சிறுவர் கதை: 'உள்ளத்தில் உரம் வேண்டும்!'
http://mazalaipiriyan.blogspot.com/2013/02/blog-post_4.html
மாம்பழத்தைச் சுவைத்த சிறுவன் கொட்டையை மலையின் மீது வீசி எறிந்தான். "ஹே..! ஹைய்யா..! ட்ரூ..ட்ரூ..!"- ஆடுகளை ஓட்டிக் கொண்டு சென்றான்.
மலையின் மீது விழுந்த மாங்கொட்டைக்குச் சரியான அடி.
"ஊ.. ஊ..!"- வலியால் துடித்து அழலாயிற்று.
உறங்கிக் கொண்டிருந்த மலை இந்த சத்தத்தால் தூக்கம் கலைந்து எழுந்தது.
மாங்கொட்டையை கண்டது.
"ஏய்! பொடிப்பயலே! இங்கே என்ன செய்கிறாய்? இடத்தை காலி பண்ணு சீக்கிரம்!"- அதட்டியது.
"கொர்.. கொர்.."- என்று மீண்டும் உறங்க ஆரம்பித்தது.
அடிப்பட்ட மாங்கொட்டை மெல்ல எழுந்து நடந்தது. புகலிடம் தேடி மலை மீது அலைந்தது.
இதைப் பார்த்துவிட்ட சூரியனுக்கு ஏக கோபம்.
"ஆஹா..! பொடியன் புகலிடம் தேடுகிறானே! என்ன துணிச்சல்!" - தகதகக்கும் அனலுடன் உக்கிரமான கதிர்களைப் பாய்ச்சியது.
அனல் தாளாமல் ஓரிடத்தில் ஒதுங்கிய மாங்கொட்டை, சூரியக்கதிர்களைப் பொறுமையுடன் தாங்கிக் கொண்டது. உடலிலிருந்த வியர்வை ஈரத்தை நன்றாக உலர்த்திக் கொண்டது.
அனலாய்.. பொழிந்து.. பொழிந்து சூரியன் சோர்வடைந்தது.
அங்கு வந்த மேகக் கூட்டம், "என்ன நண்பரே! என்ன விஷயம்?" - என்று விசாரித்தது.
நடந்ததைக் கேள்விப்பட்டதும், மேகத்திற்கு பொல்லாத கோபம் வந்தது.
"நான் என்ன செய்கிறேன் பார் அவனை!" - என்று கொதித்தது.
சில நிமிடங்களில் மப்பும்-மந்தாரமுமாய் திரண்ட மேகம், பூமியைத் துளைத்துவிடும் அளவுக்கு மழையாய்ப் பொழிந்து தாக்குதல் தொடுத்தது. இதைக் கண்டு மாங்கொட்டை ஆரம்பத்தில் பயந்துதான் போனது. பிறகு சமாளித்துக் கொண்டது. நெளிந்து .. புரண்டு மழையில் மிதந்தது. பாறைகளுக்கிடையே அலை மோதியது.
மழையின் போராட்டம் தோல்வியடையும் தருவாயில் அங்கு வந்த சேர்ந்த காற்று விஷயத்தை அறிந்தது. மழையுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டது.
"உய்.. உய்..!"- இரைச்சலுடன் காற்று சுழன்று.. சுழன்று அடித்தது. பயங்கரமாகத் தாக்குதல் தொடுத்தது.
மாங்கொட்டை இப்போது உண்மையிலேயே பெரும் சிக்கலுக்கு ஆளானது. தத்தளித்தது. தவித்தது. ஆனாலும், கலங்கவில்லை. சோர்ந்துவிடவில்லை. தெப்பமாக நனைந்துவிட்ட அது பாறைகளுக்கிடையே பதுங்கிக் கொண்டது.
"ஒழிந்தது சனியன்!" - காற்றும், மழையும் பெருமூச்சுவிட்டன. தாக்குதலை நிறுத்திக் கொண்டன.
பதுங்கியிருந்த மாங்கொட்டை, மெல்ல கண்விழித்தது. தோலைப் பிளந்து கால்களை மலைமீது பதித்துத் துழாவியது. ஆணிவேரை பாறைகளுக்கிடையே இறக்கியது. சல்லி.. வேர்களை மலைமீது படரவிட்டது.
தன் மீது ஏதோ ஊர்வதைப் போல உணர்ந்து மலை மறுபடியும் விழித்துக் கொண்டது. மாங்கொட்டையைக் கண்டு துணுக்குற்றது.
"ஏ! பொடியனே! இன்னுமா நீ உயிருடன் இருக்கிறாய்? மரியாதையாய் இங்கிருந்து ஓடிவிடு!" - என்று அலட்சியமாக கூறியது. வழக்கம் போலவே உறங்கிவிட்டது.
மாங்கொட்டை எதையும் சட்டை செய்யவில்லை. இன்னும் உறுதியாக முயற்சியை மேற்கொண்டது. மெல்லத் துளிர்விட்டு வளர்ந்தது. செடியானது.
ஒருநாள். அந்த வழியே சென்ற ஆட்டு மந்தையின் காலில் மிதிபட்டு மாஞ்செடி நசுங்கிப் போனது. வலியால் துடிதுடித்தது.
அதன் வேதனையைக் கண்ட மலை, "ஹி.. ஹி.. ! சொன்னால் கேட்டாத்தானே! மூஞ்சியைப் பார்.. மூஞ்சியை.." - என்று கிண்டலுடன் கைக்கொட்டி சிரித்தது.
மாஞ்செடி அதைக் கண்டு கொள்ளவேயில்லை. மலையுடன் விவாதிக்கவும் அது தயாராக இல்லை. சில நாளில் சமாளித்துக் கொண்டு நிமிர்ந்து விட்டது. துளிர்விட்டு முளைத்தது.
மற்றொரு நாள்.
செம்மறி ஆடொன்று கடித்த கடியும், பிடித்து இழுத்த இழுப்பும் மாஞ்செடி, இதுவரையும் அனுபவிக்காத வேதனையாக இருந்தது. மரண வேதனை.
ஆவேசம் கொண்ட மாஞ்செடி, இந்தமுறை ஆடு கடித்த இடத்தில் ஒன்றிற்கு இரண்டாய்ப் பக்க கிளைகளைவிட்டு இன்னும் வேகமாய் முளைக்க ஆரம்பித்தது. கிடு.. கிடு வென்று வளர்ந்தது.
மலைப்பாறை, சூரியன், மழை, காற்று அனைத்தின் எதிர்ப்புகளையும் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு மாஞ்செடி தழைத்து வளர்ந்து மரமாகிவிட்டது.
அந்த வழியே செல்லும் பயணிகளுக்கு அது ஓய்வெடுக்கும் புகலிடமாக இப்போது விளங்கியது. ஆடு-மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிவருவோருக்கு அது இதமான நிழலைத் தந்தது. சுவை தரும் கனிகளை அள்ளி அள்ளி வழங்கியது. தன்னை நாடிவரும் பறவைகளுக்குச் சரணாலயமாக திகழ்ந்தது.
ஆரம்ப காலத்தில் தன்னைக் கடுமையாக எதிர்த்த மலை, சூரியன், மேகம், காற்று முதலியவற்றின் தவறுகளை எல்லாம் மாமரம் மறந்துவிட்டது. அவைகளுடன் நேசத்துடன் பழக ஆரம்பித்தது.
ஆரம்பத்தில் கேலி செய்து அலட்சியப்படுத்திய மலைக்கு, மாமரம் நிழல் தந்தது. சமயத்தில் பழுத்த பழங்களையும் தந்து மகிழ்வூட்டியது. சுட்டிடெரிக்கும் வெய்யிலிலிருந்து மனிதர்களையும், பிராணிகளையும் பாதுகாத்து சூரியனுக்குப் புகழ் சேர்த்தது. நிலத்திலிருந்து நீரை உறிஞ்சி ஆவியாக்கி மேகத்துக்கு அனுப்பியது. இதன் மூலம் மழைப் பெய்ய மேகத்துக்கு ஒத்துழைத்தது. வெப்பமாக வீசும் காற்றை அணைத்து, அரவணைத்து குளிர்ச்சியாக்கி அனுப்பியது.
கடந்த காலப் போராட்டம் நினைவில் எழும்போதெல்லாம், மனதில் மாமரம் சிரித்துக் கொள்ளும். மௌனமாகத் தலையாட்டி ரசித்துக்கொள்ளும்.