ரியாஸ் எழுத்தாளனாகின்றான் - 11, கதை எழுதுவதற்கு முன்..



கதையை எப்படி எழுத வேண்டும் என்று மாமா சொல்லத் தொடங்கினார்:

"ரியாஸ்! கதை எழுதுவதற்கு முன் படிப்போருக்கு நீ என்ன சொல்ல விரும்புகின்றாய் என்பதை நன்றாக யோசித்துக் கொள்ள வேண்டும்.

ஏழைகளின் மீது பரிவு, இரக்கம் இவற்றை ஏற்படுத்த நினைப்பதாக இருந்தால்.. ஏழை மூதாட்டி, பார்வையிழந்தோர், பசித்தோர், கல்வி கற்க இயலாத ஏழ்மை நிலையிலுள்ள மாணவர்கள், நோயுற்றவர்கள் தொடர்பாக கதையை உருவாக்க வேண்டும். 

இதற்கு ஓர் உதாரணம் சொல்கிறேன் கேள்! 

ஒரு சிறுவன் இருந்தான். 

அவன் மிகவும் நல்லவன். 

ஒருநாள். 



ஒரு பார்வையிழந்தவர் நடந்து போவதை அவன் கண்டான். 

அவர் நடந்து கொண்டிருந்த சாலையில், பள்ளம் ஒன்றிருந்தது. 

அதில் விழுந்தால் என்னாவது? பதறிப் போன சிறுவன் ஓடினான். 

பள்ளத்தில் விழ இருந்த முதியவைரைத் தடுத்து நிறுத்தினான். 

சரியான பாதையில் செல்ல உதவினான்.

பார்வையற்ற அம்மனிதர், "நன்றி தம்பி! நீ நல்லா இருக்கனும்பா!" - என்று சிறுவனை வாழ்த்திவிட்டு சென்றார்.

இது ஓர் எடுத்துக்காட்டு. அதனால், சுருக்கமாக சொன்னேன். இதையே இன்னும் பல பக்கங்கள் விரித்து எழுதவும் முடியும்.

சரி.. மன்னிப்பு என்ற தலைப்பில் ஒரு கதையை எழுது பார்ப்போம்!"

மாமா சொன்னது எளிமையாகவும் இருந்தது. நன்றாகவும் புரிந்தது. 

ரியாஸ் கதை எழுதத் தயாரானான். நன்றாக யோசித்துவிட்டு எழுதலானான்.

'பஷீர் என்றொரு சிறுவன் இருந்தான். அவன் நல்லவன். ஒருமுறை அவனை சுலைமான் திட்டினான். பஷீரோ அதற்காகக் கோபப்படவில்லை. சுலைமானை மன்னித்துவிட்டான்'



எழுதி முடித்ததும் அதை ஒருமுறை படித்துப் பார்த்தான். "ஊஹீம் கொஞ்சம்கூட நன்றாக இல்லை!" 

இப்போது கதையை இப்படி மாற்றி எழுதினான். 

'பஷீரும் சுலைமானும்  நண்பர்கள். 

ஒருமுறை இருவரும் சண்டையிட்டுக் கொண்டார்கள். 

சுலைமான் பஷீரை நன்றாக அடித்து விட்டான். 

அடி வாங்கிய பஷீர் வீட்டுக்கு ஓடிவிட்டான். போய் வாசற்படியில் உட்கார்ந்து கொண்டான். 

கையில் ஒரு செங்கல் துண்டு இருந்தது.

சுலைமான் அந்த வழியாகத்தான் வரவேண்டும். வந்ததும் அவனை கல்லால் அடித்துவிட்டு ஓடிவிட வேண்டும் என்பதே அவனது திட்டம். 



பஷீர் இப்படி யோசித்தவாறு உட்கார்ந்திருந்தான். அதற்குள் அவனது அப்பா அங்கு வந்தார்.

"என்ன பஷீர் இங்கே அமர்ந்திருக்கிறாய்?" - என்று கேட்டார்.

பஷீர் நடந்ததைச் சொன்னான். 

எல்லாவற்றையும் கேட்ட அப்பா, "மகனே! நமக்கு தீமை செய்தவரை மன்னிப்பதே சிறந்த பண்பு. இறைவன் விரும்பும் பண்பு!" - என்று அறிவுறுத்தினார்.

இதை எழுதிய ரியாஸ் மீண்டும் படித்துப் பார்த்தான். 

கதையில் விறுவிறுப்பு இல்லை. அதை கிழித்துப் போட்டான். 

மீண்டும் சிந்தித்தான். ஒன்றும் விளங்கவில்லை. 

நேராக மாமாவிடம் சென்றான். 

"மாமா! என்னால்.. என்னால் கதை எழுத முடியவில்லை!" - என்றான்.

மாமா நடந்ததைக் கேட்டார். சிரித்துக் கொண்டவர் கதையில் சில விஷயங்களைச் சேர்க்கச் சொன்னார். 

ரியாஸ் உற்சாக மிகுதியால் துள்ளிக் குதித்தான். 

மறுபடியும் கதை எழுத ஆரம்பித்தான்.

நீங்களும் எழுதிப் பாருங்களேன்!



-- தொடரும்.

Related

சிறுவர் தொடர் 7017712809567682942

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress