'புற்களா? பலா மரங்களா?'
http://mazalaipiriyan.blogspot.com/2013/02/blog-post_10.html
புற்கள், பூச்செடிகள் வானுயர வளர்ந்த விருட்சங்கள், புழுப்பூச்சிகள், பறவைகள், ஆடு-மாடுகள், கொடிய விலங்குகள், மனித சாதி அனைத்தும் பூமி மீதே வாழ்கின்றன. அவற்றின் வாழ்வாதரங்களும் பூமியிலிருந்தே பெறப்படுகின்றன.
அனைத்து ஜீவராசிகளுக்கும் வாழ்க்கை அமைப்புகள் வேறு. வாழ்க்கை நிலைமைகள் வேறு. வாழ்க்கை சூழல்கள் வேறு .. வேறு. இவை அனைத்தும் தத்தம் நிலைகளில் .. தத்தமது வட்டங்களில், தத்தமது லட்சியங்களில் நிலைத்திருக்கின்றன. அந்த நிரந்திர சூழற்சியில் ஒன்றியிருக்கின்றன.
இது கண்ணுக்குப் புலப்படும் சத்தியம். புத்தி ஏற்றுக் கொள்ளும் நிஜம்.
படைப்புகளிலேயே அதி உத்தம, உன்னதமான படைப்பு மனிதன். அவனது வாழ்க்கையும் லட்சியங்கள், குறிக்கோள்கள், இலக்குகளின் அடிப்படையிலேயே அமைந்திருக்கின்றது. மற்ற படைப்புகளைவிட மனிதனிடம் ஏதாவது விசேஷ தன்மைகள் உள்ளனவா? என்றால் .. "ஆம்!" - என்ற பதில் உள்ளத்தில் பிறக்கவே செய்கிறது. தான் சேர வேண்டிய இலக்கைக குறித்தும், பயணிக்க வேண்டிய வாழ்க்கைப் பாதைக் குறித்தும் மன விருப்பப்படி தேர்ந்தெடுத்துக் கொள்ள சுய அதிகாரம் அவனுக்கு மட்டும் அளிக்கப்பட்டுள்ளது. பகுத்தறிவு மூலமாக, புத்தி-ஞானத்தின் மூலமாக மனிதன் சாதித்த சாதனைகள் கண்முன் விரிகின்றன. மனிதன் இயற்கையை, அறிவு சங்கிலிகளால் பிணைத்து அடக்கிக் கொண்டிருப்பதும் புரிந்து கொள்ள முடிகிறது.
தன்னுடைய லட்சியத்தையும், வாழ்க்கைப் பாதையையும் தேர்ந்தெடுத்துக் கொள்ள மனிதனுக்கு பிரத்யேகமாக அளிக்கப்பட்டுள்ள சுயசுதந்திரத்தைப் பயன்படுத்தி பல புத்தம் புதிய வழிமுறைகளைஅவன் நடைமுறைப்படுத்தினான். அலங்கார வாழ்க்கைப் பாதையில் அதி வேகமாக பயணித்தான். கூடவே பல புதிய அனுபவங்களைப் பெற்றான்.
இது காலம் எடுத்துரைக்கும் சாட்சிகளாகும்.
உன்னத குறிக்கோளை, உத்தம லட்சியத்தை தேர்ந்தெடுத்துக் கொண்டவன் நடைபோடும் பாதை இலகுவாக இருக்கும்.. பிரகாசமாக இருக்கும் என்பது நிச்சயமல்ல.
- குறிக்கோளும்,
- இலட்சியமும்,
- வழிமுறைகளும்
பிரதானமாக.. உயிர்மூச்சாக இருந்தால் பயணப்பாதையைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமேயில்லை.
எதிர்ப்புகள் இமயமாய் எழுந்து நிற்கலாம். அடிக்கு அடி தடைகளாகி தள்ளாட வைக்கலாம். பிச்னைகள் கற்களாய்.. முற்களாய் துயருறச் செய்யலாம். மொத்த பிரபஞ்சமே ஒரு தடுப்புச் சுவராய் எழுந்து நிற்கலாம்.
