நாளொன்று கற்போம், சிறார் இஸ்லாமிய கலைக்களஞ்சியம்: 'அபாபீல்'
http://mazalaipiriyan.blogspot.com/2014/01/blog-post_3760.html
அபாபீல் என்பது ஒருவகையான சிறு பறவை இனத்தின் பெயராகும். இந்த பறவை இனம் திருக்குர்ஆனில் 'அல்ஃபீல்' என்னும் அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ளது.
அப்போது, யேமன் நாடு அபிசீனிய மன்னரின் ஆட்சியின் கீழ் இருந்தது. அந்த கிருத்துவ மன்னனின் பெயர் ஆப்ரஹா என்பதாகும். மக்கள் கூடும் பிரசித்திப் பெற்ற இடமான கஅபாவை இடித்து தரைமட்டமாக்க, 60 ஆயிரம் வீரர்கள் கொண்ட பெரும் படையைத் திரட்டிக் கொண்டு வந்தான். இந்தப் படையில் யானைப் படையும் பங்கு கொண்டிருந்தது.
ஆப்ரஹா, முஸ்தலிஃபாவிற்கும், மினாவிற்கும் இடையிலுள்ள இடத்திற்கு வந்து சேர்ந்தான். அப்போது, திடீரென்று கடற்கரையின் புறமாக வானத்தில் பறவைகளின் கூட்டம் கருமேகமாகய் திரண்டு வந்தது.
அந்தப் பறவைகளின் அலகுகளிலும், கால்களிலும் எரிமலைக் குழம்பின் துகள்களைப் போன்ற பொடிக் கற்கள் இருந்தன. படையினர் மீது கல்மாரி பொழிந்தன.
எவர் மீதெல்லாம் அந்தக் கற்கள் பட்டனவோ, அவர்களின் சதை அழுகி விழ ஆரம்பித்தது. ஏதோ அமிலக் கற்கள் போல அவை சதையைப் பிய்த்து எடுத்தன.
இப்படி ஆப்ரஹாவின் படை முழுவதும் அழிக்கப்பட்டது.
இந்த சம்பவம் மக்காவில் நடந்தபோது அதை கண்ணாரக் கண்ட ஆயிரக் கணக்கான மக்கள் இருந்தனர். யானைப் படைக்கு ஏற்பட்ட இந்த பேரழிவு இறைவனால் ஏற்பட்டது என்று அரபு மக்கள் ஏற்றுக் கொண்டனர்.
இந்தச் சம்பவம் நபிகளார் பிறப்பதற்கு 50 நாட்களுக்கு முன்னர் நடந்தது. சம்பவத்தின் பேரழிவுக்குக் காரணமான இந்த சிறு பறவைகளின் பெயர்தான் அபாபீல் என்பது.