சிறுவர் கதை:'உண்மையின் விலை!'
http://mazalaipiriyan.blogspot.com/2013/12/blog-post_6461.html
ஒரு நாள் இரவு. குமரேசன் வீட்டில் முகமூடி கொள்ளையர் நுழைந்தனர்.
"ம்.. மரியாதையாய் நகையும், பணமும் எங்கே வைத்திருக்கிறீர்கள் என்று சீக்கிரம் சொல்லுங்கள்! இல்லையென்றால், உங்களை கொன்று விடுவோம்!" - என்று குமரேசனையும், அவரது மனைவியையும் கட்டிப் போட்டு மிரட்டினார்கள்.
"எங்கள் வீட்டில் நகை, நட்டு ஒன்றுமில்லை. தயவு செய்து எங்களை விட்டு விடுங்கள்!" - என்று கணவன், மனைவி இருவரும் கெஞ்சினார்கள். கொள்ளையர் அதை நம்பவில்லை. அவ்விருவரையும் அடித்துத் துன்புறுத்தினார்கள்.
அதற்குள் குமரேசனின் மகன் பனிரெண்டு வயது வயது சேகர், தான் ஒளிந்திருந்த இடத்திலிருந்து வெளியே வந்தான். கொள்ளையரிடம் சென்றான்.
"என் அப்பா, அம்மாவை துன்புறுத்தாதீர்கள். நான் உண்மையை சொல்கிறேன். அதோ! தெரிகிறதே அந்த பீரோவின் காலில் ஒரு ரகசிய அறை இருக்கிறது. அதில் நகைகள், பணம் இருக்கின்றன. இதோ சாவி!" - என்றவாறு கட்டில் படுக்கைக்குக் கீழே இருந்து எடுத்துக் கொடுத்தான்.
"ம்.. அப்படி வா.. வழிக்கு. எங்களைப் பார்த்து இப்படித்தான் பயப்பட வேண்டும்!" - என்றான் கொள்ளையரில் ஒருவன்.
"நானொன்றும் பயப்படவில்லை!" - என்றான் கோபத்தோடு சேகர். தன்னை பயந்தாங்கொள்ளி என்று கொள்ளையன் தூற்றியது அவனை ரோஷம் கொள்ளச் செய்தது.
இதைக் கேட்டதும் கொள்ளையர்க்கு வியப்பாக இருந்தது. கொள்ளையர் தலைவன் சேகரிடம் வந்தான்.
"எங்களைப் பார்த்து பயப்படவில்லையா? அப்போது நீயும் உன் பெற்றோரைப் போல பணம் இல்லை என்று பொய் சொல்ல வேண்டியதுதானே? உண்மையை ஏன் சொன்னாய்?" - என்று கோபமுடன் அதட்டினான்.
அதற்கு சேகர், "என் பெற்றோருக்கு உண்மை, பொய் இவைகளின் விலை தெரியாது. எனக்கு நன்றாகத் தெரியும். அதனால்தான் உண்மையைச் சொன்னேன்!" - என்று அமைதியாக பதில் சொன்னான்.
"என்னது! உண்மை, பொய் இவற்றுக்குமா விலை? அப்படியானால், உண்மையின் விலை என்ன? பொய்யின் விலை என்ன?" - என்று வியப்புடன் கேட்டான் கொள்ளையன்.
சற்றும் தயங்காமல் சேகர் சொன்னான்: "உண்மையின் விலை என் தாய், தந்தையரின் உயிர். பொய்யின் விலையோ சிறிது நகையும், கொஞ்சம் பணமும் ஆகும். இவை மீண்டும் சம்பாதித்துக் கொள்ள கூடிய மலிவானவை. ஆனால், என் தாய், தந்தையரின் உயிரோ விலை மதிப்பில்லாதது. போனால், திரும்பவும் பெற முடியாதது!"
சேகரின் பதில் கொள்ளையரை சிந்திக்க வைத்தது. சற்று நேரம் மௌனம் சாதித்தவர்கள், சேகரின் உண்மையை உரைக்கும் பண்பால் கவரப்பட்டார்கள். மனம் மாறிய அவர்கள் கொள்ளையடித்தப் பொருட்களை அங்கேயே போட்டுவிட்டு சென்று விட்டார்கள்.
உண்மையின் விலை எப்போதும் விலை மதிப்பிட முடியாதது.