அறிவமுது: 'மைசூர் மை'
http://mazalaipiriyan.blogspot.com/2014/03/blog-post_10.html
கருப்பு, சிவப்பு, நீலம் ஆகிய நிற மைகளைத்தான் கேள்விப்பட்டிருப்போம். அது என்ன 'மைசூர் மை'?
தேர்தல் வாக்குப்பதிவின் போது, வாக்காளர்களின் விரல் நுனியில் வைக்கப்படும் அழியாத மைதான் 'மைசூர் மை' எனப்படுகிறது. இது கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள 'மைசூர் பெயிண்ட்ஸ் அண்ட் வார்னீஷ் லிமிடெட்' அதாவது சுருக்கமாக எம்.பி.வி.எல். நிறுவனம் தயாரிக்கிறது.
16-வது, மக்களவைத் தேர்தல் வருகிற ஏப்ரல் 7-ல், தொடங்கி 9 கட்டங்களாக நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் நாடுமுழுவதும் 81.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாக்காளர் தனது வாக்கைப் பதிவு செய்ததை உறுதி செய்யும் வகையில் விரல் நுனியில் கையிட்டு அடையாளப்படுத்துவது நடைமுறை. விரலில் வைக்கப்படும் மை உடனடியாக உலர்ந்து, அழியாமல் இருக்கும் வகையில் இந்த மை தயாரிக்கப்படுகிறது.
நமது நாட்டில் இதுபோன்ற மையை 'மைசூர் பெயிண்ட்ஸ் அண்ட் வார்னீஷ் லிமிடெட்' - எம்.பி.வி.எல். நிறுவனம் மட்டுமே தயாரிக்கிறது. 1962-ம், ஆண்டு முதல் நடைபெறும் மக்களவை, சட்டமன்றத் தேர்தல்களில் இந்த நிறுவனம் தயாரிக்கும் மை மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வாக்களார் விரல்களில் இடப்படும் 'மை' 48 மணி நேரம்வரை அழியாமல் இருக்கும்.
கர்நாடக அரசுக்குச் சொந்தமான இந்த நிறுவனம் கடந்த 2009-ம், ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் பயன்படுத்துவதற்காக 19.4 லட்சம் மை குப்பிகளை அளித்தது. வரவிருக்கும் மக்களவைத் தேர்தல்களுக்காக 21.65 லட்சம் மை குப்பிகள் தேவைப்படுகின்றன.
நாட்டில் அதிக மக்களவைத் தொகுதிகள் கொண்ட உத்திரபிரதேச மாநிலத்திற்கு 3.2 லட்சம் மை குப்பிகளும், மகாராட்டிரம், ஆந்திர மாநிலங்களுக்கு தலா 2 லட்சம் மை குப்பிகளும் தேவைப்படுகின்றன.
1937-ல், கிருஷ்ண உடையாரால், 'மைசூர் லாக் பேக்டரி' என்ற பெயரில் இந்த நிறுவனம் துவக்கப்பட்டது. ஆரம்பத்தில் 'லாக் பிசின்' மூலம் தேர்தல் ஆணையம் மற்றும் அஞ்சல் துறையினர் பயன்படுத்தும் 'சீல் மெழுகு' தயாரிக்கப்பட்டது.
1962-ல், தேர்தல் ஆணையம், தேசிய மேம்பாட்டுக் கழகத்துடன் (என்.ஆர்.டி.சி) செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி அழிக்க முடியாத மை தயாரிப்பில் ஈடுபடத் தொடங்கியது.
என்.ஆர்.டி.சி. நேஷனல் பிசிகல் லெபாரட்டரி அளித்த அறிவியல் செய்முறைப்படி இந்த நிறுவனத்தில் அழியாத மை தயாரிக்கப்படுகிறது.
மைசூர் மை ஆறு மாதங்கள்வரை வைத்து பயன்படுத்தலாம்.