சிறுவர் கதை: "சுமைகள்"
http://mazalaipiriyan.blogspot.com/2012/11/blog-post_3.html
"டேய்... தூங்கு மூஞ்சி.! ஆறு மணியாகப் போகுது. எழுந்து படிடா!"
பாபு அலறியடித்துக் கொண்டு எழுந்தான். அம்மா அறைந்த இடம் சுரீர் என்று வலித்தது. முதுகைத் தேய்த்து விட்டுக் கொண்டான்.
என்ன அருமையான கனவு!
இரண்டு இறக்கைகள் கொண்ட தேவதை. கையில் மந்திரக் கோல். அதை அசைத்ததும் அழகழகான பட்டாம் பூச்சிகள் பறந்தன. இன்னொரு முறை அசைத்தபோது, வெள்ளை வெளேர் முயல்கள் தாவிக் குதித்து ஓடின. வண்ண வண்ண பூக்கள் மலர்ந்தன.
தேவதை மந்திரக்கோலை நீட்டி, "வேண்டுமா?"-என்று கேட்டாள்.
""ஆமாம்!"- என்று அவனும் தலை அசைத்தான். அதை வாங்குவதற்குள் அம்மா அறைந்து எழுப்பிவிட்டாள்.
இன்றைக்கு ஒருநாள் விடுமுறை எடுக்க அனுமதித்தால் இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாம். தேவதை கையிலிருந்து மந்திரக்கோலை எப்படியும் வாங்கிவிடலாம். ம்.. முடியாது! அம்மா அனுமதிக்க மாட்டாள். பள்ளிக்கு ஒருநாள் விடுமுறை போடுவதும் அம்மாவுக்குப் பிடிக்காது!
பாபு எரிச்சலுடன் எழுந்தான். முகம் கழுவ கிணற்றடிக்குச் சென்றான்.
கிணற்றின் பக்கத்திலேயே ஒரு வாதாம் மரம் வளர்ந்திருந்தது. அதில் "டிட் .. டிட்.."- என்று கத்தியபடி ஒரு தேன்சிட்டு.
பாபு மரத்தை உற்றுப் பார்த்தான். அவனது பார்வை ஓர் இடத்தில் நிலைத்தது.
வாதாம் மரத்துக் கிளையில் இரண்டு இலைகள் இணைத்துத் தைத்தது போல ஒரு கூடு தொங்கியது.
அருகில் சென்றான்.
"டிட்..டிட்.."- தேன்சிட்டின் சத்தம் அதிகரித்தது. அதைக் கேட்டதால் என்னவோ இன்னொரு தேன்சிட்டு பறந்துவந்தது. உயரமான கிளையில் சென்று அமர்ந்து கொண்டது. கூட்டுக்குள் இருந்து குஞ்சுகள் "கீச்.. கீச்.."- என்று கத்தின.
கிணற்றடிக்கு முகம் கழுவச் சென்ற பாபு இந்த வேடிக்கையைப் பார்த்தவாறு நின்றான். அதற்குள் உள்ளிருந்து, "டேய்.. அங்கே என்னடா வேடிக்கை? முகம் கழுவிட்டுச் சீக்கிரம் வா! காபி குடிச்சிட்டு பாடங்களைப் படி!" - அம்மாவின அதட்டல் கேட்டது.
"இதோ வந்துட்டேம்மா...!"
பாபு அவசர அவசரமாக முகம் கழுவினான். கொடியில் இருந்த துண்டைக் கொண்டு முகம் துடைத்தான். அவனது பார்வை தேன்சிட்டுக்களைத் தேடிச் சென்றது.
"ச்சே! தேன்சிட்டா பொறந்திருந்தாவது.. ஜாலியா இருக்கலாம்!"- முணு முணுத்துக் கொண்டான்.
அறிவியல் பாடம் படித்துக் கொண்டிருந்தவனின், கவனம் முழவதும் தேன்சிட்டுகள் மீதே இருந்தது. அம்மா வேறு பக்கத்திலே வேலை செய்து கொண்டிருந்தாள். பக்கத்தை மூடினாலோ திட்டும், கொட்டும் விழும்.
நன்றாகப் படித்து அப்பாவைப் போல அறிவாளியாக பாபுவுக்கும் ஆசைதான். ஆனால், பாடம் புரியவில்லை. இப்படிப் புரியாதப் பாடங்களை மனப்பாடம் செய்து அப்படி எப்படி அறிவாளியானாரோ அவனுக்கு விளங்கவில்லை.
"படிச்சது போதும்! ஸ்கூலுக்குக் கிளம்பு!"
ஒருவழியாய் அம்மாவின் உத்திரவு கிடைத்தது. விடுதலைக் கிடைத்த உணர்வுடன் பாபு புத்தகத்தை மூடினான்.
"அம்மா ரிக்ஷா வரலே. நான் ஸ்கூலுக்கு நடந்தே போயிடுறேன!"- பாபு தயங்கித் தயங்கிக் கேட்டான்.
"அந்த வீணாப் போன ஏழுமலை, மாசத்துல பத்து நாள் இப்படித்தான் மட்டம் போட்டு படாதபாடு படுத்துறான். நாளை அவன் வரட்டும் பார்த்துக்கிறேன். சரி.. சரி.. உனக்கு நேரமாகுது. நீ கிளம்பு!"
பாபு சந்தோழமாகக் கிளம்பிவிட்டான். காய்க்கறி மூட்டைகள் போல, ஒருவர் மீது ஒருவர் ஏறிக் கொண்டு நகரவும் , திரும்பவும் முடியாத அந்த ரிக்ஷா பயணம் அவனுக்குச் சித்திரவரை செய்வதைப் போலிருக்கும்.
"உம்.."- என்று ஒரு முக்கு முக்கிப் புத்தகப் பையை முதுகில் மாட்டினான். அப்படியும், இப்படியும் அசைத்துச் சரி செய்து கொண்டான். பள்ளிக்குக் குறுக்கு வழியில் நடந்தான்.
நடக்கும் போதே தேன்சிட்டுகள் நினைவில் வந்தன. இதற்கு முன்பும் கூட அதே வாதாம் மரத்தில் தேன்சிட்டுகள் கூடு கட்டிக் குஞ்சுகள் பொறித்திருந்தன.
பஞ்சு பஞ்சுக் குஞ்சுகள். வண்ண வண்ண இறக்கை முளைத்துப் பறக்கும் வரையில் அவன் கவனித்திருக்கின்றான்.
ஆனால், இப்படிக் காலையில் எழுந்து.. மனப்பாடம் செய்து.. குட்டி மலையைப் போன்ற புத்தகச் சுமையுடன் அவசர அவசரமாக பள்ளிக்குப் போனதை இதுவரையிலும் அவன் பார்த்ததில்லை.
பாபு சாலையைக் கடந்து வயல்வரப்பில் இறங்கினான். ரிக்ஷா வராத நேரங்களில் அவன் இந்த வழியாகத்தான் போவான்.
"ம்.. மே.."- பாய்ந்துவந்த வெள்ளாட்டுக் குட்டி அதனோட அம்மாவின் மடியில் முட்டி முட்டிப் பால் குடித்தது. அருகே சென்ற பாபு அதைத் தடவிக் கொடுத்து "நலமா?"- என்று விசாரித்தான்.
"இந்த ஆட்டுக் குட்டி குளித்து இதுவரையும் நான் பார்த்ததேயில்லை. ஆனாலும், வெள்ளை வெளேர்னு இருப்பதன் ரகசியம் என்ன?"- களுக்கென்று சிரித்தான்.
"அதுதான் ஆட்டுக்குட்டி!"- என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.
வழியில் மதகு ஒன்று எதிர்ப்பட்டது. நுங்கும் நுரையுமாக கால்வாயில் வெள்ளம் ஓடியது. மதகு மேடையில் அமர்ந்தவன், தண்ணீரில் கால்களை விட்டு அசைத்தான்.
"டேய்!"- அம்மாவின் குரல் கேட்டது.
