ரியாஸ் எழுத்தாளனாகின்றான் - 8, 'அப்பா! கவலை வேண்டாம்!'
http://mazalaipiriyan.blogspot.com/2012/12/8.html
சென்னை -600 001,
08.12.2012.
அன்புள்ள அப்பாவுக்கு,
இங்கு அனைவரும் இறைவன் அருளால் நலம். உங்கள் நலத்திற்காகவும் இறைவனிடமே பிரார்த்திக்கின்றேன்.
நீங்கள் அனுப்பிய கடிதம் கிடைத்தது. செய்திகள் தெரிந்து கொண்டோம். சீட்டுக் கம்பெனிகள் சம்பந்தமாக தங்கள் அறிவுரைப்படியே நடந்து கொள்வோம். எங்களைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்.
நான் தினமும் ஒழுங்காய் பள்ளிக்கூடம் போகின்றேன். பள்ளியில் ஆசிரியர்கள் எங்களுக்கு நல்ல முறையில் பாடங்களை நடத்துகிறார்கள். பாட்டுகளும் சொல்லித் தருகிறார்கள்.
அம்மா எனக்கு இரவில் அருமையான கதைகள் சொல்கிறார்.
அப்பா, இங்கு ஒரு அசம்பாவிதம் நடந்தது.
தீபாவளி நாள் அன்று நம் எதிர்வீட்டுக் குமரன் பட்டாசுகளை வெடித்தான். அப்போது விபத்து ஏற்பட்டு அவனுக்குக் கையில் சரியான காயம். இனி அவன் பட்டாசு வெடிப்பதில்லை என்று முடிவு செய்துள்ளான்.
போன தீபாவளிக்கு நீங்கள் எங்களுடன் இருந்தீர்கள். இம்முறை நீங்கள் எங்களோடு இல்லாதது வருத்தமாக இருந்தது. என்ன செய்வது நம் தொழிலும் முக்கியம் அல்லவா?
அம்மா உங்களை ரொம்பவும் விசாரித்தார்கள். இதைக் கண்டதும் உடன் பதில் போடவும்.
இப்படிக்கு,
தங்கள் அன்பு மகள்,
மல்லிகா.
என்று கடிதத்தை எழுதி முடித்தான். மறக்காமல் முகவரியை எழுதினான்.
திரு. என்.அன்பரசு,
012, நாரிமன் பாயிண்ட்,
மும்பை - 400 021.
அதை மல்லிகாவின் அம்மாவிடம் கொடுத்தான். அவரும் சந்தோஷமாக வாங்கிக் கொண்டார். அதை அஞ்சல் செய்ய அஞ்சலகம் சென்றார்.
அதன் பிறகு ரியாஸ் மாமாவிடம் சென்றான்.
"மாமா! கடிதம் எழுதிவிட்டேன்!" - என்றான்.
"நல்லது. இதோ! அஞ்சலட்டை. உன் நெய்வேலி அண்ணாவுக்கு எழுது!" -என்றார்.
ரியாஸ் அஞ்சலட்டையைப் பெற்றுக் கொண்டான்.
"என்ன மாமா எழுதணும்?"-என்று கேட்டான்.
அண்ணாவுக்கு கடிதம் எழுத ஆரம்பித்தான். அவருடன் நேரில் பேசுவதைப் போலவே எழுதலானான். அதைத் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் அண்ணனுக்கு தவறாமல் கடிதம் எழுதத் தொடங்கினான் ரியாஸ்.
இப்படி ரியாஸ் கடிதம் எழுதக் கற்றுக் கொண்டான்.