' ஒரு மூங்கிலைப் போல!'
http://mazalaipiriyan.blogspot.com/2012/12/blog-post_6.html
அவன் விரக்தியோடு போய் கொண்டிருந்தான். ரொம்பவும் சோர்ந்து போய் இருந்தான். வாழ்க்கை பிடிக்கவில்லை அவனுக்கு.
ஒரு காடு எதிர்பட்டது.
காட்டில் ஒரு பெரியவரைச் சந்தித்தான். தன் முடிவைத் தெரிவித்தான். தான் வாழ்ந்தேயாக வேண்டும் என்பதற்கான ஒரே ஒரு காரணத்தைச் சொன்னால்கூட தனது முடிவை மாற்றிக் கொள்ள தயாராக இருப்பதாக அவன் சொன்னான்.
பெரியவர் புன்முறுவல் பூத்தார்.
தனது குடிலுக்கு அழைத்துச் சென்றார்.
காட்டுக்குள் அற்புதமாக அமைந்திருந்தது அவரது அந்த வசிப்பிடம்.
மூங்கில் தோப்புக்குள் அமைந்திருந்தது அவரது குடிசை. சுற்றியும் பூச்செடிகள்.
குடிசைக்கு வெளியே இருந்த கட்டிலில் உட்கார வைத்த பெரியவர் சுற்றியிருந்தவற்றைக் காட்டிக் கேட்டார்: "இவை என்னவென்று தெரிகிறதா?"
"ஏன் தெரியாது.. பூஞ்செடிகளும் மூங்கில்களும்!" - என்றான் அவன்.
"ஓ..! அழகாக வளர்ந்துள் ளனவே!" ஆச்சரியப் பட்டான் அவன்.
"இந்த பூச்செடிகளையும், அதோ அந்த மூங்கில் தோப்பையும் நான் ஒன்றாகத்தான் நட்டேன்!" - என்றார் அந்த பெரியவர்.
அவர் சொல்வதை அவன் வியப்புடன் கேட்டான்.
"ஆமாம்..இந்த பூந்தோட்டத்தையும், அதோ அந்த மூங்கில் தோப்பையும் ஒரே நேரத்தில் நிலத்தைக் கொத்தி விதைத் தெளித்தேன். நன்றாக சூரிய ஒளி கிடைக்கும்படி செய்தேன். காலந்தவறாமல் உரமிட்டேன். களையெடுத்தேன். நீர்ப்பாய்ச்சினேன்!" - சொல்வதை நிறுத்தியவர் சிறிது நேரம் கழித்து புன்முறுவலுடன் தொடர்ந்தார்:
"இந்த பூச்செடிகள் வேகமாக முளைவிட்டு வளர்ந்துவிட்டன. பச்சைப் பசேனெ புதராய் மண்டிவிட்டன. அழகிய வண்ணங்களில் பூப்பூத்து மணம பரப்பின. ஆனால், மூங்கில் விதைகள் நட்டு ஒரு வாரமாகியும் அவை முளைவிடவில்லை.
ஆனால், நான் தளர்ந்துவிடவில்லை.
இரண்டு வாரங்களாகின. ம் மூங்கில் விதைகள் முளைவிடக் காணோம்.
ஆனால், நான் தளர்ந்துவிடவில்லை.
மூன்று வாரங்களாயின. இன்னும் இதேநிலைதான்! மூங்கில் விதைகளிலிருந்து ஓர் அசைவும் காணோம்.
ஆனாலும், நான் தளர்ந்துவிடவில்லை.
அது நாலாவது வாரம் அதாவது மூங்கில் விதைகளை நட்டு 30 நாட்கள் கழிந்து விட்டிருந்தன. ம்.. மூங்கில் விதைகள் அசைந்து கொடுப்பதாய் இல்லை.
ஆனால், நான் தளர்ந்துவிடவில்லை.
ஐந்து, ஆறு, ஏழு என்று வாரங்கள் ஓடிக் கொண்டிருந்தன. மூங்கில் விதைகள் முளைப்பதாயில்லை.
கடைசியில், எட்டாவது வாரம் அதாவது 60 நாட்களுக்குப் பிறகு பூமியைப் பிளந்துகொண்டு மஞ்சள் நிறத்தில் சின்ன சின்ன தளிர்கள் பூமிக்குள்ளிருந்து வெளிவந்திருந்தன. அந்த நேரத்தில் இந்த பூச்செடிகளோட ஒப்பிடும்போது, அது மிகவும் சின்ன உருவம்தான்! ஆனால், வெறும் ஆறே ஆறு மாதங்களில் 100 அடிக்கும் மேலாக விஸ்வரூபம் எடுத்து வளர்ந்துவிட்டன. ஒரு நாளைக்கு ஒரு மீட்டர் உயரம் என்று வேக வேகமாக வளர்ந்து இதோ தோப்பாய் நிற்கின்றன!"
அதற்குள் வீட்டிலிருந்து ஒரு மூதாட்டி பெரியவரின் துணைவியார் மண் குவளையில் சுட சுட பானம் ஒன்று கொண்டு வந்து இருவருக்கும் கொடுத்தார்.
"சித்தரத்தை, கற்பூரவள்ளி, துளசி, பனை வெல்லம் கலந்த தேனீர் இது நன்றாக இருக்கும்! !" - என்றவர் தொடர்ந்தார்.
"... அந்த விதைகள் கிட்ட தட்ட 60 நாட்கள் முளைப்பதற்கான சூழலுக்குப் போராடியிருக்கின்றன. நம் கண்ணுக்குத் தெரியாமல் பூமிக்குள் வேர்ப்பாய்ச்சி அதன் மீட்சிக்குக் காரணமாய் நின்றன.
இறைவன் யார் மீதும் சுமக்க முடியாத பாரத்தைச் சுமத்திவிடுவதில்லை என்பதை எப்போதும் மறக்கக் கூடாது!
உனது முடிவிலிருந்து உன்னை மாற்றிக் கொள்ள ஒரு காரணத்தைக் காட்டச் சொன்னாய். அதற்கான ஆயிரமாயிரம் காரணங்கள் உனக்குள்ளாகவே இருப்பதை நீ பொறுமையுடன் சிந்தித்தால் தெரிந்து கொள்ளலாம்.
உனது இத்தனை நாள் போராட்டங்களும், துன்பங்களும், கவலைகளும் ஒரு மீட்சிக்கான போராட்டமாகவே காண வேண்டும். மூங்கில் விதைகளைப் போல உனது வேர்கள் பாய்ச்சலுக்கான அவகாசமது!"
பெரியவர் தொடர்ந்தார்: ".... அடுத்தது, யாருடனும் உன்னை ஒப்பிடாதே! ஒவ்வொருவரும் தனித்தனி திறமையானவர்கள். மூங்கிலோடு இதோ இந்த பூச்செடிகளை ஒப்பிட முடியுமா? அதுபோலதான் அடுத்தவரோடு நம்மை ஒப்பிடுவதும்!
உனக்கும் காலம் இருக்கிறது. நீயும் உயரமாய் வளரத்தான் போகிறாய்!"
அதற்குள் அவன் இடை மறித்தான்: "எவ்வளவு உயரம்?"
"அதோ அந்த மூங்கில் உயரத்துக்கு.. நீ முயல்வதற்கு ஒப்ப..ஆம்.. உனது முயற்சிகளை முடுக்கிவிட்டு மூங்கிலைப் போல வீரியமாய வளர்ந்து விண்ணைத் தொடு!" - என்றார் பெரியவர் அவனை வாழ்த்தியவாறு.