'ரியாஸ் எழுத்தாளனாகின்றான்' பகுதி - 9, 'நிகழ்ச்சியை கதையாக்கி....'
http://mazalaipiriyan.blogspot.com/2012/12/9.html
ஒருநாள் மாமா ரியாஸை அழைத்தார். பக்கத்தில் அமர்த்திக் கொண்டார். ஒரு சம்பவம் சொல்லத் தொடங்கினார். அருமையான சம்பவம்! ஆவலுடன் அதைக் கேட்டான். இப்படிப்பட்ட மன்னர்களும் வாழ்ந்திருக்கிறார்களா? - என்று அவனுக்கு வியப்பாக இருந்தது.
சம்பவத்தைச் சொல்லி முடித்ததும் மாமா, "எப்படி இருக்கிறது?" - என்று கேட்டார்.
"அருமை மாமா..!"- என்றான் ரியாஸ்.
"சொன்னதெல்லாம் நினைவிருக்கிறதா?"
"ஓ! நன்றாக!"
"அப்படியானால் இந்த சம்பவத்தை எழுதிக் காட்டு பார்ப்போம்!"
ரியாஸ் மாமா சொன்ன அந்த நிகழ்ச்சியை அப்படியே கதையாய் எழுதலானான்.
'இன்றைய பழனி வட்டத்தின் தென்மேலைப் பகுதியும், உடுமலை வட்டத்துத் தென்கீழ்ப் பகுதியையும் அடக்கிய நாட்டை குமணன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். 'முதிரம்' என்ற மலைநாடு அவனது தலைநகரமாக இருந்தது.
குமணன் பெரும் கொடை வள்ளல். தன்னிடம் வந்து உதவி கேட்கும் புலவர் பெருமக்களுக்கு வேண்டிய மட்டும் அள்ளித் தருவான்.
இளங்குமணன் அண்ணனைக் கொன்று ஆட்சியைப் பறிக்கத் திட்டமிட்டான் இதை அறிந்து கொண்ட குமணன் தப்பிச் சென்று தலைமறைவானான். ஆனால், இளங்குமணனோ, "குமணனின் தலையைக் கொய்து வருபவருக்கு கோடி பொன் பரிசாகத் தரப்படும்!" - என்று பறை அறிந்து அறிவிப்புச் செய்தான்.
இதை அறியாத சீத்தலைச் சாத்தனார் என்ற புலவர் குமணனிடம் சென்று பரிசு பெற விரும்பினார். குமணன் இருக்கும் இடத்தை அறிந்து கொண்டு அவனிடம் சென்றார். அவனைப் புகழ்ந்து பாடினார்.
குமணன் தலைமறைவாக வாழ்ந்து வந்த இடமோ காடு. அவனிடம் கொடுப்பதற்கு ஏதும் இல்லை. ஆயினும், புலவரை வெறுங்கையுடன் அனுப்ப விரும்பவில்லை. இளங்குமணன் தன் தலைக்கு விலை வைத்துப் பறை அறைந்திருப்பதை அவன் அறிவான். அதனால், தன் போர் வாளை புலவரிடம் கொடுத்தான். "புலவரே! இந்த வாள் கொண்டு என் தலையைக் கொய்து செல்லும்! இதை என் தம்பியிடம் கொடும். அவன் கோடி பொன் தருவான்!" - என வேண்டி வாளைத் தந்தான்.
நடந்த செய்திகளை அறிந்த புலவர் திடுக்கிட்டார். குமணனின் கொடை வள்ளல் தன்மையை நேரில் கண்டார். அவனை நெஞ்சார வாழ்த்தினார். குமணனின் அருங்குணத்தை இளங்குமணனிடம் சொல்லி அண்ணனின பெருமையை உணர்த்த அவனைத் தேடிச் சென்றார்.
ரியாஸ் சம்பவத்தை எழுத்தி முடித்தான். அதை எடுத்துக் கொண்டு மாமாவிடம் சென்றான்.
மாமா படித்துப் பார்த்தார். மகிழ்ந்து போனார். அதன் பின் சொன்னார்:
"இத்தகைய சம்பவங்களுக்கு வரலாறு என்று பெயர் அதாவது ஏற்கனவே உண்மையாகவே உலகில் நடந்தவை. அவை அந்தக் காலத்தில் வாழ்ந்தவர்களால் வரலாறாக பதிவு செய்யப்பட்டவை"
"இத்தகைய சம்பவங்களுக்கு வரலாறு என்று பெயர் அதாவது ஏற்கனவே உண்மையாகவே உலகில் நடந்தவை. அவை அந்தக் காலத்தில் வாழ்ந்தவர்களால் வரலாறாக பதிவு செய்யப்பட்டவை"
சில வரலாற்றுச் சம்பவங்களை விளக்கும் நூல்களை மாமா ரியாஸிடம் தந்தார். அவற்றை ரியாஸ் ஆவலுடன் படிக்க ஆரம்பித்தான். அதிலிருந்த இன்னொரு சம்பவத்தை எழுதி மாமாவிடம் கொண்டு சென்றான். அதைப் படித்த மாமா அவனைப் பெரிதும் பாராட்டினார்.
ரியாஸீக்கு எழுத முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகமானது. அவன் முதலில் அரைப்பக்கம், ஒரு பக்கம் என்று எழுதிக் கொண்டிருந்தான். இப்போது பல பக்கங்களை இயல்பாக எழுத ஆரம்பித்தான். எழுத்துப் பிழைகளை மட்டும் மாமா திருத்துவார். மற்றதை அவனையே சரிபார்க்கும்படி சொல்வார்.
எழுதியதை அவனே எப்படி சரிபார்க்க முடியும்?
எழுதியதை அவனே எப்படி சரிபார்க்க முடியும்?
"தனக்குத் தானே சீர்த்திருத்திக் கொள்பவனே சிறந்த ஆசான்!" - என்பார் மாமா.
"வரலாற்றுப் புத்தகங்களில் உள்ளவற்றை கவனமாகப் படித்து நினைவில் பதித்துக் கொள் ரியாஸ். கூடவே மறக்காமல் இருக்க குறிப்புகளை எடுத்து வைத்துக் கொள். பிறகு அவற்றை உன் நடையில் எழுது. அப்படி எழுதியதை ஒன்றுக்கு இரண்டு முறை படித்துப் பார். நீ எங்கெங்கு தேவையில்லாமல் எழுதியுள்ளாய்.. திரும்பத் திரும்ப எழுதியுள்ளாய்.. என்று தெரியும். அவற்றை மறுபடியும் திருத்தி எழுது!"
மாமா சொன்னதை ரியாஸ் கவனமாகக் கேட்டான். பிறகு அவன் எழுதியதை அவனே திருத்த ஆரம்பித்தான். இதன் மூலம் அவன் திறமை வளர்ந்தது. அத்துடன் இரண்டாவது முறை படிப்பதால்... பல தவறுகளும் புலப்பட்டன.