அந்த எறும்பு போல!
http://mazalaipiriyan.blogspot.com/2012/11/blog-post_4.html
கொஞ்சம் கவனமாக பார்த்தால்.. இந்தக் காட்சி, உங்களுக்கும் தென்படலாம்.
அன்றும் அப்படிதான். தோட்டத்தில் அந்த அற்புதக் காட்சியைக் காண முடிந்தது.
அது ஒரு சிற்றெறும்பு.
அதன் வாயில், ஒரு இறகு. தன்னைவிட பல மடங்கு எடை கொண்ட இறகு. அதை தன்னந்தனியாக இழுத்துக் கொண்டு சென்று கொண்டிருந்தது.
எறும்பின் பாதையில் சிமிண்ட் தரையில் பூமியில் ஒரு சிறிய விரிசல். அது என்னதான் செய்யப் போகிறது? ஆர்வம் தாங்க முடியவில்லை.
சில நொடிகள் கூட ஆகியிருக்காது!
எறும்பு இறகை கண்ணிமைக்கும் நேரத்தில் விரிசலை நோக்கி நகர்த்தியது. இப்போது தற்காலிக பாலம் ஒன்று தயார்!
ரொம்பவும் ரிலாக்ஸ்ஸாக எறும்பு இறகின் மீது ஏறி விரிசலைக் கடந்து விட்டது.
தனது இலக்கை நோக்கி அந்த இறகை இழுத்துக் கொண்டு செல்ல ஆரம்பித்தது.
கொஞ்சம் நேரத்தில் அது தனது இருப்பிடத்தை அடைந்தும் விட்டது.
புற்றுக்குள் இழுத்துக் கொண்டு செல்ல மீண்டும் முயற்சி.
கூட அதன் பணிக்கு துணையாய் இன்னும் சில எறும்புகள்.
சின்னஞ்சிறிய அந்த புற்றின் இடுக்கில் அந்த இறகு எப்படி நுழையும்?
சிறிது நேர முயற்சிக்கு பின் அந்த இறகை பழையபடி புற்றிலிருந்து ஒதுக்கிவிட்டு தனது பணிகளில் மூழ்கிவிட்டது அந்த சின்னஞ்சிறிய எறும்பு.
நம்மைப் போலவே இறைவனின் படைப்புகளில் எறும்பும் ஒன்று. அதுவும் இறைவனின் சின்னஞ்சிறிய படைப்பு.
ஆனால், இறைவன் அதற்கு அபாரமான ஆற்றல்களைக் கொடுத்துள்ளதற்கு மேற்கண்ட சம்பவமே சாட்சி!
- இடைவிடாத முயற்சி.
- தளராத உழைப்பு.
- உடனுக்குடன் முடிவெடுக்கும் திறன்.
- சில நேரங்களில் ஏற்படும் தோல்விகளை உதறித் தள்ளிவிட்டு உடனுக்குடன் அதிலிருந்து மீண்டு வெளிப்படல்.
தனது உழைப்பு வீணாகியதே என்று எறும்பு ஒருகாலும் விரக்தி அடையவில்லை. தோல்விகளை அது நிச்சயம் அனுபவமாக்கிக் கொண்டிருக்கும்.
எதிர்பாராத விதமாக தேர்வுகளில் நாம் தோல்வியடையலாம். நமது இலக்கை அடையமுடியாமல்கூட போகலாம்.
விரக்தி வேண்டாம்.. எறும்பு போல!
மீண்டு எழ வேண்டும் உதாரணங்களை ஆசானாக்கிக் கொண்டு.
குடும்ப பிரச்சினைகள், பள்ளிக்கூட பிரச்சினைகள், நண்பர்களின் பிரச்சினைகள், பொருளாதார பிரச்சினைகள்.. ஏன் நன்றாகப் படித்து முடித்தும் வேலைக் கிடைக்காத பிரச்சினைகள் என்று வாழ்க்கையில் ஓராயிரம் பிரச்சினைகள்கூட வரலாம். சோர்ந்து நிற்கத் தேவையில்லை.
மீட்சிதான் ஒரே தீர்வு அந்த எறும்பு போல!
இறைவன் நிச்சயம் அடுத்தடுத்து வெற்றியை வசப்படுத்தித் தருவான்.
கவலை வேண்டாம்; வானம் வசப்படும்!
><><><><><><><