ஈடுபாடு என்பது என்ன?
http://mazalaipiriyan.blogspot.com/2012/11/blog-post_22.html
எங்கள் நிறுவனத்தில் பணி தொடங்குவதற்கு முன்பாக தரக்கொள்கை சம்பந்தமான ஓர் உறுதிமொழியை வாசிப்பார்கள்.
- நமது நிறுவனம் அளிக்கும் பொருட்கள்,அவை சார்ந்த சேவைகள் மூலமாக வாடிக்கையாளரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி அவர்கள் மனநிறைவு அடையும்படிச் செய்வதே நமது தரக்கொள்கையின் குறிக்கோள்.
- இந்தக் குறிக்கோளை அடைவதற்கு நமது தரக்கொள்கை, நாம் உருவாக்கும் பொருள்களிலும், அவை சார்ந்த சேவைகளிலும் வெளிப்படும் வகையில் முன்னேற்றங்களைத் தொடர்ந்து செய்தல்.
- நமது நிறுவனத்தில் பணிபுரிபவர்களின் அறிவையும், திறமையும் அவரவர் பணித் தேவைக்கேற்ப மேம்படுத்தி தர உயர்வுக்குச் செயலாற்றும் ஆக்கத்திறனை வளர்த்தல்.
- நமது நிறுவனத்திற்குப் பொருள்களை வழங்குவர்களிடம், தரநியமங்களை எட்டுவதில் தொடர்ந்து முன்னேற ஆழ்ந்த ஈடுபாட்டினைத் தூண்டுதல்.
இந்த வாசகங்கள் பொறிக்கப்பட்ட பலகை முன் நின்று உரக்க வாசித்தவாறு உறுதிமொழி ஏற்போம்.
ஒருநாள். தற்செயலாக இந்த உறுதிமொழிப் பலகையை ஏதோ காரணங்களுக்காக கழற்றிவிட்டிருந்தார்கள்.
காலையில் வழக்கம் போல உறுதிமொழி ஏற்பதற்காக அதிகாரிகள், பணியாளர்கள் அனைவரும் குழுமிவிட்டார்கள். அங்கு வாசிப்பதற்கு பலகை இல்லாததைக் கண்டு எல்லோரும் கையைப் பிசைந்து கொண்டிருந்த நேரத்தில் அங்கிருந்த பணியாளர் ஒருவர் முன்வந்தார். மட மடவென்று மனப்பாடமாக உறுதிமொழியை வாசிக்கத் தொடங்கினார்.
பலகையைப் பார்த்து எந்திரத்தனமாக வாசிக்கும் போக்கிலிருந்து விலகி உணர்வுபூர்வமாக வெளிப்பட்டன அவரது வார்த்தைகள். வாசி முடித்ததும் எல்லோரும் கைத்தட்டினார்கள். கைக்குலுக்கிப் பாராட்டவும் செய்தார்கள். அவர் அதையெல்லாம் கண்டுக் கொள்ளவில்லை. இப்படி சொன்னார்:
"நிறுவனத்தின் கோட்பாடான இந்த பத்து வரிகளைக்கூட மனப்பாடம் செய்யாவிட்டால் எப்படி?"
இதுதான் ஆங்கிலத்தில் 'இன்வால்வ்மெண்ட் - ஈடுபாடு' என்று சொல்லப்படுகிறது. செய்யும் பணி எதுவாயினும் அதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளல்.
இன்னொரு உதாரணம். புதிதாகப் பணியில் சேர்ந்த அந்த இளம் பணியாளர் எப்போதும் சும்மா இருப்பதில்லை. தனக்குக் கிடைக்கும் நேரத்தில் அடுத்த பணியாளரை அணுகி அவரது பணி குறித்து கேட்டுத் தெரிந்த கொள்வார். அவரது கண்காணிப்பில் இயந்திரங்களை ஓட்டவும் செய்வார். நாளடைவில் எந்தப் பணியானாலும் தெரியாது என்று சொல்லாமல் மிகவும் நேர்த்தியாக முடிக்கும் திறன் பெற்றுவிட்டார்.
""தனக்கு எதற்கு?"" - என்று கேட்காத ஈடுபாடு இது.
அடுத்து.. அந்த இளைஞர் செய்த வேலை முக்கியமானது.
அந்தப் பகுதியில் இயங்கும் அனைத்து எந்திரங்களில் பயன்படும் 'கட்டிங் டுல்ஸ்' எனப்படும் வெட்டுமானக் கருவிகளின் விலைப்பட்டியலைத் திரட்டினார். அதை அந்தந்த எந்திரங்களின் பக்கத்தில் தொங்கவிட்டார்.
தாம் அன்றாடம் பயன்படுத்தும் வெட்டுமானக் கருவிகளின் விலை இவ்வளவா? என்று வியப்புத் தெரிவித்தனர் எந்திரங்களில் பணியாற்றும் பணயாளர்கள். அதன் விளைவு கவனமாக பயன்படுத்த ஆரம்பித்தல்.. விரயம் தவிர்த்தல் ஆகியவை நடந்தன. கடைசியில் உற்பத்திப் பொருளின் தரம் உயர்ந்தது.
உண்மையில், ஈடுபாடு என்பது வெற்றியாகும். அதற்கான இழப்புகள் ஏராளமாக இருந்தாலும் தனிநபரும், சமூகமும் அடையும் நன்மைகள் அளப்பரியவை.
ஒரு கைதேர்ந்த சிற்பி கல்லுக்குள் உயிருடன் நுழைந்து கை, கால், மூக்கு என்று உயிர்பிக்கும் வித்தை அது. கடைசியில், சிலையின் கண் திறக்கும் அந்த கடைசி நேரத்தில் தனது உயிர் போகும் என்று மூதாதையரின் மூட நம்பிக்கை சொன்னாலும் அதைப்பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல் கல்லுக்குள் ஜீவனைச் செலுத்தும் கலைஞனின் வெற்றி அது.