ரியாஸ் எழுத்தாளனாகின்றான், பகுதி 5
http://mazalaipiriyan.blogspot.com/2012/12/5.html
எழுதுவதற்கு நிறைய விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டும் என்று மாமா சொன்னதிலிருந்து ரியாஸ் நிறைய புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்தான்.
ஒரு நாள்.
"ரியாஸ்! மல்லிகா அப்பாவிடமிருந்து ஒரு கடிதம் வந்திருக்காம். அவள் வீட்டுக்குப் போய் கடிதத்தைப் படித்துக் காட்டிவிட்டு வா!" - என்றார் மாமா.
மாமா சொன்னபடியே ரியாஸ் மல்லிகா வீட்டுக்குச் சென்றான்.
அவளுடைய அம்மாவுக்கு 'முகமன்' கூறினான். அவர் அவனை ஆசிர்வதித்தார். பிறகு ஒரு கடிதத்தைக் கொடுத்து, "கொஞ்சம் படிச்சுக் காட்டுப்பா!" - என்றார்.
ரியாஸ் ஒருமுறை கடிதத்தை தனக்குள் படித்துக் கொண்டான்.
அதன் பின் அதில் இருந்ததை அப்படியே படிக்க ஆரம்பித்தான்.
மும்பை 400 021
01.12.2012
அன்பு மகள் மல்லிகாவுக்கு,
நீயும், உன் அம்மாவும் நலமாய் வாழ இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
நான் மும்பைக்கு சுகமாய் வந்து சேர்ந்தேன். என் பயணம் பாதுகாப்பாய் இருந்தது. அதற்கு இறைவனுக்கு நன்றி செலுத்தினேன். நான் இன்னும் இரண்டு மாதங்கள் கழித்துதான் சென்னை திரும்புவேன்.
ஒரு முக்கியமான செய்தி. யாராவது புதிதாக வந்து, "மாதச் சீட்டு கட்டுங்கள்.. அயர்ன் பாக்ஸ், ஹீட்டர் இவைகளைத் தருகிறோம்!" - என்று சொன்னால் அவர்களை நம்ப வேண்டாம். இங்குள்ள சென்னையைச் சேர்ந்த நண்பர் ஒருவர் என்னிடம் ஒரு சம்பவம் சொன்னார்:
அவருடைய பக்கத்து வீட்டுக்கு ஓர் ஆள் வந்தார். மாதச் சீட்டு கட்டச் சொன்னார். பத்து மாதம் கட்டி முடிந்ததும் அந்த அம்மா கேட்ட பொருளையம் கொடுத்தார். இதைப் பார்த்து நம்பிய அக்கம் பக்கத்துப் பெண்கள் சீட்டுக் கட்டினார்கள்.
சில மாதங்கள் சென்றன.
அந்த நபர் காணாமல் போனார்.
அவர் கொடுத்த முகவரியில் சென்று பார்த்தால்.. அது போலியான முகவரி என்று தெரிந்தது. பணம் போனது போனதுதான்!
அதனால், புதியவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மல்லிகா.. ஒழுங்காய் பள்ளிக்குப் போகணும். அம்மாவை தொந்திரவு செய்யக் கூடாது!
அன்புள்ள மனைவிக்கு, மல்லிகாவை நேரந்தவறாமல் பள்ளிக்கு அனுப்பவும். தூங்கும்போது தவறாமல் ஒரு நல்ல கதையைச் சொல்லவும். என்னைக் குறித்து கவலைப்படாமல் நிம்மதியாக இருக்கவும்.
எல்லாவற்றுக்கும் இறைவன் போதுமானவன்.
மற்றவை உங்கள் பதிலைக் கண்டு.
அன்புடன்,
என். அன்பரசு.
--- ரியாஸ் பதில் கடிதம் எழுதினான். எப்படி? அடுத்து பார்ப்போம்.