ரியாஸ் எழுத்தாளனாகின்றான்- பகுதி 10, 'ஹீரோ பேனா பரிசு!'
http://mazalaipiriyan.blogspot.com/2012/12/10.html
ரொம்ப நாள்வரை ரியாஸ் வரலாற்றுச் சம்பவங்களை எழுதிக் கொண்டிருந்தான். ஏதாவது புத்தகங்களைப் படித்தோ அல்லது பத்திரிகைகளைப் படித்தோ விஷயங்களைப் புரிந்து கொள்வான். பிறகு எளிய நடையில் எழுதுவான்.
ஒருநாள். ரியாஸ் புத்தகங்களைப் படித்தவாறு இருந்தான். அதில் ஒரு வரலாற்றுச் சம்பவம் பிரசுரமாகியிருந்தது. அது அவனுக்குப் பலத்த சந்தேகத்தை எழுப்பியது. அதை நம்ப முடியவில்லை.
புத்தகத்தில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது:
"ஒரு ராஜா இருந்தார். அவர் நோய்வாய்ப்பட்டார். ராஜாவின் மீது ராணி அதிக அன்பு கொண்டிருந்தார். எவ்வளவோ மருத்துவம் பார்த்தாகிவிட்டது. ஆனாலும், ராஜா குணமாகவில்லை. கடைசியில், அவர் இறந்து விட்டார். அவர் உயிர் பிரிந்தபோது, ராணி அருகிலேயே இருந்தார்.
ராஜாவின் உயிர் எடுக்க மரண தேவதை வந்திருந்தது. ராணி சட்டென்று அதனிடமிருந்த கூடையைப் பறித்துக் கொண்டாள். அப்போது ராஜாவின் உயிர் கூடையிலிருந்து உருண்டு வெளிவந்து விடுதலை பெற்றது. அத்துடன் இன்னும் சில உயிர்களும் விடுதலை பெற்றன. ராஜா உயிர் உடலில் சென்றது. அவர் திரும்பவும் உயிர் பெற்று எழுந்தார்.
தேவதை நேரே கடவுளிடம் சென்று புகார் செய்தது. அதற்கு கடவுள், " நேற்று ராணி பசித்த ஒருவனுக்கு உணவளித்தாள். அந்த நல்ல செயலைச் செய்து மன்னர் பிழைக்க வேண்டும் என்று பிரார்த்தித்தாள். ராணியின் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால், நான் உன்னிடம் அதை தெரிவிக்க மறந்துவிட்டேன!" - என்று சொன்னார்.
இந்தச் சம்பவம்தான் ரியாஸீக்கு சந்தேகம் எழுப்பியது. சந்தேகங்களைப் போக்கிக் கொள்ள அவன் வரலாற்றுப் புத்தகங்களைத் தேடலானான். அப்படிப்பட்ட ராஜாவின் பெயரோ .. வரலாறோ எங்கும் கிடைக்கவில்லை.
ரியாஸ் நேராக மாமாவிடம் சென்றான். விவரத்தைச் சொன்னான்.
"ரியாஸ்! உனக்கு இக்கதையில் எழும் சந்தேகங்கள் யாவை?" - மாமா விசாரித்தார்.
ரியாஸ் பட்டியலிட்டுச் சொன்னான்:
"முதலில் மரண தேவதை! அதை இதுரையும் யாரும் கண்டதில்லை!
அடுத்தது வானவரோ அல்லது தேவதையோ மனிதரைவிட பலவீனமானவராக இருக்க முடியாது!
இந்தக் கதை உண்மையானதாக இருந்தால்... மரணநிலையில் உள்ள ஒவ்வொரு மனிதரின் உறவினரும் ஏதாவது ஒரு நற்செயலைச் செய்துவிட்டு தமது உறவினரின் உயிரைக் காத்துக் கொள்வார்கள். ராஜாவின் உயிருடன் மற்ற உயிர்களும், தப்பவிட்டிருப்பதாக சொல்லப்பட்டிருப்பது சிரிப்பூட்டுகிறது.
இந்தக் கதை உண்மையானதாக இருந்தால்... மரணநிலையில் உள்ள ஒவ்வொரு மனிதரின் உறவினரும் ஏதாவது ஒரு நற்செயலைச் செய்துவிட்டு தமது உறவினரின் உயிரைக் காத்துக் கொள்வார்கள். ராஜாவின் உயிருடன் மற்ற உயிர்களும், தப்பவிட்டிருப்பதாக சொல்லப்பட்டிருப்பது சிரிப்பூட்டுகிறது.
ராணியின் நற்செயலை தேவதையிடம் சொல்ல கடவுள் மறந்து போனார் என்பதும் நம்பக்கூடியது அல்ல. ஏனென்றால்... கடவுள் மனிதர்களைப் போல ஞாபகமறதி போன்ற பலவீனங்களுக்கு அப்பாற்பட்டவர்!"
ரியாஸின் பதிலைக் கேட்டதும் மாமா மனம்விட்டுப் பாராட்டினார். "சாபாஷ்!" - என்று முதுகில் தட்டிக் கொடுத்தார். அவன் எதிர்பாராதவாறு புத்தம் புதிய ஒரு 'ஹீரோ' பேனாவையும் பரிசாகக் கொடுத்தார்.
" சரி இந்தச் சம்பவத்தை எழுதியவர் படிப்போரை எதன் பக்கம் அழைத்துச் செல்ல நினைக்கிறார்? . இதற்கு பதில் சொல் பார்ப்போம்!" - என்றார் மாமா.
சிறிது நேரம் யோசித்துவிட்டு ரியாஸ், இதை எழுதியிருப்பவர் நிச்சயம் மூடப்பழக்கவழக்கங்களின் பக்கம் அழைத்துச் செல்லவே விரும்புகிறார்!" - என்றான்.
"சரியாகச் சொன்னாய். இது வரலாற்றுச் சம்பவம் அல்ல. தாத்தா பாட்டி காலத்து செவி வழிச் செய்தி. கற்பனைக் கதை. இப்படிப்பட்ட விஷயங்களை நாம் எழுதவே கூடாது!.
சரி.. வரலாற்றுச் சம்பவங்களை எழுதியது போதும்! இனி நம் வாழ்வில் நம்மோடு சம்பந்தப்பட்ட அன்றாட பிரச்சினைகளைத் தொட்டு கதைகளை எழுது!" - என்று மாமா சொன்னதும் உற்சாகம் கரைப்புரண்டது.
"மாமா! கதை எழுதுவது எப்படி என்று சொல்லித் தாருங்களேன்!"- என்று கொஞ்சும் குரலில் கேட்டான்.
மாமாவும் சொல்ல ஆரம்பித்தார்.