சிறுவர் கதை: 'பண்புகள் தந்த பாடம்'
http://mazalaipiriyan.blogspot.com/2013/12/blog-post_17.html
குணாளன் மென்மையானவன். உண்மை, நேர்மை, நாணயம் இவைகளை உயிர் எனக் கடைப்பிடிப்பவன். இந்தக் குணங்களே வெற்றி தரும் என்பதில் நம்பிக்கை உள்ளவன். சிறியவர், பெரியவர் அனைவரிடமும் அன்புடன், மரியாதையுடன் பழகுவான்.
முகிலன் வன்மைக் குணம் கொண்டவன். அடாவடி, முரட்டுத்தனம், கோபம் இவையே அவனுடைய உயிர் மூச்சு. தீய பழக்கங்கள் ஏதும் இல்லையென்றாலும் தீமை பயப்பனவற்றைத் தயங்காமல் செய்பவன். பெரியவரையே மதிக்க மாட்டான். சிறியவர் நிலை சொல்ல வேண்டுமா?
குணாளன் அடிக்கடி முகிலனிடம், "முகிலா..! முரட்டுத் தனத்தைக் கைவிட்டு விடு. அது தீமையானது. சில நேரங்களில் ஆபத்தைத் தருவது. நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்" - என்று அறிவுரை கூறுவான்.
முகிலன், "ஆங்..! மகாத்மா ஆகிவிடாதே குணா..!" - என்று கிண்டலும், கேலியும் செய்வான். நண்பனின் அறிவுரையை அலட்சியப்படுத்துவான்.
ஒருநாள் காலை. பள்ளிக்குச் செல்ல குணாளனும், முகிலனும் பேருந்தில் ஏறினார்கள். ஓட்டுநர் பேருந்தைக் கிளப்பியதும் குணாளன் ஏதோ ஞாபகம் வந்ததைப் போல சட்டை பாக்கெட் மற்றும் புத்தகப் பையைத் துழாவினான். தேடியது கிடைக்காமல் போகவே பதற்றடைந்தான். பக்கத்திலிருந்த முகிலன், "என்ன குணா..?" - என்றான்.
"அடையாள அட்டையை மறந்து விட்டேன். பயணச்சீட்டு பரிசோதகர் வந்தால் விபரீதமாகிவிடும்" - குணாளன் வருத்தத்துடன் சொன்னான்.
"அடையாள அட்டையா..? அது எப்படியிருக்கும்? அப்பா வாங்கி வந்து கொடுத்ததுதான் தெரியும். பிறகு அது எங்கே மாயமானதோ தெரியாது. அய்யாவிடம் கேட்க யாருக்குத் தைரியமிருக்கு? அவ்வளவுதான் ரூட் பஸ்ஸை மடக்கிட மாட்டோம்!"
நன்மைக்காகப் பாடுபட வேண்டிய மாணவப் பருவத்தைத் தீமைக்குத் தாரை வார்க்க முகிலன் தயாராயிருந்தான்.
குணாளனுக்கு முகிலன் கருத்தில் உடன்பாடில்லை.
வேண்டா வெறுப்பாக அவனைப் பார்த்தான். மனத்திற்குள் ஞாபக மறதியைக் கடிந்து கொண்டான்.
பேருந்து, அடுத்த பேருந்து நிறுத்தத்தில் நின்றது. உடனே பரிசோதகர்களின் குழு ஒன்று முன்-பின் வாசல்களை மறித்து கொண்டது. இறங்குவோர் அமைதியாகத் தங்கள் பயணச் சீட்டுகளைக் காட்டினர். "நன்றி சார்!" என்று அவர்களைப் பரிசோதகர்கள் அனுப்பினர்.
பாதை ஓரத்தில் வயர்லெஸ் சகிதமாக ஒரு ஜீப் நிறுத்தப்பட்டிருந்தது.
பேருந்தில் ஏறிய பரிசோதகர் குழுவினர் ஒவ்வொரு பயணியாகச் சோதிக்க ஆரம்பித்தனர். இதைக் கண்ட குணாளனுக்குத் திக்கென்றது. என்ன செய்வதென்று புரியாமல் அவன் தவித்தான். ஆனால், முகிலனோ எதையும் சட்டை செய்யாமல் அமர்ந்திருந்தான்.
இனியும் தாமதித்துப் பயனில்லை என்று தெரிந்ததும் குணாளன் பரிசோதகரை நெருங்கினான். பணிவுடன் முகமன் கூறினான். அதன் பின், "அய்யா!" என்று அழைத்து ஞாபக மறதியால் பயண அடையாள அட்டையை வீட்டில் வைத்துவிட்டு வந்ததைக் கூறி வருத்தம் தெரிவித்தான். தன் தவறுக்கு மன்னிக்கும்படி வேண்டினான். இனி எந்நாளும் அத்தகைய தவறு நிகழாதவாறு பார்த்துக் கொள்வதாக உறுதியளித்தான்.
குணாளனின் பண்பாலும், நேர்மையாலும் கவரப்பட்ட பரிசோதகர் புன்முறுவல் பூத்தார். மென்மையாக முதுகில் தட்டிக் கொடுத்து.. போய் இருக்கையில் அமரும்படிக் கூறினார்.
"நன்றி அய்யா!" - என்றவாறு குணாளன் இருக்கைக்குத் திரும்பினான்.
"தம்பி பயணச் சீட்டு?" - பரிசோதகர் முகிலனிடம் கையை நீட்டினார்.
"இல்லை!" - என்றான் முகிலன் விறைப்பாக.
"என்ன..! இல்லையா?"- முகிலனின் பதில் பரிசோதகருக்கு கோபமூட்டியது.
"ஆமாம்.. பயணச் சீட்டு இல்லை. பயண அட்டைதான் இருக்கு!" மீண்டும் அலட்சியமாகப் பதில் வந்தது.
"சரி.. பயண அட்டையை எடு!" - பரிசோதகரின் குரல் சற்றுக் கடுமையானது.
"கொண்டு வரவில்லை!"
"எழுந்திருடா..!" - பரிசோதகர் முகிலனின் கையைப் பிடித்து இழுத்தார்.
முகிலன் வழக்கம் போல சீருடை அணியாததாலும், புத்தகப் பையைக் கொண்டு வராததாலும் பரிசோதகரின் சந்தேகத்திற்கு ஆளானான். பேருந்திலிருந்து தர.. தர.. வென்று இழுத்துச் செல்லப்பட்டு ஜீப்பில் ஏற்றப்பட்டான்.
முகிலனுக்கு அவமானமாகி விட்டது.
குணாளன் ஞாபக மறதியால் பயண அடையாள அட்மையைக் கொண்டு வரவில்லை. அது தவறு என்று வருந்தி அதற்காக மன்னிப்பும் கேட்டுக் கொண்டான்.
இனிமையான பண்புகளால் பரிசோதகரின் அன்பிற்கு ஆளானான். தண்டனையின் தன்மையும் குறைந்தது.
முகிலன் வேண்டுமென்றே அலட்சியப் போக்கால் அடையாள அட்டையைக் கொண்டு வரவில்லை. பரிசோதகரின் கேள்விகளுக்கும் முறையாகப் பதில் சொல்லவில்லை. செய்த தவறை உணரவும் இல்லை. தண்டனையின் கடுமைக்கு ஆளாக வேண்டியிருந்தது.
முகிலன் சோகமாக ஜீப்பில் அமர்ந்திருந்தான். அவன் தன்னோடு படிக்கும் மாணவன்தான் என்று சாட்சி சொல்லவும், அவனுக்காக மன்னிப்புக் கேட்கவும் பேருந்தைவிட்டு குணாளன் கீழிறங்கினான்.
ஜீப்பிற்கு வெளியே நின்றிருந்த உயர் அதிகாரி முன் பணிவாக சென்று, "வணக்கமய்யா..!" - என்று பேச ஆரம்பித்தான். அவனுடைய உரையாடலின் தொடக்கத்திலேயே பணிவு பளிச்சிட்டது.