ரியாஸ் எழுத்தாளனாகின்றான் -12, 'தீமை செய்வோர்க்கு நன்மை செய்!'



இரண்டு சிறுவர்கள் இருந்தார்கள்.

ஒருவன் பஷீர். சின்னவன். நல்லவன்.

அடுத்தவன் சுலைமான். நன்றாக வளர்ந்த பயல். முரடன்.

பஷீர் பள்ளிகூடத்துக்குப் போகும் வழியிலேயே சுலைமான் வீடு இருந்தது.

சுலைமான் பஷீரை சதா கேலி செய்வான்; புத்தகங்களைப் பிடுங்கி கிழிப்பான்; கிள்ளுவான்; குட்டுவான்; சமயத்தில் அடிக்கவும் செய்வான்.

நாளுக்கு நாள் சுலைமானின் தொல்லை தாள முடியவில்லை!

ஒருநாள்.

பஷீர், சுலைமானின் அப்பாவிடம் சென்றான்.

எல்லாவற்றையும் சொன்னான்.

சுலைமானுக்கு சரியான உதை கிடைத்தது. இதனால், அவனுக்குப் பஷீர் மீது பகை ஏற்பட்டது.

பஷீரைப் பழிவாங்க சுலைமான் காத்திருந்தான்.

விரைவிலேயே அந்த வாய்ப்பும் கிடைத்தது.

பஷீரை சுலைமான் விளையாடும் சாக்கில் நன்றாக அடித்துவிட்டான். மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சைப் பெறும் அளவு காயம் கடுமையாக இருந்தது.


சில நாள் சிகிச்சைக்குப் பின்னர் பஷீர் குணமடைந்தான். மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினான். 'தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவன் சுலைமான். அவனைப் பழிக்குப் பழி வாங்காமல் விடக்கூடாது!' - என்று மனதில் கருவிக் கொண்டான்.

ஒருநாள் இரவு.

"பஷீர் மகனே! கடைக்குப் போய் இந்த மாத்திரையை வாங்கிவா கண்ணா!" - என்று அம்மா சொன்னாள்.


பஷீர் சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

மருந்து வாங்கிக் கொண்டு வரும் வழியில் ஒரே இருட்டாக இருந்தது.

தெருவிளக்குகள் ஏனோ எரியவில்லை. சைக்கிளில் டைனமோ பயன்படுத்தி அந்த வெளிச்சத்தில் சைக்கிளை ஓட்டினான்.

வழியில், சாலையோரத்தில் யாரோ விழுந்து கிடப்பது தெரிந்தது. லேசான முனகல் சத்தமும் கேட்டது.

அருகில் சென்று விழுந்து கிடந்தவனை தொட்டுப் பார்த்தான் பஷீர். கைகளில் பிசுபிசுப்பாக இரத்தம் ஒட்டியது.

திடுக்கிட்டுப் போன பஷீர் சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தினான்.

டைனமோவே வேகமாக சுழல சைக்கிளை தொடர்ந்து மிதித்தான்.

டைனமோ சுற்றியதால் பளிச்சென்று வெளிச்சம் பரவியது.

கீழே கிடந்தவனை திருப்பிப் பார்த்தான்.

அது...

ரத்த வெள்ளத்தில் சுலைமான் கிடந்தான்.

சாலை விபத்தில் அடிபட்டு கீழே கிடந்தவனை பழிவாங்க ஒரு நல்ல சந்தர்ப்பம்.

"நான் சின்ன பையன் என்பதால்.. இவன் என்னை எப்படியெல்லாம வேதனைச் செய்திருக்கிறான்? விடக்கூடாது..! விடவே கூடாது!! ஒரு கல்லை எடுத்து தலை மீது போட்டுவிட்டுப் போய் விட வேண்டியதுதான்!" - என்று முணுமுணுத்துக் கொண்டான்.

பக்கத்திலேயே ஒரு பாறாங்கல் கிடந்தது.

அதை பஷீர் கஷ்டப்பட்டு தூக்கினான்.

சுலைமானின் தலையை குறிவைத்தான்.

'தலையில் கல் 'சதக்!' கென்று விழும். பிரச்சினையும் முடியும்!' - என்று கல்லை தலைக்கு மேலே தூக்கியவனுக்கு..


"நன்மையும், தீமையும் சமமாக மாட்டா! மிகச் சிறந்த நன்மையைக் கொண்டு நீர் தீமையைத் தடுத்துக் கொள்வீராக! அப்போது உம்முடன் கடும் பகைமை கொண்டிருந்தவர்கூட உற்ற நண்பராய் ஆகிவிடுவதைக் காண்பீர்!" - என்னும் திருக்குர்ஆனின் வசனம் நினைவில் வந்தது.

அப்பா அடிக்கடி ஓதிக் காட்டும் திருவசனம் அது.

மஸ்ஜிதிலும் 'இமாம் சாப்' வெள்ளிக்கிழமையில் பயான் செய்யும்போது  அந்த வசனத்தை அவன் கேட்டிருக்கின்றான்.

அந்த வசனத்தை இரண்டு, மூன்று முறை மனதில் திரும்ப திரும்ப உச்சரித்தான்.

பாறாங்கல்லை பக்கத்தில் வீசி எறிந்தான்.

"ஆம்.. இதுதான் இவனுக்குச் சரியான தண்டனை!" - என்று சொல்லிக் கொண்டான்.

அங்கிருந்து வேகமாக சென்றான். 

சென்ற வேகத்தில் ஒரு ஆட்டோவை அழைத்து வந்தான்.

சுலைமானை பக்கத்திலிருந்த மருத்துவமனையில் சேர்த்தான். உடனே அவனது வீட்டுக்கும் தகவல் தந்தான்.

கொஞ்சம் நேரத்திலேயே சுலைமானின் அப்பாவும், அம்மாவும் மருத்துவமனைக்கு வந்துவிட்டார்கள். அவர்களிடம் நடந்ததை சொல்லிவிட்டு பஷீர் வீட்டுக்குப் புறப்பட்டான்.

இப்போது, அவனது மனதிலிருந்து ஏதோ பெரும் பாரம் இறங்கியதைப் போல இருந்தது.

இது நடந்து ஒரு வாரம் கழிந்திருக்கும். 

பஷீர் வீட்டில் சைக்கிளை துடைத்துக் கொண்டிருந்தான். 

பக்கத்தில் சுலைமான் வந்து நிற்பதையும் அவன் கவனிக்கவில்லை.

"பஷீர்..!" - என்று சுலைமான் மெதுவாக அழைத்தான்.


சுலைமான் கண்களில் கண்ணீர் திரண்டிருந்தது.

"பஷீர்.. ! என்னை மன்னிச்சிடுடா..!" - சுலைமான் பஷீரின் கைகளைப் பிடித்துக் கொண்டான். 

இருவரும் கட்டித் தழுவிக் கொண்டார்கள்.

 பகை விலகி நட்பு மலர்ந்தது.

கதையை படித்த மாமா.. "அருமை..! அருமை..!!" - என்று ரியாஸை பாராட்டினார்.


"இனி இதேபோல, கதைகளை எழுது!" - என்று உற்சாகப்படுத்தினார்.

 
நீங்களும் இனி கதை எழுதலாம்.. சரிதானே!



- தொடரும். 

Related

சிறுவர் தொடர் 4425732774159466647

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress