ரியாஸ் எழுத்தாளனாகின்றான் - 16, 'உயிர்களிடம் இரக்கம் கொள்!'
http://mazalaipiriyan.blogspot.com/2013/01/16.html
அடுத்தவர் துன்பத்தை தன் துன்பமாக கருதுவதும், பிறருடைய துன்ப துயரங்களில் உதவுவதும், "உயிர்களிடம் இரங்குதல்" என்பதன் உண்மைப் பொருளாகும். பிற உயிர்களை நேசிப்பவனே நல்ல மனிதனாவான்.
ஒருவருக்கு ஒருவர் இரக்கம் கொண்டு வாழ்வதே மனித வாழ்க்கையாகும். உலகிலுள்ள எல்லா படைப்புகளும் ஒன்றுடன் மற்றொன்று உதவியாகவும், பயன்படத்தக்கதாகவும் உள்ளன.
பிள்ளைகள் பெற்றோருக்கு இரக்கம் காட்ட வேண்டும். இல்லையென்றால்.. முதியோர் வாழ்வில் அமைதி பறிபோகும். முதியோர் இல்லங்கள் பெருகும்.
அப்பா-அம்மா இருவரிடையேயும் இரங்கும் தன்மை வேண்டும். இல்லையென்றால்.. வீட்டுக் காரியங்கள் ஒழுங்காய் நடக்காது.
அண்ணன்-தம்பிகளிடையே இரக்கம் வேண்டும். இல்லையென்றால் சகோதர பாசம் என்னும் 'பூ' பூக்காது!
பெற்றோர்கள் பிள்ளைகளிடம் இரக்கம் காட்ட வேண்டும். இல்லையென்றால்.. வருங்காலத் தலைமுறை செழிக்காது!
அடுத்தவர்க்கு இரக்கம் காட்டாதவன் உண்மையில் துரதிஷ்டசாலியாகவே இருக்க முடியும். ஒருவர் மற்றொருவருக்கு இரக்கம் காட்டி உதவி செய்து கொள்ளாமல் எந்த மனித சமூகமும் உலகில் வாழ முடியாது.
இந்திய வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால்.. ஒருவர் மற்றொருவருடன் இரக்கம் கொண்டு வாழாததால்.. பகைமை பிறந்தது. விரோதம் வளர்ந்தது. குரோதம் தழைத்தது. ஒற்றுமையும்- நல்லிணக்கம் சீர்க்குலைந்தது. கடைசியல், நாடு வெள்ளையரிடம் அடிமைப்பட்டது. நம் நாட்டின் செல்வங்கள் எல்லாம் அந்நிய நாட்டுக்கு கொள்ளையடிக்கப்பட்டன. இதன் தீமையைப் பெரிதாக அனுபவித்த நம் பெரியோர்கள் அன்பையும், இரக்கத்தையும் மக்கள் மனதில் விதைத்தனர். அதன் மூலம் மக்களிடையே ஒற்றுமையும், இணக்கமும் ஏற்பட்டன. விடுதலை உணர்வும், போராட்ட மனப்பான்மையும் மேலோங்கின. நாடு அந்நிய அடிமைத்தளையிலிருந் விடுதலைப் பெற்றது.
இன்று விடுதலை இந்தியாவில் நாம் அமைதி இழந்து வருகின்றோம். இதற்குக் காரணம் நம் மக்களிடையே இரக்கம், பரிவு என்ற நல்ல குணங்கள் தொலைந்து போனதுதான்!
உயிர்களிடம் இரங்குவது சம்பந்தமான சிறந்த எடுத்துக்காட்டு ஒன்றைப் பார்ப்போம்.
ஒருமுறை. அன்பு நபியும், அவர்களுடைய தோழர்களும் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். சற்று ஓய்வு எடுக்க வழியில் கூடாரம் அமைத்துத் தங்கினார்கள்.
சக பயணிகளில் ஒருவர் குளிர் தாங்காமல் தீ மூட்டி குளிர் காய்ந்து கொண்டிருந்தார். அவரை நோக்கி நடக்கத் தொடங்கிய நபிகள் நாயகம் சட்டென்று ஓரிடத்தில் நின்றார்.
அங்கே ஒரு மண் புற்று. அதில் நிறைய எறும்புகள் இருந்தன. எறும்புகள் மண் புற்றைச் சுற்றி பற்பல வேலைகளுக்காக ஓடித் திரிந்து கொண்டிருந்தன.
அன்பு நபி பெரிதும் கவலை அடைந்தார். அற்ப உயிரினங்கள்தான் என்றாலும், அவையும் இறைவனின் படைப்புகள் அல்லவா?
உடனே அன்பு நபி குரல் கொடுத்தார்கள்:
" யார் அங்கே தீ மூட்டியது?"
குளிர் காய்ந்து கொண்டிருந்தவர் பதறி எழுந்தார். நான் இறைத்தூதர் அவர்களே! என்ன விஷயம்?" - என்று புரியாமல் நின்றார்.
"முதலில் அந்த நெருப்பை அணையுங்கள்.. உம் சீக்கிரம்!"
அன்பு நபிகளாரின் குரலில் பதட்டம் இருந்தது. எறும்புகள் எங்கே தீயில் சிக்கி உயிரிழக்க நேருமோ என்ற பரிதாபத்தால் எழுந்த பதட்டம் அது.
அன்பு நபியின் கட்டளைக்கு அந்தத் தோழர் கீழ்ப்படிந்தார்.
தீயும் அணைக்கப்பட்டது.
அவருடைய தோழர் விஷயம் என்னவென்று புரிந்து கொள்ள சுற்று முற்றும் பார்த்தார். நபிகளாரின் பதற்றம் அவருக்கும் புரிந்தது.
அற்ப ஜீவிகளான எறும்புகளின் உயிர்களுக்குக் கூட இந்த அளவு மதிப்பும், கண்ணியமும் அளித்த அன்பு நபி அந்தத் தோழரின் உள்ளத்தில் இமய மலையை விட அதிகம் உயர்ந்து நின்றார்.
இத்தகைய குணத்தை நாமும் பெற வேண்டும். ஒருவர் மற்றவரை நேசிக்க வேண்டும். பூமி எங்கும் அமைதி நிலவ செய்ய வேண்டும்.
கட்டுரை முடிந்தது.
மாமா "சபாஷ்!" என்று ரியாஸைப் பாராட்டினார்.
இப்போது ரியாஸீத்தீன் கட்டுரை எழுதவும் தெரிந்து கொண்டான்.
"இனி என் பேனா நல்ல செய்திகளைத் தவிர வேறெதையும் எழுதாது!"- என்று அவன் சூளுரைத்துக் கொண்டான்.
நீங்களும் தானே?
- முடிந்தது.