முதலில் மன்னிப்பு கேள்!
http://mazalaipiriyan.blogspot.com/2013/02/blog-post_19.html
அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் மிகவும் புகழ் பெற்ற கல்வி நிலையமாகும். இதை நிறுவியவர் சர் சையத் (ரஹ்) அவர்கள் ஆவார்கள்.
சிறப்பு வாய்ந்த பல்கலைக்கழகத்தை நிறுவிய சர் சையத் அவர்களின் புகழ் இன்றளவும் பேசப்படுவதற்கு மூல காரணமே அவர்களின் தாயார்தான்!
சிறந்த இறையச்சமும், ஒழுக்கப் பண்புகளும் கொண்ட பெண்மணியான இவர் தம் மகனை சிறுவயது முதற்கொண்டே நல்ல பண்புகளையும், ஒழுக்கத்தையும் போதித்து வளர்ப்பதில் கவனம் செலுத்தலானார்.
சர் சையத் அவர்கள் சிறுவராக இருந்தபோது..
ஒருமுறை-
ஏதோ உணர்ச்சிவசப்பட்டு கோபம் கொண்டு சர் சையத் (ரஹ்) அவர்கள் வேலையாளை அடித்துவிட்டார்கள். தாயாருக்கு இந்த விஷயம் தெரிந்ததும், அவர்கள் மிகவும் மனம் வருத்தப்பட்டு வேதனையுற்றார்கள். உடனே மகனை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டார்கள்.
பயந்து போன சர் சையத் அவர்கள் தம் சித்தியின் வீட்டிற்கு சென்று விட்டார்கள். மீண்டும் வீட்டிற்கு திரும்பிச் செல்ல தைரியம் வரவில்லை.
மூன்று நாட்களுக்குப் பின் சித்தியின் துணையுடன் வீட்டை அடைந்த சர் சையத் அவர்கள் தம் செயலுக்கு வருந்தி மன்னிப்பு கேட்டார்கள்.
"நீ எதுவரை அந்த வேலையாளிடம் சென்று உன் தவறுக்கு மன்னிப்பு கேட்கவில்லையோ .. அதுவரை நானும் உன்னை மன்னிக்கத் தயாராக இல்லை. வீட்டிலும் உனக்கு இடமில்லை!"-என்று அவருடைய தாயார் உறுதியாகக் கூறிவிட்டார்கள்.
கடைசியாக, வேலையாளிடம் சென்று சர் சையத் அவர்கள் தம் செயலுக்கு வருந்தி மன்னிப்புக் கேட்டார்கள். அதன் பின்னர்தான் அந்தத் தாயின் முகத்தில் சந்தோஷம் பூத்தது. மகனை அருகில் அழைத்து அணைத்துக் கொண்டு புத்திமதி சொன்னார்கள்.
தாயாருடைய அந்த போதனையை சர் சையத் (ரஹ்) அவர்கள் உயிருள்ளவரை கடைப்பிடித்தார்கள். அதனால் மகிவும் பணிவுள்ள, அன்புள்ள, இரக்கம் கொண்ட மென்மையான மனிதனாக திகழ்ந்தார்கள்.
சர் சையத் அவர்கள் எப்போதும் வேலையாட்களுடன் மென்மையாகவும், சிரித்த முகத்துடனும் பழகுவார்கள். அவர்களின் இன்பத்திலும், துன்பத்திலும் பங்கு கொள்வார்கள். ஏழை-எளியோரின் பாசத்தற்குரிய தோழராக அவர்கள் இருந்தார்கள்.
அம்மாவின் கண்டிப்பு தேனினும் இனியது அல்லவா?