கப்பல் கவிழ்ந்தது.. குடிசை எரிந்தது..
http://mazalaipiriyan.blogspot.com/2012/11/blog-post_20.html
கடலில் சென்று கொண்டிருந்தது ஒரு கப்பல்.
திடீரென்று அது விபத்துக்குள்ளானது.
அந்த விபத்தில் ஒரே ஒரு பயணி மட்டுமே உயிர் தப்பிப் பிழைத்தார்.
கடலில் மிதந்த கட்டை ஒன்றை பிடித்துக் கொண்டு அவர் கரையை நோக்கி நீந்தினார்.
"கடவுளே.. காப்பாற்று..!" - என்று பிரார்த்தித்தவாறு நீந்தி கரையையும் அடைந்தார்.
அவர் கரையேறியது மக்கள் நடமாட்டம் இல்லாத ஒரு தீவு.
தனது நிலையை எண்ணி அவர் வருந்தினார்.
இனி என்ன செய்வது என்று புரியாமல் விழித்தார்.
பிறகு கடவுள் விட்ட வழி என்றவாறு தங்குவதற்கு ஒரு குடிசையைக் கட்டினார்.
இப்படியே நாட்கள் சென்றன.
ஒருநாள் அவர் தீவில் உணவு தேடிச் சென்றிருந்தார்.
வீட்டுக்குத் திரும்பி வந்த அவர் அதிர்ந்து போனார். அவரது குடிசை தீப்பிடித்து முற்றிலும் எரிந்து நாசமாகிவிட்டிருந்தது.
இதயம் சுக்கல் சுக்கலாகி அவர் சோகத்தில் அழ ஆரம்பித்தார்.
கடவுளே! உனக்கு இப்படி செய்ய எப்படி மனம் வந்ததோ! - அழுது புலம்பினார்.
கடைசியில் அவர் மயங்கி விழுந்து விட்டார்
.அடுத்த நாள் பொழுது விடிந்தது. ஏதோ சத்தம் கேட்டு கண் விழித்தார்
கரைக்கு அருகில் ஒரு கப்பல் நின்றிருந்தது. அதிலிருந்து சிலர் படகில் கரையை நோக்கி வந்துகொண்டிருந்தார்கள்.
அவர்கள் கடலோரக் கப்பல் படையின் மீட்புக் குழுவினர்.
"நான் இங்கிருந்தது உங்களுக்கு எப்படி தெரிந்தது?" - காப்பாற்ற வந்தவர்களிடம் அவர் கேட்டார்.
"நீங்கள் மூட்டிய தீ மூட்டத்தின் புகையைக் கண்டோம். உடனே காப்பாற்ற வந்தோம்!" - என்றனர் மீட்புக்குழுவினர்.
அதைக் கேட்டதும் தீவில் சிக்கிக் கொண்டவர், "கடவுளே! உன் கருணையே கருணை! ஒரு கெட்டதிலும் நல்லது வைத்திருக்கின்றாயே!" - என்று அவர் இறைவனைப் புகழ்ந்தார்.
அடுத்தமுறை அந்த சிறு குடிசை எரிந்ததைப் போல உங்களது மகிழ்ச்சிகள் குலைந்து போனால்...மனம் உடைந்து விடாதீர்கள். நிச்சயம் அதற்குப் பின்னால் ஆபத்தில் சிக்கியிருந்த அந்தப் பயணியை மீட்டெடுத்த கப்பலைப் போல உங்களுக்கும் மற்றொரு வாழ்க்கை இருக்கிறது.. நம்பிக்கை இழக்காதீர்கள்.