ரியாஸ் எழுத்தாளனாகின்றான் - 7, அன்புள்ளவருக்கு ஒரு கடிதம்!
http://mazalaipiriyan.blogspot.com/2012/12/7.html
ரியாஸ் மாமாவிடம் ஓடினான்.
"மாமா..! கடிதம் எழுதுவது எப்படி?" - என்று கேட்டான்.
"முதலில் கடிதத்தின் வலதுபுறம் மேல் பகுதியில் நாம் எந்த ஊரிலிருந்து எழுதுகின்றோமோ அதன் பெயரை எழுத வேண்டும். அதற்குக் கீழே அன்றைய தேதியை எழுத வேண்டும்.
பிறகு மல்லிகா தன் அப்பாவை எப்படி அழைப்பாளோ அதேபோல அழைத்துக் கடிதத்தை எழுதத் தொடங்க வேண்டும்.
நண்பர்களுக்கு கடிதம் எழுதும் போது, நண்பர்களை நேரில் அழைப்பதுப் போலவே அழைத்து கடிதம் எழுதத் தொடங்க வேண்டும்.
இவர்களது நலன் விசாரிப்போடு கடிதத்தை எழுதத் தொடங்க வேண்டும்.
பிறகு என்ன எழுத நினைக்கிறோமோ அதை எழுத வேண்டும்.
கடைசியாக கீழே கடிதம் எழுதுபவருடைய பெயர் எழுத வேண்டும்."
மாமா சொன்னதை ரியாஸ் கவனமாகக் கேட்டான். அவன் புறப்பட இருந்த நேரத்தில் மாமா திரும்பவும் அவனை அழைத்தார். அவரது கையில் ஒரு பழைய அஞ்சலட்டை இருந்தது.
"அஞ்சலட்டையின் பின்புறத்தில் ஒரு பகுதியில் கோடு கோடாக இதோ போடப்பட்டுள்ளதே இவற்றின் மீது யாருக்கு கடிதத்தை அனுப்புகிறோமோ அவரது முகவரி எழுதி அஞ்சல் செய்ய வேண்டும்!
மறந்துவிடாதே ரியாஸ் அப்படி முகவரி எழுதும்போது,
பெயர்,
வீட்டு எண்,
தெரு,
குடியிருப்புப் பகுதி,
ஊர்,
நகரம் இவற்றுடன்
பின்கோடு எண்ணையும் எழுத வேண்டும்"- என்றார் மாமா
"மாமா! பின்கோட் எண் என்பது என்ன?"
"அஞ்சல் விரைவாகச் சென்றடைய அஞ்சல் துறையினர் ஒவ்வொரு பகுதிக்கும் ஓர் எண் அளித்துள்ளனர். அதுதான் பின்கோட் எண் என்பது
இன்னும் கொஞ்சம் விரிவாக தெரிந்து கொள்ள வேண்டுமென்றால்..
இந்திய அஞ்சல் துறையினரால்.. அஞ்சல் அலுவலகங்களைக் குறிக்க பயன்படுத்தப்படும் எண். ஆறு இலக்கங்கள் கொண்டது. ஆகஸ்ட் 15, 1972 இல் நடைமுறைப்படுத்தப்பட்டது.
முதல் இலக்கம், அஞ்சலகம் அமைந்துள்ள மண்டலத்தையும்,
இரண்டாவது இலக்கம், அஞ்சலகம் அமைந்துள்ள உள் மண்டலத்தையும்,
மூன்றாவது இலக்கம், அஞ்சலகம் அமைந்துள்ள மாவட்டத்தையும்,
இறுதி மூன்று இலக்கங்கள் அஞ்சல் அடைய வேண்டிய குறிப்பிட்ட அஞ்சலகத்தையும் அடையாளப்படுத்தும்.
"புரிகிறதா ரியாஸ்?" - என்று மாமா கேட்டார்.
மாமா சொன்னதை ரியாஸ் புரிந்து கொண்டான்.
மல்லிகாவின் அம்மாவிடமிருந்து கடிதம் வாங்கி பதில் எழுத ஆரம்பித்தான்.
--- என்ன எழுதினான் பார்ப்போமா?