ரியாஸ் எழுத்தாளனாகின்றான் - 15, 'கட்டுரை எழுதுவது எப்படி?'
http://mazalaipiriyan.blogspot.com/2013/01/15.html
ஒரு நாள் மாமா சொன்னார்:
"ரியாஸ்! கண்களால் பார்ப்பதை எழுதக் கற்றுக் கொண்டாய். சொந்த அனுபவங்களையும் வைத்தும் உனக்கு எழுதத் தெரியும். கடிதம் எழுதவும் தெரிந்துவிட்டது. சம்பவங்கள்.. சிறுகதைகள் இவற்றையும் கற்றுக் கொண்டாய்.. இல்லையா?"
அதற்கு ரியாஸ், "ஆமாம்.. மாமா!" - என்றான்.
"இப்போது கட்டுரை மட்டுமே பாக்கி. அதையும் தெரிந்து கொண்டால்.. நீ ஒரு முழு எழுத்தாளன்தான்!"
"இது என்ன.. கட்டுரை எழுத கற்றுக் கொள்வது? நாம்தான் பள்ளிக்கூடத்தில்தான் பலமுறை கட்டுரைகள் எழுதியுள்ளோமே! ஆசிரியர் சொல்வதை அப்படியே எழுதியிருக்கிறோமே! சரி இதை மாமாவிடமே கேட்டு விடுவோம் என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன்" மாமாவிடம் இப்படி கேட்டான்:
"மாமா! எங்க பள்ளியிலேதான் நிறைய கட்டுரைகளை எழுதியிருக்கிறோமே! மறுபடியும் என்ன கற்றுக் கொள்வது?"
இதைக் கேட்டு மாமா சிரித்தார்.
"அப்படியா? சரி.. கட்டுரையையை எழுதுவது எப்படி என்று சொல்!" - என்றார்.
"சுதந்திர தினம் பற்றியும், தமிழர் திருநாள் பற்றியும் இன்னும் பாரதியைப் பற்றியும் பல கட்டுரைகளை நான் எழுதியுள்ளேன். என்ன எழுத வேண்டுமோ அதை எங்கள் ஆசிரியர் எழுதித் தருவார். அதை நாங்களும் மனனம் செய்து அப்படியே எழுதிடுவோம்! அவ்வளவுதான்!"
மாமா சிரித்தார்.
"ரியாஸ்! கட்டுரை என்பது அது மட்டுமல்ல. பல்வேறு தகவல்களைத் திரட்டி எழுதுவது"- என்ற மாமா தொடர்ந்து சொன்னார்:
"ரியாஸ்! நன்றாகக் கவனி! எந்த தலைப்பில் கட்டுரை எழுத வேண்டுமோ அது தொடர்பான நிறைய செய்திகளை திரட்ட வேண்டும். நிறைய நூல்களைப் படிக்க வேண்டும். எந்தளவுக்கு நிறைய விஷயங்களை சேகரிக்கின்றோமோ அந்தளவுக்கு கட்டுரையும் சிறப்பாக அமையும்
படித்த தகவல்களைத் திரட்டி வரிசைப்படுத்தி கட்டுரையில் எழுத வேண்டும். படிப்பவர்களுக்கு நிறைய விவரங்களைத் தர முயல வேண்டும். ஏதோ இங்கொன்றும், அங்கொன்றுமாய் தகவல்களைத் திரட்டி எழுதுவது உண்மையிலேயே கட்டுரை ஆகாது!
சரி.. நான் ஒரு தலைப்புத் தருகின்றேன்.. அந்த தலைப்பை வைத்து ஒரு கட்டுரை எழுது பார்ப்போம்!"-என்று மாமா சொன்னதும் ரியாஸ், "என்ன தலைப்பு மாமா?" - என்று ஆவலுடன் கேட்டான்.
"உயிர்களிடம் இரக்கம் கொள்!" - என்றார் மாமா.
ரியாஸ் எழுதலானான்.
"ராமு நோய்வாய்ப்பட்டான். பாவம்! ரொம்பவும் கஷ்டப்பட்டான். அவனை டாக்டரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்!"
அதற்குள் மாமா அங்கு வந்தார். "ரியாஸ்! என்ன எழுத ஆரம்பித்தாய்?" - என்று விசாரித்தார்.
ரியாஸ் எழுதியதை படித்துக் காட்டினான்.
"ஊஹீம்.. இப்படி எழுதக் கூடாது! உயிர்களிடம் அன்பு காட்டுவது சம்பந்தான சில புத்தகங்கள முதலில் படிக்க வேண்டும்.
முக்கியமான செய்திகளை குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டும்.
எழுதும்போது, முதலில், உயிர்களிடம் இரக்கம் காட்டுவது என்றால் என்ன? என்பதை தெளிவுப் படுத்தி அது ஒவ்வொரு தனிமனிதனின் கடமை என்பதை அழுத்தம் திருத்தமாகக் கட்டுரையில் வலியுறுத்த வேண்டும்.
இந்தத் தலைப்புச் சம்பந்தமாக ஓரிரு உண்மைச் சம்பவங்களையும் குறிப்பிட்டால் கட்டுரைக்கு விறுவிறுப்பு கூடும்.
கட்டுரையையை முடிக்கும்போது, உயிர்களிடம் இரக்கம் கொள்வது அவசியம் என்பதை படிப்பவர் உணரும்படி செய்ய வேண்டும்.
கட்டுரையின் நடு நடுவே ஏதாவது கவிதைகள், மேற்கோள்கள் காட்டுவதும் நல்லது!"
மாமா சொன்னதைக் கேட்டதும், 'கட்டுரை எழுதுவது நம்மால் முடியாது. அது அறிவாளிகள் வேலை போலிருக்கு!' என்று ரியாஸீக்குத் தோன்றியது.
"மாமா! கட்டுரை எழுதுவது விளையாட்டுச் சமாச்சாரம் அல்ல. போய் புத்தகங்ளைப் படித்து முதலில் தகவல்களைத் திரட்டு!"-என்றார் மாமா.
ரியாஸ் எழுந்து சென்றான்.
மாமா கொடுத்திருந்த புத்தகங்களைப் படித்தான். நாளேட்டுகளிலிருந்தும் சில தகவல்கள் கிடைத்தன. அப்பா சொன்ன சில சம்பவங்களையும் நினைவுப்படுத்திக் கொண்டான். தான் நேரிடையாகப் பார்த்த சில விஷயங்களையும் ஞாபகப்படுத்திக் கொண்டான். அவற்றிலிருந்து முக்கியமானவற்றை குறிப்பெடுத்திக் கொண்டான். இதற்கு மூன்று நாட்கள் பிடித்தன. பிறகு கட்டுரையை எழுத ஆரம்பித்தான்.
ரியாஸ் என்ன எழுதினான் தெரியுமா? இறைவன் நாடினால்.. அதை அடுத்த இறுதிப் பகுதியில் பார்ப்போம்.