சாந்திவனத்து கதைகள்: 'உண்மையே வெற்றியைத் தரும்'



முதுமை! இது எல்லோருக்கும் ஏற்படும் ஒரு வழக்கமான நிகழ்வுதான்!

சாந்திவனத்து சிங்கராஜாவுக்கு வயதாகிவிட்டது. தனக்கு பின் நல்ல அரசன் அந்த வனத்துக்கு கிடைக்க வேண்டுமே என்ற கவலையும் அதைப் பற்றிக் கொண்டது. 

யானை போன்ற விங்குகளுக்கு உணவு கிடைக்காமல் காடுகளைவிட்டு  மக்கள் வசிப்பிடங்களுக்கு அவை அத்துமீறி சென்று கொண்டிருந்தன. இது போதாதென்று இந்த புலிப்பயல்கூட வசிப்பிடங்களில் நுழைந்து அட்டூழியங்களைப் புரிந்து கொண்டிருந்து. உணவுப் பற்றாக்குறை. இடப்பற்றாக்குறை என்று நிறைய பிரச்னைகள்! காடு சிறுத்துக் கொண்டிருந்தது. இவற்றையெல்லாம் சமாளித்து தனது பிரஜைகளை நலமுடன் வைத்துக் கொள்ளும் தலைமை என்பது சாதாரணமானதல்ல. அதேபோல வாரிசுரிமையும் வரக்கூடாது. 

தனது மக்களைப் பற்றிய கவலையால் சிங்கம் நீண்ட நேரம் யோசனையில் ஆழ்ந்துவிட்டது. கடைசியில், ஒரு திட்டத்தை செயல்படுத்த முடிவெடுத்தது.

அடுத்த நாள். 

சாந்திவனத்தின் மக்களவையைக் கூட்டியது.

விண்ணுயர வளர்ந்திருந்த ஆலமரத்திடம் வந்து திரண்டு நின்ற விலங்குகளிடம் சிங்கம் சொல்ல ஆரம்பித்தது: "எனதருமை மக்களே! எனக்கு வயதாகி வருவதால், உங்கள் நலத்தை என்னால் சரியாக பராமரிக்க முடியாமல் போய்விடுமோ என்ற அச்சமாக உள்ளது. அந்த கவலையால்தான் இங்கு உங்களைக் கூட்டியுள்ளேன்!"

சாந்திவனத்து எல்லா உயிரினங்களும் தங்கள் அரசர் சொல்வதை அமைதியுடன் கேட்கலாயின.

"இளைஞர்களே! உங்களில் யாருக்கெல்லாம் சாந்திவனத்தின் அரசராக வேண்டும் என்று விருப்பம் இருக்கிறதோ அவர்கள் எல்லோரும் முன்வரலாம்!" - என்று சிங்கம் அழைத்தது.

தயங்கி நின்ற ஒட்கச் சிவிங்கியை வரிக்குதிரை முன்னுக்குத் தள்ளிவிட்டது. "நீண்ட கழுத்து உனக்கு. நீதான் அரசருக்கு தகுதியானவன்! - என்றது முணுமுணுப்போடு.

எப்போது சமயம் வரும் என்று காத்திருந்த குள்ளநரி ஒரே பாய்ச்சலாய் முன்னால் வந்து நின்று கொண்டது.

இப்படி யானை, கரடி என்று ஏக இளைஞர் பட்டாளம் அரசராக விருப்பம் தெரிவித்து முன்னுக்கு வந்து நின்றன.

கடைசியாக தயங்கி.. தயங்கியவாறு அந்த வெள்ளைச் சிங்கக் குட்டி முன்வரிசைக்கு வந்தது. அடக்கத்துடன் நின்றது.

சிங்கம் பக்கத்திலிருந்த கூடையிலிருந்து விதைகளை எடுத்தது. அரசராக விருப்பம் தெரிவித்து அங்கு நின்றிருந்த எல்லா இளம் விலங்குகளிடமும் ஒவ்வொன்றாக தர ஆரம்பித்தது.

"இளைஞர்களே! நன்றாக கேட்டுக் கொள்ளுங்கள். இதோ நான் உங்களிடம் அளித்துள்ள விதைகள் பிரத்யேகமானவை! காணக் கிடைக்காதவை! வருங்காலத்தில் நம் வனத்துக்கு நன்மை விளைவிக்க இருப்பவை. அதனால், இவற்றை கண்ணும் கருத்துமாக ஒரு தொட்டியில் நட்டு வளர்த்து வாருங்கள். அடுத்த ஆறு மாதங்கள் கழித்து மீண்டும் நீங்கள் எல்லோரும் இங்கே திரும்பி வர வேண்டும். அப்போது, உங்களில் யாருடைய செடி செழிப்புடன் வளர்ந்து நிற்கிறதோ அவர்கள்தான் எனது வாரிசு என்று அன்று நான் அறிவிப்பேன்!" - என்றது சிங்கம்.

"விந்தையான பந்தயம் இது!" - என்று முணு முணுத்தவாறு எல்லா விலங்குகளும் அங்கிருந்து கலைந்த சென்றன.

சிங்க ராஜா கொடுத்த விதையை வீட்டுக்கு கொண்டு சென்றது வெள்ளைச் சிங்கம். அம்மாவின் யோசனைபடி ஆற்று மணல் மற்றும் இயற்கை உரமான 'மண் புழு உரத்தை' கலந்து கலவையாக்கியது. அதை சிரத்தையுடன் ஒரு மண் தொட்டியில் போட்டு விதையை நட்டது. வெய்யில் படும் விதமாக வைத்து தண்ணீர் ஊற்றி வந்தது.

ஒரு வாரம் கழிந்திருக்கும். தொட்டியில் நட்ட விதையில் எந்த அசைவும் இல்லை. இரண்டு வாரங்கள்.. மூன்று வாரங்கள்.. என்று நாட்கள் சென்று கொண்டிருந்தன. விதை முளைக்கவே இல்லை. ஆனால், போட்டியில் கலந்து கொண்ட மற்ற விலங்குகளின் விதைகள் நன்கு முளைத்து செழிப்பாக வளர்ந்திருந்தன.

வெள்ளைச் சிங்கத்துக்கு கவலை சூழ்ந்து கொள்ள இனி தான் அரசனாக தேர்வு பெறுவதற்கான வாய்ப்பே இல்லை என்று மனம் நொந்து கொண்டது.

இப்படி ஆறு மாதங்கள் கழிந்திருக்கும்.

குறிப்பிட்ட நாள் வந்தது. அரசராகும் போட்டியில் பங்குக்  கொண்ட விலங்குகள் அனைத்தும் தத்தமது தொட்டிகளுடன் அரசபைக்குச் சென்றன. அரசர் முன் தொட்டிகளை வைத்து பணிவுடன் நின்றன.

வெள்ளைச்சிங்கம் அரசவைக்கு செல்ல மாட்டேன் என்று அடம் பிடித்து நிற்க அதனுடைய அம்மா, "மகனே! நீ கண்டிப்பாக செல்லதான் வேண்டும்! நடந்ததை நடந்தபடியே அரசரிடம் சொல்லிவிடு! நேர்மையோடு நடந்து கொள்!" - என்று அறிவுறுத்த வெறும் தொட்டியுடன் அது அரண்மனைக்கு சென்றது.

சிங்க ராஜாவும் வந்தது. எல்லா தொட்டிகளையும் பார்வையிட்டது. "நல்ல முயற்சி! உங்கள் முயற்சிக்கு இன்று நிச்சயம் விடை கிடைக்கத்தான் போகிறது!"- என்றும் சொன்னது.

என்ன நடக்குமோ என்ற பயத்துடன் வெள்ளைச் சிங்கம் மற்ற விலங்குகளுக்குப் பின்னால் சென்று பதுங்கிக் கொண்டது.

ஒன்றும் முளைக்காமலிருந்த தொட்டியிடம் வந்து நின்ற சிங்க ராஜா, "இது யாருடையது?" - என்று கேட்கவும் செய்தது.

எல்லா விலங்குகளும், கிண்டலாக, "இந்த வெள்ளையனுடையது.. அரசே! இதோ இவர்தான் தன் செடியை வானுயர வளர்த்து பெரிதாக்கியுள்ளார்!" - என்று கிண்டல் அடிக்க ஆரம்பித்தன. வெள்ளைச் சிங்கத்தைப் பிடித்து முன்னுக்குத் தள்ளியும் விட்டன.

'இனி தொலைந்தோம்!'- என்று வெள்ளைச் சிங்கம் நினைத்தது. நடுக்கத்துடன் நின்றது.

அருகில் வந்த சிங்கம், "ம்.. பெயரென்ன?" - என்று சற்று அதட்டலாகக் கேட்டது.

வெள்ளைச் சிங்கம், பயத்துடனேயே, "வெள்ளையன்!" - என்றது.

"கேட்கவில்லை! சத்தமாக சொல்..!" என்று சிங்க ராஜா அதட்ட, மற்ற விலங்குகள், கேலியாக.. "வெள்ளையன்.. வெள்ளையன்!" - என்றன சத்தத்துடன்.


"ஆம்.. வெள்ளையன்தான் இனி சாந்திவனத்தின் அரசர். இனி அவரை அரசே என்றுதான் மரியாதையுடன் அழைக்க வேண்டும்!" - என்று சிங்க ராஜா ஓர் கர்ஜனையுடன் தொடர்ந்து சொல்லலாயிற்கு:

"ஆறு மாதங்களுக்கு முன் நான் உங்கள் அனைவரிடமும் விதைகளைக் கொடுத்து அவற்றை நட்டு வளர்த்துக் காட்டுங்கள் என்று சொன்னேன். நமது பெருமதிப்புக்குரிய வெள்ளை ராஜாவைத் தவிர மற்றவர்கள் எல்லாம் பழச் செடிகளாகவும், பூச்செடிகளாகவும் அவற்றை வளர்த்துக் கொண்டு வந்துள்ளனர்.

ஆனால், நான் தந்த விதைகள் முளைக்கும் திறனில்லாதவை. கொதிநீரில் நன்றாக வேக வைத்து எடுக்கப்பட்டவை என்பதே உண்மை. அந்த விதைகள் முளைக்காததால் அவற்றுக்கு பதிலாக வேறு விதைகள் நட்டு வளர்த்த செடிகள்தான் இதோ இவை.

வெள்ளையன் மட்டும்தான் உண்மையாக நடந்து, நேர்மையுடன் ஒப்புக் கொள்ளவும் செய்தது. இத்தகையவர்தான் ஒரு தலைவராக முடியும். சாந்திவனத்தின் பொருத்தமானன அரசராகவும் இருக்க முடியும்!" - என்றவாறு வெள்ளைச் சிங்கத்திடம் சாந்திவனத்தின் பொறுப்புகளை ஒப்படைத்து முதிய சிங்கம்.

  •  உண்மை நன்மைக்கு வழிகோலும்; நன்மையோ அமைதியும், இன்பத்தையும் கொண்டு வந்து சேர்க்கும். 
  • அதுபோலவே, பொய் தீமைக்கு வழிவகுக்கும். தீமையோ துன்பத் துயரங்களையே நிரந்தரமாய் தரும்.

  













Related

சாந்திவனத்து கதைகள் 2069540770316240860

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress