சிறுவர் கதை: 'காட்பரீஸ் சாக்லெட்'


நெடுமாறனின் கையில் இருபது ரூபாய் இருந்தது. அதைப் பார்க்கும் போதே நாக்கில் எச்சில் சுரந்தது. இருக்காதா பின்னே? இன்னும் சிறிது நேரத்தில் 'காட்பரீஸ்' சாக்லேட்டை அவன் சுவைக்கப் போறானே!

ம்... எத்தனை நாள் சேர்த்து வைச்ச காசு! அதுவும் சிறுக .. சிறுக.. நாலணாவும், எட்டணாவும் என்று! ஸ்கூலுக்குப் போகும்போது அப்பா கொடுத்த காசுதான் அது.

எட்டாம் வகுப்பில் அவனோடு படிக்கும் சக மாணவர்கள் கொஞ்சம் வித்யாசமானவர்கள். நினைத்த நேரத்தில் ஐஸ் கிரீம், சாக்லேட் என்று வாங்கி சாப்பிடுவார்கள். அதில் அவனுக்கும் ஒரு பங்கு கிடைக்கும்தான்! ஆனால், நெடுமாறனுக்கு அதில் திருப்தியில்லை. அப்பாவோ, கொத்தனார் வேலை செய்பவர். அவரது கஷ்டம் அவனுக்குத்தான் தெரியும். அதனால், அவருக்குத் தொந்திரவு தரவும் விரும்பவில்லை. அதேசமயம், காட்பரீஸ் சாக்லெட் மீதிருந்த ஆசையும் குறைவதாய் இல்லை. அதை எப்படியாவது வாங்கிச் சாப்பிட வேண்டும் என்று எடுத்த முடிவுதான் கையிலிருந்த இருபது ரூபாய்! எப்படியும் இரண்டு சாக்லெட் வாங்கலாம்.

நெடுமாறன் சாக்லெட் வாங்க ஆசையுடன் கடைக்குச் சென்று கொண்டிருந்தான். அப்போதுதான் அது நடந்தது. பக்கத்தில் ஒரு டீ கடை இருந்தது. அதன் எதிரே ஒரு நாய் நின்றிருந்தது. ஒரு சிறுவனும் அங்கே இருந்தான்.

டீ கடைகாரர் அந்த சிறுவனிடமிருந்து காசு வாங்கி ஒரு பிஸ்கட் தந்தார். பிஸ்கட் கைத்தவறி கீழே விழுந்தது. அதை எடுக்க சிறுவன் குனிந்தான். நாயும் பிஸ்கட்டைப் பார்த்துவிட்டது. "வவ்!" என்று பாய்ந்து சிறுவன் கையை கவ்வியது.

"யம்மா..!" - என்று அலறிய சிறுவன் "ஓ..!" - என்று அழ ஆரம்பித்தான். 

டீ கடையிலிருந்த யாரும் சிறுவனை கண்டு கொள்ளவில்லை. அவன் அழுது கொண்டே நடந்தான். பக்கத்திலிருந்த சர்ச்சுக்குள் நுழைந்தான்.

இப்போது நெடுமாறனுக்கு காட்பரீஸ் சாக்லெட் மறந்து போனது. நாய் கடித்த சிறுவன்தான் நினைவில் இருந்தான்.நெடுமாறன் சிறுவனைப் பின் தொடர்ந்தான். 

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடிசைவாசிகள் சர்ச்சு பக்கத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தார்கள். நாய்க் கடித்த சிறுவனை யாரும், "என்ன?", "ஏது?" என்று கேட்கவில்லை. அவரவர் வேலையில் அவர்கள் ஈடுபட்டிருந்தார்கள்.

'நாய்க்கடி விபரீதமானது. அதை அலட்சியம் செய்யக் கூடாது. கடித்த நாய் வெறி நாயாகவும் இருக்கலாம். நாயின் உமிழ் நீரில் 'ராபீஸ்' என்ற நோய்க்கிருமிகள் இருக்கும். அவை மனிதனின் உடலில் கலந்தால் நோய்த் தொற்றும். மனிதன் நாயைப் போலவே குரைத்து சாக வேண்டியதுதான். கொடுமையான நோய் அது!' - வகுப்பில் அறிவியல் ஆசிரியர் சொன்னது நினைவில் வந்தது. 

நெடுமாறன் அங்கிருந்த குடிசைவாசிகளிடம் சென்றான். நடந்ததைச் சொன்னான். சிறுவனை அருகில் அழைத்தான். கூட்டத்திலிருந்த ஒரு பெண் அவனுக்கு உதவ முன்வந்தாள்.

குளியல் சோப்பு கேட்டு வாங்கிய நெடுமாறன் பக்கத்திலிருந்த குழாய் அருகே சிறுவனை அழைத்துச் சென்றான். நீரை வேகமாக திருகி விட்டான். நாய்க்கடித்திருந்த இடத்தில் நீர்படும்படி செய்தான். காயத்தை நன்றாக சோப்பு போட்டு கழுவினான். மீண்டும் நீரைப் பீய்ச்சினான். நாய்ப்பல் பட்ட இடம் நீல நிறத்தில் கன்றிப் போயிருந்தது.

"அக்கா!! இந்த தம்பியின் அம்மா எங்கே?" - நெடுமாறன் விசாரித்தான்.

"அவங்க வேலைக்கு போயிருக்காங்கப்பா!" - என்றான் அந்தப் பெண்.

நெடுமாறன் அவளிடம், "இவனுக்கு உடனே தடுப்பூசி போடனுண்ம்கா" - என்றான்.

"அவங்கம்மா இல்யேப்பா..!" என்று இழுத்து பேசியதிலிருந்து காசு இல்லை என்பது புரிந்தது. 

இதோ இருபது ரூபாய். பக்கத்தில் இருக்கிற டாக்டர்கிட்ட தயவுசெய்து உடனே கொண்டு போங்க!" - என்று கொஞ்சமும் தயங்காமல் இருபது ரூபாய் நோட்டை நீட்டினான். 

பணத்தை வாங்கிக் கொண்ட பெண், சிறுவனை அழைத்துக் கொண்டு மருத்துவமனை நோக்கி சென்றாள். 

நெடுமாறன் மனநிறைவோடு வீடு திரும்பினான். 'காட்பரீஸ்' சாப்பிட்டதைவிட பன்மடங்கு மகிழ்ச்சி அவனுக்கு ஏற்பட்டது.




Related

சிறுவர் கதை 1871103481522507781

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress