ரியாஸ் எழுத்தாளனாகின்றான்: 13, ''சிறுகதை எழுதுவது எப்படி?''
http://mazalaipiriyan.blogspot.com/2012/12/13.html
ரியாஸ் இப்போது பத்து-பதினைந்து கதைகளை எழுதிவிட்டான். மாமா அவனிடம் ஒரு புத்தகம் தந்தார். சிறுகதைகளின் தொகுப்பு அது. அவன் அதை ஆவலுடன் வாங்கிப் படித்தான். ஒவ்வொரு கதையும் அருமையாக இருந்தது. எல்லாக் கதைகளையும் மட மடவென்று படித்து முடித்துவிட்டான். அதைப் படித்ததும் இதுவரை தெரியாத பல செய்திகள் அவனுக்குத் தெரிந்தன.
கதாசிரியர் சில கதைகளை முடிவிலிருந்து தொடங்கி பின்னோக்கிச் சென்று சம்பவங்களைச் சொல்லி இருந்தார்.
சில கதைகள் நடுவிலிருந்து தொடங்கின.
இன்னும் சில கதைகளிலோ இரண்டு நபர்களின் உரையாடல்களிலிருந்து கதை ஆரம்பமானது.
சில சந்தேகங்களும் எழுந்தன. அவற்றைத் தெளிவுபடுத்திக் கொள்ள ரியாஸ் மாமாவிடம் சென்றான்.
அவனைக் கண்டதும் மாமா, "என்ன ரியாஸ்? கதைகளைக் படித்துவிட்டாயா? ஏதாவது சந்தேகமா?" - என்று விசாரித்தார்.
ரியாஸ் தான் புரிந்து கொண்டதையும், தனக்கு ஏற்பட்ட சந்தேகங்களையும் வெளிப்படையாக சொன்னான். மாமா அதைக் கேட்டு புன்னகைத்தார். சொன்னார்:
"ரியாஸ்! சிறுகதை என்பது, ஒரு சம்பவம் அல்லது ஒரு வரலாற்று நிகழ்வு அல்லது ஏதாவது பார்த்தது அல்லது கேட்டது இவற்றால் மனதில் ஏற்படும் பாதிப்பு .. இவற்றை எழுத்தில் வடிப்பது. இதை படிப்பவரிடையே தாக்கத்தை உருவாக்கும் விதத்தில் எழுத வேண்டும். அதை எங்கிருந்து எப்படி ஆரம்பித்தாலும் சரியே!"
"சிறுகதைக்கு, தலைப்பு.. ஆரம்பம்... சொல்லப்போகும் செய்தி.. பாத்திரங்களின் நடமாட்டம், முடிவு இவையெல்லாம் முக்கியமானவை!"
"சிறுகதை எழுதுவது கொஞ்சம் சிரமமானது. ஆனால், முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை. பயந்துவிடாதே!"
"ரியாஸ் நன்றாக ஞாபகம் வைத்துக் கொள்! சிறுகதை படிப்பவரிடையே தாக்கத்தை உருவாக்க வேண்டும். அதேசமயத்தில் கதாசிரியரின் வலுக்கட்டாயமான எந்த திணிப்பும் இருக்கக் கூடாது"
"இந்த விளக்கம் போதும்..! இனி நீ சிறுகதையை எழுதலாம். .. வழக்கம் போல!"
மாமா சொன்னதை எல்லாம் ரியாஸ் கவனமாக கேட்டுக் கொண்டான். நன்றாக யோசித்து ஒரு சிறுகதையை எழுத ஆரம்பித்தான்.
"அய்யா! என்னைக் காப்பாத்துங்க.. காப்பாத்துங்க..!-" என்று அவருடைய கால்களைப் பிடித்துக் கொண்டு சிறுவன் அழுதான்.
செல்வந்தருக்குப் பாவமாய் போய்விட்டது. இரக்கக் குணம் கொண்ட அவர் சிறுவனை எழுப்பி நிறுத்தினார். அதற்குள் ஒரு முரடன் ஓடி வந்தான். சிறுவனின் கையைப் பிடித்துக் கொண்டான்.
"ம்.. நட.. அறிவு கெட்டவனே! வா.. உன்னை வீட்டில் கவனித்துக் கொள்கிறேன்!" - என்று கூச்சலிட்டான்.
சிறுவன் தன் தம்பி என்று சொல்லி முரடன் அவனை இழுத்துச் சென்றான்.
செல்வந்தரும் மற்றவர்களும் அவர்கள் போவதையே பார்த்தவாறு நின்றார்கள்.
ரியாஸ் கதையை எழுதி முடித்தான். மாமாவிடம் காட்டினான். அது அவருக்குப் பிடிக்கவில்லை என்பது அவரது முகத்திலிருந்தே தெரிந்தது. முகத்தைச் சுளித்தார். உதடுகளைப் பிதுக்கினார்.
"ரியாஸ்! சிறுகதை என்பது படிப்போருக்கு சில படிப்பினைகள் தர வேண்டும். அதுவும் குறிப்பாக படிப்போருக்கு நல்லதைப் போதித்து, தீமையிலிருந்து விலகச் செய்ய வேண்டும். இதுவே சிறந்த சிறுகதையாகும்!". - என்று அறிவுறுத்தினார்.
ரியாஸ் மறுபடியும் வேறொரு கதையை எழுதத் தொடங்கினான்.
நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்!
--- தொடரும்