பாபு திடுக்கிட்டு எழுந்தான். "இதோ கிளம்பிட்டேம்மா!"- என்றான் அவனையும் அறியாமல். சுற்றியும் அம்மாவைத் தேடினான். வயலில் பெண்கள் நாற்று நட்டுக் கொண்டிருந்தார்கள். அம்மாவைக் காணோம். எல்லாம் பிரமை என்று தெரிந்தது. சிரித்துக் கொண்டான். பள்ளிக்கூடத்தை நோக்கி நடந்தான்.
"டேய்!"- அம்மாவின் குரல் கேட்டது.
பாபு திடுக்கிட்டு எழுந்தான். "இதோ கிளம்பிட்டேம்மா!"- என்றான் அவனையும் அறியாமல். சுற்றியும் அம்மாவைத் தேடினான். வயலில் பெண்கள் நாற்று நட்டுக் கொண்டிருந்தார்கள். அம்மாவைக் காணோம். எல்லாம் பிரமை என்று தெரிந்தது. சிரித்துக் கொண்டான். பள்ளிக்கூடத்தை நோக்கி நடந்தான்.
வயல்வரப்பில் பச்சைத் தவளைகள் புல்லுக்குள்ளிருந்து எட்டிப் பார்த்தன.
பாபு அருகில் சென்றதும், அவை நீருக்குள் குதித்து மறைந்தன. அவன் குத்துக்காலிட்டு அமர்ந்தான். "பயப்படாதீர்கள்! நான் உங்கள் தோழன்தான்!"- என்று சமாதானப்படுத்தினான். சில தவளைகள் நீர்ப்பரப்புக்கு வந்த கண்சிமிட்டுவதைக் கண்டு சிரித்தான்.
தொடர்ந்து நடந்தான்.
இன்னும் கொஞ்ச நேரத்தில் பள்ளி வந்துவிடும்.
வயல்வெளி முடிந்து.. சமவெளி கண்ணுக்குப் பட்டது. பச்சைப் பசேலென்று புற்கள் முளைத்திருந்தன. ஈரமான அந்த புல்லுக்குள் கையை விட்டு வருடினான். "ஆஹா! பட்டுப் போன்ற மென்மை!"- முணுமுணுத்தான். பாதை ஓரத்தில் பல நிறங்களில் பூக்கள் பூத்திருந்தன. அவற்றை மென்மையாகத் தடவிய பாபு, "என்ன நண்பர்களே, நலம்தானே?"- என்று விசாரித்தான். காற்றில் அவை அசைவதைக் கண்டு, மகிழ்ச்சியுடன் "பிறகு பார்ப்போம்!"-என்று சொல்லிவிட்டு நடந்தான்.
பக்கத்தில் ஒரு மரத்தில் இருந்து, ""கூ..கூகூ.."- என்று குயில் கூவியது.
"குயிலக்கா.. குயிலக்கா.. இன்னும் கொஞ்சம் பாடேன் கேட்போம்!"- பாபு கொஞ்சுவதைப் போலக் கேட்டான். "கூ..கூ.."- குயிலின் இனியக் குரலைக் கேட்டு மெய் மறந்து நின்றான்.
தொலைவில் பள்ளியின் மணி ஓசை கேட்டது. பாபு வேகமாக நடந்தான்.
லலிதா டீச்சரின் முகம் நினைவுக்கு வந்தது. 'ஹோம் ஒர்க்' கொடுத்திருந்தார். அதை பாதிதான் பாபு முடித்திருந்தான்.
மாலையில் டியூஷன் டீச்சர் தரும் பாடங்களை எழுதி முடித்து வீடு திரும்ப இரவு ஒன்பது மணியாகிவிடும். அதன் பிறகு பள்ளிப்பாடங்களை எப்படி எழுதமுடியும்?
பாபுவுக்கு வயிற்றைப் பிசைந்தது. லலிதா டீச்சருக்கு என்ன பதில் சொல்வது என்ற பயத்துடன் நடந்தான்.
கனவு தேவதை. வெள்ளாட்டுக் குட்டி, பட்டாம்பூச்சிகள், தவளை நண்பர்கள், பூக்களின் புன்னகை, பச்சைப் பசேல் புல்தரை எல்லம் மறந்து போனது.