மன இச்சைகள் அவற்றின் கூப்பாடுகள்... கூக்குரல்கள்.. கெஞ்சல்கள்.. கொஞ்சல்கள், மனைவி-மக்களின் ஆசை - அபிலாஷைகள், பெற்றோர்-உற்றார், உறவினர் கோரிக்கைகள் மொத்தமாய் முட்டுக்கட்டையாய் தடைபோடலாம். இவைகளிலிருந்து விடுபட்டு, போராடி பாதையில் முன்னேறுவது அனைவருக்கும் சாத்தியமற்ற செயலாக இருக்கலாம்.
இவைகளை எல்லாம் கடந்து முன்னேற வேண்டுமென்றால்.. இத்தடைகளை தூள்.. தூளாக்க வேண்டுமென்றால்.. மனம் நிறைய இலட்சியங்கள், எஃகாய் இலட்சியங்கள், அதை சிறிதும் இழக்காத மனோதிடம், வெற்றியை எப்பாடு பட்டாவது ஈட்டிட வேண்டுமென அலைகடலாய் பொங்கியெழும் உணர்வுகள், தியாக மனம், தொலை நோக்கு பார்வை, மன ஓர்மை ஆகியவைகளைப் படிகளாக்கி தம் பாதையில் முன்னேற வேண்டும். இவற்றில் எது ஒன்று குறைந்தாலும் பிரபஞ்சத்தின் முன் மனிதன் பலமுறை தலைக்குப்புற விழ வேண்டியிருக்கும்.
இந்த அரிய பண்புகள் மனிதனுக்கு கிடைக்க வேண்டுமென்றால்..
தூய்மையான இதயம், அதில் சதா கமழும் நற்சிந்தனைகள், அதன் விளைவாய் வெளிப்படும் 'பரிசுத்த' செயல்கள்... இவை தேவை!
ஆம்!
அது ஒரு மெளன தவம்!
தன்னை, தன் சிந்தனைகளை, எண்ணங்களை அனைத்தையும் ஒருங்கிணைத்து தன் ஆணைக்கொப்ப செயல்படுத்தும் ஒரு மௌன தவம்!
இலட்சியங்கள் உன்னதமானதாக இருந்தால்.. அவற்றின் விளைவுகளும் உன்னதமானதாகவே இருக்கும். அற்ப மனதுடன், கீழ்த்தரமான இலட்சியங்களுடன் செயல்படும்போது, அதன் விளைவுகளும் .. பலா பலன்களும் மோசமானவையாகவே இருக்கும்.
'புற்'களுக்கான அதிக சிரத்தை எடுக்க வேண்டிய அவசியமேயில்லை. அவை தாமே முளைக்கும்; தாமே வளரும்; தாமே கருகிவிடும்!
ஆனால், தேனாய் தித்திக்கும் சுவைதரும் 'பலாச்சுளைகள்' வேண்டுமென்றால்.. விதை மண்ணில் விதைக்கப்பட்டதிலிருந்து கனிதரும் காலம்வரை ஒரு போராட்டம் ... அதே மௌன தவம் வேண்டும்.
'தான், புல்லாக முளைப்பதா? பலாச் சுளையாய் இனிப்பதா?- என்று நிர்ணயித்துக் கொள்ள வேண்டியது மனிதனே!'
ஆனால், தேனாய் தித்திக்கும் சுவைதரும் 'பலாச்சுளைகள்' வேண்டுமென்றால்.. விதை மண்ணில் விதைக்கப்பட்டதிலிருந்து கனிதரும் காலம்வரை ஒரு போராட்டம் ... அதே மௌன தவம் வேண்டும்.
'தான், புல்லாக முளைப்பதா? பலாச் சுளையாய் இனிப்பதா?- என்று நிர்ணயித்துக் கொள்ள வேண்டியது மனிதனே!'