சாந்திவனத்து கதைகள்: 'கோழிகளின் இறுதி ஆசை!'
http://mazalaipiriyan.blogspot.com/2014/04/blog-post.html
சாந்திவனத்தில் ஒரு குள்ளநரி இருந்தது. பொல்லாத நரி அது. வனசட்டங்கள் எதற்கும் அது கட்டுப்படுவதில்லை. அதனால் சாந்திவன ராஜாவான சிங்கம் அதை கைது செய்யும்படி ‘சிறுத்தை’ காவலர்களுக்கு கட்டளைப் பிறப்பித்திருந்தது.
கைதாகாமல் இருக்க குள்ளநரி அடர்ந்த காட்டுக்குள் போகாமல் எல்லை யோரத்திலேயே தலைமறைவாக வசித்து வந்தது. அந்தப் பக்கமாக வரும் சிறு சிறு மிருகங்களை ஏமாற்றிப் பிடித்து உணவாக்கிக் கொண்டது.
ஒருநாள்.
சாந்திவனத்தின் பக்கத்தில் இருந்த கிராமத்திலிருந்து சில கோழிகள் வழிதவறி காட்டின் எல்லைவரை வந்துவிட்டன.
இதை குள்ளநரி பார்த்துவிட்டது. “ஆஹா..! சரியான வேட்டை! இனி ஒரு வாரத்திற்கு கவலையில்லை. அவசரப்பட்டால் எல்லாம் பாழாகிவிடும். ஒன்றைக்கூட விடாமல் எல்லாக் கோழிகளையும் பிடித்துவிட வேண்டும்!”- என்று சொல்லிக் கொண்டது.
அப்பாவியாய் கோழிகள் முன் வந்து நின்று ‘ஹாய் பிரண்ட்ஸ்!” – என்று வாழ்த்துக்கள் சொன்னது.
குள்ளநரியைப் பார்த்ததும் கோழிகளுக்கு பேச்சு - மூச்சு வரவில்லை. ‘இனி அவ்வளவுதான் தொலைந்தோம்!’- என்று பயத்தால் உறைந்து நின்றன.
“ஒன்றும் பயப்படவேண்டாம்! சகோதர, சகோதரிகளே! நான் அசைவத்திலிருந்து சைவமாகி நீண்ட நாட்களாகிவிட்டன. அதனால்தான், காட்டைவிட்டு இப்படி ஒதுங்கி வாழ்கிறேன்!” – என்று நம்பிக்கை ஊட்டுவதைப்போல பேசிக் கொண்டே குள்ளநரி, கோழிகளுக்கு அருகில் வந்தது. ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து சில கோழிகளைப் பிடித்துக் கொண்டது. சில கோழிகளை கால்களில் போட்டு மிதித்துக் கொண்டது. “யாராவது தப்பிக்கப் பார்த்தீர்கள் உங்கள் நிலைமையும் இதுதான்!” - என்று மற்ற கோழிகளை மிரட்ட ஆரம்பித்தது.
ஏற்கனவே பயத்தில் இருந்த கோழிகளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவை நடுக்கத்துடன் நின்றன.
கோழிகளில் இருந்த ஒரு முதிய கோழி மற்ற கோழிகளைப் பார்த்து ஆறுதல் சொன்னது: “பயப்படாமல் அமைதியாக இருங்கள்.. இதோ நான் சொல்வது போல் செய்யுங்கள்!”- என்று தனது திட்டத்தை கோழிகளின் காதுகளில் கிசுகிசுத்தது.
கோழிகளில் ஒன்று நரியின் முன் வந்து நின்றது. “நரியாரே! இனி தப்பிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆனால், இளகிய மனது கொண்ட தாங்கள் எங்களின் இறுதி ஆசையை நிறைவேற்றுவீர்கள் என்று நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது?” – என்றது.
“இறுதி ஆசையா.. அது என்ன?” – என்றது நரி.
“ஒன்றுமில்லை நரியாரே! கடைசி முறையாக நாங்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு நிமிடம் பிரார்த்தனை செய்ய தாங்கள் அனுமதிக்க வேண்டும்!” – என்றது மெதுவாக.
“இவ்வளவு தானா? சரி.. சரி.. செய்து கொள்ளுங்கள். என் பாவங்களையும் மன்னிக்கும்படி உங்கள் பிரார்த்தனையில் சேர்த்துக் கொள்ளுங்கள்!” – என்றது நரி கிண்டலுடன்.
கோழிகள் அனைத்தும் ஒரே குரலில், ‘கொக்..கொக்..கொக்ரகோ..கொக்..!” என்று பலமாய் கத்த ஆரம்பித்தன.
அந்தக் குரல், ஆபத்து காலத்தில் கோழிகள் எழுப்பும் குரலாகும்.
கோழிகளை காணாமல் தேடிக் கொண்டிருந்த விவசாயியின் காதுகளில் இந்தக் குரல் கேட்டது.
கோழிகளுக்கு ஏதோ ஆபத்து என்று தெரிந்து கொண்ட விவசாயி, பெரிய கழிகளுடன் இரண்டு மூன்று பேரை துணைக்கு அழைத்துக் கொண்டார். அவர்கள் சத்தம் வந்த திசையை நோக்கி ஓடினார்கள்.
கோழிகள் குள்ளநரியிடம் சிக்கிக் கொண்டிருப்பதைக் விவசாயிகள் கண்டார்கள். குள்ளநரியை அவர்கள் சுற்றி நின்று கழிகளால் நையப் புடைத்தார்கள். அடி வாங்கிய நரி செத்தோம் பிழைத்தோம் என்று தலைத் தெறிக்க காட்டுக்குள் ஒடி மறைந்தது.
உயிர்பிழைத்த கோழிகள் அனைத்தும் ஆலோசனை சொன்ன கோழியைக் கட்டிப் பிடித்து நன்றி தெரிவித்துக் கொண்டன. வருங்காலத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் முடிவெடுத்தன.
ஆபத்துக் காலங்களில் கலங்கி நிற்பதைவிட விவேகமாக செயல்படுவதே நம்மைக் காத்துக் கொள்ள பெரிதும் உதவும்.