் வெளியிலிருந்து அந்தக் குரல் கேட்டது:
“ராஜா.. ராஜா..!”
ராஜா எட்டிப் பார்த்தான். குடிசைக்கு வெளியே முஸ்தபா நின்றிருந்தான். அவன் கையில் ஒரு ‘தூக்கு’ பாத்திரம் இருந்தது.
“வாடா மசூதிக்குப் போகலாம். ரம்ஜான் ‘நோன்பு-கஞ்சி’ ஊத்துவாங்க. வாங்கிட்டு வரலாம்!”
ராஜா அம்மாவைப் பார்த்தான். அந்தப் பார்வை, ‘பசிக்குதும்மா. கஞ்சியாவது குடிக்கலாமா?”- என்று கெஞ்சுவதைப் போலிருந்தது.
அம்மாவின் கண் கலங்கியது. எதுவும் பேசாமல் அவள் ஒரு பாத்திரத்தை ராஜாவிடம் கொடுத்தாள்.
முஸ்தபாவும் – ராஜாவும் தோளில் கை போட்டுக் கொண்டு மசூதியை நோக்கிச் சென்றார்கள்.
வழியில் ராஜா கேட்டான்:
“டேய்.. முஸ்தபா! எனக்கும் கஞ்சி கிடைக்குமா?”
“ஏன் கிடைக்காது?”
“நான் இந்துவாச்சேடா!”
“இந்துன்னா உனக்குப் பசிக்காதா?”
“உம்… பசிக்கும்.. கேட்டேன்.!”
“இப்ப எனக்கும் பசி. உனக்கும் பசி. பேசாமல் வா. நான் பார்த்துக்கிறேன்.

மசூதி.
ஒரு மூலையில் பெரிய பெரிய அண்டாக்களில் நோன்பு கஞ்சி தயாராகிக் கொண்டிருந்தது. கஞ்சி வாங்க வந்த பிள்ளகைளின் இரைச்சல் காதைத் துளைத்தது.
“பசங்களா.. கத்தாம இப்படி அமைதியா வந்து லைன்ல நில்லுங்க”
ஒரு வெள்ளைத்தாடி பெரியவர் பிள்ளைகளை வரிசையாக நிற்க வைத்தார்.
வரிசையிலிருந்த ராஜா முணுமுணுத்தான்:
“டேய்.. முஸ்தபா! எனக்கு பயமாயிருக்குடா!”
“உஷ்..! பேசாம வா. நான் பார்த்துக்கிறேன்”
“இருந்தாலும் பயமா..” – ராஜா இழுத்தான்.
முஸ்தபா சட்டென்று தலையில் அணிந்திருந்த தொப்பியைக் கழற்றினான். ராஜாவின் தலையில் மாட்டி விட்டான்.
பிள்ளைகளுக்கு கஞ்சி ஊற்ற ஆரம்பித்தார்கள். வரிசை நகர்ந்தது.
ராஜாவுக்கு திக்… திக்’ என்றிருந்தது.
அண்டாவை நெருங்கியதும், கஞ்சி ஊற்றிக் கொண்டிருந்தவர் ராஜாவைப் பார்த்து, “இவன் யாரு? புதுசா..!” – என்று கேட்டார்.
“இவன் என் தம்பி!” – பின்னாலிருந்த முஸ்தபா தயங்காமல் பதில் சொன்னான்.
ராஜாவின் பாத்திரத்தில் கஞசி ஊற்றப்பட்டது. அதன்பிறகுதான் அவனால் நிம்மதியாக மூச்சுவிட முடிந்தது.மசூதிக்கு வெளியே இருவரும் வந்தார்கள். முஸ்தபா ராஜாவின் பாத்திரத்தைப் பார்த்தான்.
அவரசத்தில் கொஞ்சமாக ஊற்றியிருந்தார்கள்.
ராஜா பாத்திரத்தில் வழிந்திருந்த கஞ்சியை தொட்டுச் சுவைத்துக் கொண்டிருந்தான்.
“ராஜா..! பாத்திரத்தைத் திற!”
“ஏண்டா?”
“இன்னும் கொஞ்சம் ஊத்தறேன். அம்மாவுக்கும் கொடு. பாவம்..! அவங்களும் பசியாயில்லே இருப்பாங்க!”
முஸ்தபாவும் – ராஜாவும் புறப்பட்டார்கள். தோளில் கையைப் போட்டவாறு நடந்தார்கள்.
ராஜா கேட்டான்: “டேஸ்..! முஸ்தபா! இன்னும் எத்தனை நாள் நோன்பு கஞ்சி ஊத்துவாங்க?”
“ஒரு மாசத்துக்கு ஊத்துவாங்கடா! ஆமாம்..! ஏன் கேட்கிறே?”
“இல்லே ஒரு மாசம் கவலையில்லாம இருக்கலாம்னுதான்!”
மீண்டும் தோளில் கையைப் போட்டுக் கொண்டு அந்த சின்ன ‘மனிதர்கள்’ நடந்தார்கள்.


Related

சிறுவர் கதை 5809691192898591520

Post a Comment

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress