சிறுவர் கதை: 'ஆபத்தில் கலங்காதே!''


பூங்குழலி ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். அம்மா தினமும் அவளுக்கு மதிய உணவு ‘டிபனில்’ கட்டிக் கொடுப்பார்கள். அன்று அம்மா லேட்டாய் எழுந்தார். அதனால், உணவு கட்ட முடியவில்லை.

பிற்பகல் உணவு இடைவேளை விடப்பட்டது. பூங்குழலி வீட்டுக்கு சாப்பிடச் சென்றாள். உணவு உண்டு வேகமாய் பள்ளிக்கு திரும்பிக் கொண்டிருந்தாள். 

“பாப்பா!”

தனக்குப் பின்னால் யாரோ அழைக்கும் குரல் கேட்டது. தன்னையல்ல என்று நினைத்து நடந்தவளுக்கு மீண்டும், “பாப்பா!” – என்று அழைக்கும் சத்தம் கேட்டது. அவள் திரும்பிப் பார்த்தாள். அங்கே, ஒரு பெண் இருந்தாள். நல்ல படித்தப் பெண் போன்ற தோற்றம். அருகில் வந்தவள், “பாப்பா! இங்கே பாண்டியன் தெரு எங்கிருக்கு?” – என்று விசாரித்தாள். 

“பாண்டியன் தெருவா? அதோ அந்தப் பக்கமாய் போய் வலது புறம் திரும்பினால் அந்த தெரு வரும்” – என்று பூங்குழலி வழி சொன்னாள்.

பிற்பகலாதலால் சாலையில் நடமாட்டம் குறைவாய் இருந்தது. பேசிக் கொண்டிருந்த அந்தப் பெண் கண்ணால் ஏதோ சைகை செய்தாள். அடுத்த நிமிடம் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த வேன் பூங்குழலி அருகே வந்து நின்றது. கீழிறங்கிய டிரைவர் கதைவைத் திறந்து பூங்குழலியை உள்ளே வீசினான். எல்லாம் கண் இமைக்கும் நேரத்தில் நடந்துவிட்டது. 

திடுக்கிட்டுப் போன பூங்குழலி வேனை நோட்டம் விட்டாள். உள்ளே தன்னைப் போலவே சில சிறுமிகள் இருப்பதைக் கண்டாள். எல்லோர் முகங்களிலும் பயம் குடிகொண்டிருந்தது. அவர்கள் நடுங்கியவாறு உட்கார்ந்திருந்தார்கள்.


வேன் புறப்பட்டது. 

“அதோ..! அந்த சிறுமியைப் பார்! அழகாய் இருக்கிறாள். அவளையும் பிடித்துப் போடு!” – டிரைவரிடம் அந்தப் பெண் சொல்லிக் கொண்டிருந்தாள்.
வேன் நின்றது. பெண்ணும் இறங்கினாள். சாலையில் சென்று கொண்டிருந்த சிறுமியிடம் சென்றாள். 

பூங்குழலிக்கு பயமாக இருந்தது. அவர்கள் குழந்தைகளை கடத்தும் கும்பல் என்றும் புரிந்தது. கை – கால்களை ஊனமாக்கி பிச்சை எடுக்க வைப்பார்களோ? பயந்து என்ன லாபம்? அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது.

“மகளே! ஆபத்து சமயங்களில் பயப்படக்கூடாது! பயந்தால் ஆபத்திலிருந்து தப்பவும் முடியாது! அந்த நேரத்தில் நிதானமாய் பதட்டமில்லாமல் யோசிக்க வேண்டும். நிச்சயம் வழி பிறக்கும்; ஆபத்திலிருந்தும் தப்பி விடலாம்!” - அம்மா சொன்னது காதுகளில் ஒலித்தது.

குழந்தைகளை கடத்தும் கும்பலைச் சேர்ந்த பெண் சாலையில் நின்றிருந்தாள். 

நல்லவேளை! சாலையோரத்தில் ஒரு போலீஸ்காரரும் இருந்தார். 

வேனிலிருந்து குதித்து பூங்குழலி அவரிடம் ஓடினாள். நடந்ததைச் சொன்னாள். 

காவலர் உடனே பக்கத்திலிருந்த நாலைந்து இளைஞர்களை அழைத்தார். குழந்தைகள் கடத்தும் கும்பல் குறித்து சொல்லி அவர்களின் ஒத்துழைப்பைப் பெற்றார். 

அதற்குள் ஒருவர் பக்கத்திலிருந்த காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். 

இச்செயல்கள் அனைத்தும் மட மட வென்று நடந்தன.

கடைசியில், குழந்தைகள் கடத்தும் கும்பல், கையும் – களவுமாய் பிடிபட்டது. 

பொது மக்கள் அனைவரும் பூங்குழலியின் அறிவையும், துணிச்சலையும் பாராட்டினார்கள். காவல்துறையின் உயரதிகாரி அவளது வீரத்தைப் போற்றி சான்றிதழும் பரிசும் அளித்தார்.

பத்திரிகைளிலும் பூங்குழலியின் வீரச் செயல் செய்தியாய் வெளியானது. 

பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒரு சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார். அதில் ‘வீரச் சிறுமி’ என்ற பட்டத்தை பூங்குழலிக்கு வழங்கி சிறப்பித்தார். கூடவே ‘வீரச் சிறார்களுக்கான’ ஜனாதிபதி பதக்கத்துக்கும் பரிந்துரை செய்தார்.

ஆபத்து சமயங்களில் கலங்கி நிற்கக் கூடாது. துணிச்சலாய் செயல்பட வேண்டும்! அதனால், ஆபத்துக்களிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்! 

இது உண்மை ஆனதை பூங்குழலி அனுபவ ரீதியாய் தெரிந்து கொண்டாள். இதை அறிவுறுத்திய அம்மாவை கட்டிப் பிடித்து முத்தமும் கொடுத்தாள்.

Related

சிறுவர் கதை 7651429111078087414

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress