ரியாஸ் எழுத்தாளனாகின்றான் - பகுதி - 6
http://mazalaipiriyan.blogspot.com/2012/12/6.html
கடிதத்தைப் படித்துக் காட்டிவிட்டு ரியாஸ் திரும்பிவிட்டான்.
"கடிதத்தை படித்துக் காட்டி விட்டாயா ரியாஸ்?" - என்று மாமா கேட்டார்.
"ஆமாம்!" - என்று அவன் கடித விவரங்களைச் சொல்ல ஆரம்பித்தான்.
அதற்குள் மாமா இடை மறித்தார்.
"ரியாஸ்! பிறருடைய கடித விவரங்களை வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது! அதுபோல, அனுமதி இல்லாமல் பிறருடைய கடிதங்களையும் படிக்கக்கூடாது!" - என்றார் அமைதியாக.
"இனி அப்படியே செய்கிறேன் மாமா!" - என்றான் ரியாஸ்.
இரண்டு நாட்கள் கழிந்திருக்கும்.
மல்லிகாவின் அம்மா ரியாஸைத் தேடி வந்தார்.
"ரியாஸ் கண்ணா! அன்றைக்குப் படித்தாயே ஒரு கடிதம்.. அதற்குப் பதில் எழுதணும்பா.." - என்று அஞ்சலட்டையைக் கொடுத்தார்.
ரியாஸீக்குப் பயமாக இருந்தது. அவன் அதுவரை யாருக்கும் கடிதம் எழுதியது கிடையாது.
இதை மல்லிகா அம்மாவிடம் சொன்னான். பாவம் அவர்! அவருடைய முகம் சோகத்தால் வாடிவிட்டது.
ரியாஸ் அவரிடம், "இருங்க மாமி.. நான் மாமாவிடம் சென்று கடிதம் எழுதுவது எப்படி என்று கேட்டு வருகின்றேன். இப்படி உட்காருங்கள்!"- என்று சொல்லிவிட்டு மாமாவிடம் ஓடினான்.
--- மாமா என்ன சொன்னார்?
ரியாஸ் எப்படி எழுதினான்?
நாளைப் பார்ப்போமா?