சாந்திவனத்து கதைகள்: "அவரவர் தகுதி... "சாந்திவனம் விழாக்கோலம் பூண்டிருந்தது. சாந்திவனவாசிகள் ஒவ்வொன்றின் முகத்திலும் உற்சாகம் கொப்பளித்துக் கொண்டிருந்தது. மரங்கள் எங்கும் வண்ண வண்ணக் கொடிகள் பறந்து கொண்டிருந்தன.

"என்னவாயிற்று சாந்திவனத்துக்கு.. ? எல்லோர் முகத்திலும் ஏனிந்த உற்சாகப் பெருமிதம்?""

காட்டில் நுழைந்து பார்ப்போமா?

 ஒருபுறம் முயல்கள் பனியன், கால்சட்டை சகிதமாக உடலை ஆட்டிக் கொண்டும்.. கால்களை உதைத்துக் கொண்டும் பயிற்சி செய்து கொண்டிருக்க .. 
இன்னொருபுறம்... பருந்துகள் இறக்கைகளை படபடத்துப் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தன!

அணில் கூட்டத்தார் "கிச்..கிச்" - என்று மரம் விட்டு மரம் தாவிக் கொண்டிருந்தன. 

வாத்துக்களோ நடைப் பயிற்சி செய்து கொண்டிருந்தன. 


ஓ.. சாந்திவனத்தில் ஏதோ விளையாட்டு விசேஷம் போலிருக்கிறது. 

அதோ..! அங்கே ஒரு மூலையில் அணில், வாத்து, முயல், பருந்து முதலியவை ஏதோ ஆலோசனை செய்து கொண்டிருக்கின்றனவே!

"வருடா வருடம் எனக்கு ஓட்டப் பந்தயத்தில் ஓடி... ஓடி போரடிக்குது. அதனால், இந்தமுறை நாளை நடக்கவிருக்கும் ஆண்டு விழாவில் நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு சாம்பியன் பட்டம் வாங்கிடணும்!"


"ஓய் முயலாரே! நீர் சொன்னதும் சரிதானய்யா..! எனக்கும் ஒவ்வொரு முறையும் பறக்கும் போட்டியில்  கலந்து கொண்டு அலுத்துப் போச்சு. இந்தமுறை நானும் வித்யாசமா மரமேறுதலில்   கலந்து கொள்ளலாமென்றி ருக்கிறேனய்யா..!"

"பருந்து அண்ணாச்சி...! சரியாகச் சொன்னீங்க.  நானும் எத்தனை முறை மரமேறி மரமேறி மெடல்களை வாங்கி குவிக்கிறது? இந்த முறை நான் பறக்கும் போட்டியில் கலந்துகொள்ளப் போறேன்!"

"ஓ ஹோ...! உங்களுக்கும் இதே நிலைதானா? பேஷ்.. பேஷ் அணிலாரே! இந்த முறை நான் ஓட்டப் பந்தயத்தில் கவந்துக்கப் போறேனாக்கும்! உங்களைப் போலவே எனக்கும் நீந்தி.. நீந்தி.. போரடிக்குது!" - என்றது குள்ளவாத்து உற்சாகத்துடன்.

இவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த எறும்பு, வாயில் வைத்திருந்த உணவுப் பண்டத்தைக் கீழே வைத்து விட்டுச் சத்தமாக சொன்னது:

"தோழர்களே! உருப்படும் வழியைப் பாருங்கள்! வேண்டாம்.. வீண் வம்பு!"

"ஓய் எறும்பாரே! உம் வேலையைப் பார்த்துட்டுப் போம்! எங்களுக்கு புத்திமதி சொல்ல உமக்கு மூளைப் போதாது!" - என்றது அணில் கேலியுடன்.  

"ம்... யாருக்கு புத்தியில்லை என்று காலம்தான் பதில் சொல்லணும்!"- என்று வருத்தப் பெருமூச்சு விட்டுக் கொண்டே எறும்பு மீண்டும் கருமமே கண்ணானது. 

 பந்தய மைதானம் முழுவதும் சாந்திவனவாசிகளால் நிரம்பியிருந்தது. பல நிறங்களில் விதவிதமான உடைகளை உடுத்திக் கொண்டு மகிழ்ச்சியுடன் நின்றிருந்தன.

பெரிய மரத்தின் மீது அமர்ந்து கொண்டு விளையாட்டு வர்ணனை செய்து கொண்டிருந்தது காகம்:


"தோழர்களே! இதோ நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஓட்டப் பந்தயம் இன்னும் சிறிது நேரத்தில் துவங்க இருக்கிறது. இதில் விசேஷம் நீச்சல் வீரர் வாத்தார் கலந்து கொள்வதுதான்!" - என்று காக்கைச் சொன்னதும் பந்தய மைதானம் முழுவதும் ஆரவாரம் எழுந்தது.

ஓட்டப்பந்தய வீரர்கள் மத்தியில் குள்ளவாத்தும் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நின்றிருந்தது.

ஒரு பாறையில் அமர்ந்திருந்த சேவல் எழுந்து நின்று "ரெடி!"- என்றதும் அனைத்து ஓட்டப் பந்தய வீரர்களும் வெள்ளைக் கோட்டினருகே வந்து ஓட மண்டியிட்டு அமர்ந்தன.

"கொக்கரக்கோ..! கோ...!"

- சேவல் கூவியதும், பந்தய வீரர்கள் வில்லிருந்து விடுபட்ட அம்புகளாய்ப் பாய்ந்தன.

 குள்ளவாத்தும் தனது தடித்த உடலைத் தூக்கிக் கொண்டு ''குடு ... குடு.''. என்று அசைந்து அசைந்து ஓடிக் கொண்டிருந்தது கடைசியாக.

ஓட... ஓட.. ''மொடக்''- என்று சத்தம் கேட்டது. அதைத் தொடர்து வாத்தும் நொண்டிக் கொண்டே ஓடி கீழே விழுந்தது. 

"என்னவானது அதற்கு..? ஓ..! எலும்பு முறிவு!"

அடுத்த நிமிஷம் 108 ஆம்புலன்ஸிலிருந்து ஸ்டெச்சரோடு இறங்கின குரங்குகள். வாத்தை மெதுவாகத் தூக்கி ஆம்புலன்ஸில் ஏற்றிக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தன.

 பறக்கும் போட்டி!

உயர்ந்த மரத்தின் மீது பறக்கத் தயாராய் அமர்ந்திருக்க.. அணிலும் ஓர் உச்சிக் கிளையில் வாலை ஆட்டிக் கொண்டு தயாராய் நின்றிருந்தது. 

"கொக்கரொக்கோ...கோ...!"

சேவல் கூவியதும் உச்சிக் கிளையில் அமர்ந்திருந்த பறவைகள் ''விர்ரென்று'' மேலெழுந்து பறந்தன. 

மரத்தின் உச்சியிலிருந்து ஓடிப் பாய்ந்த அணில் ''பொதக்கடீர்''- என்று கீழே விழுந்து மண்டை உடைய 108 வந்தது.

நீச்சல் போட்டி!

நீச்சல் குளத்தருகே தயாராய் நீச்சல் வீரர்கள்.

"கொக்கரக்கோ... கோ...!"

ஒரே பாய்ச்சலாய் தண்ணீருக்குள் குதித்தது முயல். குளத்தின் ஆழத்தை ஒன்றுக்கு  இரண்டு தடவை தொட்டுவிட்டு மேலே வந்தது. அடுத்தமுறை உள்ளே போவதற்குள்.. தயாராய் பாதுகாப்புப் படைகளில் சுற்றிக் கொண்டிருந்த அன்னப் பறவைகள் முயலைத் தூக்கி படகில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பின.மரம் ஏறும் போட்டியில் வரிந்துகொண்டு பருந்து நின்றிருந்தது. 

"கொக்கரக்கோ... கோ..!"

சேவல் கூவியது.

ஒரே தாவலில் மரத்தின் மீதேறிய குரங்குகள் கிளைக்குக் கிளைத் தாவி மரத்தின் உச்சியை அடைந்தன.

பருந்தோ இறக்கைகளால் மரத்தின் தண்டைப் பிடித்துக் கொண்டு அலகால் மரப்பட்டைகளைப்  கொத்திப் பிடித்து மரமேற முயன்றது. இறக்கைகள் முறிந்து அய்யோ என்று அலறிக் கொண்டு கீழே விழுந்தது. மயக்கமுற்றது.108 ஆம்புலன்ஸில் விரைந்து வந்த குரங்குள் பருந்தை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றன. 

மருத்துவமனை.

குள்ளவாத்து, முயல், அணில், பருந்து சோர்வுடன் தத்தமது படுக்கைகளில் படுத்திருந்தன. தனது தோழர்கள் சகிதமாக எறும்பு அங்கு வந்தது. தன்னுடன் கொண்டு வந்திருந்த ஆப்பிள், பழத்துண்டுகளை மேசையில் வைத்தது. படுத்திருந்தோரின் உடல் நிலைக்குறித்து விசாரித்தது. 

எறும்பின் அறிவுரையைத் தாங்கள் புறக்கணித்ததும், அதை அலட்சியமாக ஏசியதையும் நினைவில் வந்தது. ஆனாலும், எறும்பு தங்கள் மீது நேசம் கொண்டிருந்ததை நேரிடையாகவே கண்டன. இது அவைகளை நெகிழச்  செய்தது. அவை மௌனமாக கண்ணீர் விட்டன.

"எங்களை மன்னித்துவிடுங்கள் எறும்பாரே!"- என்றன நா தழு தழுக்க.

அவைகளின் கண்ணீரை துடைத்துவிட்டுக் கொண்டே எறும்பு சொன்னது:

"எனதருமை தோழர்களே! நம் அனைவருக்கும் ஒவ்வொரு திறமை அமைந்துள்ளது. முயலாரைப் போல யாரால்தான் ஓட முடியும்? பருந்து அண்ணாச்சியைப் போல யாரால் வானத்தில் வட்டமிட முடியும்?அழகிய அணில் அண்ணா மரம் ஏறும் அழகே அழகுதானே? வாத்து மாமாவைப் போல நீரில் நீந்தி குட்டி கர்ணம் போட யாரால் முடியும்?

ஆனால், போட்டிகளில் நடந்தது ஏறுக்கு மாற்றமான செயல்கள் அல்லவா? அவரவர் தகுதிக்கு புறம்பாக நடந்ததால்.. உண்டான விளைவுகள்தானே இவை?

 நடந்ததை மறந்து இனியாவது இறைவன் நமக்களித்துள்ள திறமைகளை சரியான முறையில் பயன்படுத்தி நிம்மதியாக வாழலாம் வாருங்கள்!!"
Related

சாந்திவனத்து கதைகள் 7220803011418792853

Post a Comment

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress