அறிவமுது: 'கரிக்காத உப்பு'



குட்டையோரம் அமர்ந்திருந்தான் ஓர் இளைஞன். முழங்கால்களுக்கிடையில் முகம் புதைத்து பெரும் சோகத்தில் அவன் இருந்தான். 

அவ்வழியே சென்று கொண்டிருந்த ஒரு துறவி அந்த இளைஞனைக் கண்டார். அவனருகே வந்தார். அவனது சோகத்துக்கான காரணத்தைக் கேட்டறிந்தார். அவன் மீது பரிதாபம் கொண்டார். 

இளைஞனின் அருகே அமர்ந்த துறவி தனது கையிலிருந்த மண் குடுவை ஒன்றை எடுத்தார். குட்டையிலிருந்து சிறிது நீரை மொள்ளும்படி இளைஞனிடம்  சொன்னார். 

துறவி சொன்னபடியே அந்த இளைஞனும் செய்தான். "இந்தாருங்கள்! அய்யா!" -  என்று பயபக்தியுடன் நீர் நிரம்பிய குடுவையையும் நீட்டினான். 

துறவி மீண்டும் தன்னிடமிருந்த உப்பிலிருந்து ஒரு பிடியை இளைஞனிடம் கொடுத்து, "மகனே! இதை குடுவையில் உள்ள தண்ணீர் கரைத்துவிடு!" - என்றார். 

இளைஞனும் அவ்வாறே செய்தான். 

புன்முறுவலுடன் துறவி உப்பு கரைத்த குடுவையை இளைஞனிடம் கொடுத்தார். 

"குழந்தாய்! இதை குடி!" - என்றார்.

ஒரு மிடறுகூட குடித்திருக்கமாட்டான். இளைஞனின் முகம் அஷ்ட கோணலானது. குமட்டலுடன் நீரை கீழே துப்பிய இளைஞன், "அய்யா, நீர் குடிக்க முடியாதளவு உப்பால் கரிக்கிறது!" - என்றான்.

மீண்டும் புன்முறுவல் பூத்த துறவி, இன்னொரு கைப்பிடியளவு உப்பை எடுத்து இளைஞனிடம் கொடுத்தார்.

"மகனே, இதை எதிரில் உள்ள குட்டையில் கரைத்துவிடு!" - என்றார்.

இளைஞனும் துறவியார் சொன்னபடியே செய்தான். 

இப்போது துறவியர் சொன்னார்: "மகனே! குட்டையில் உள்ள நீரை சிறிதளவு குடித்துப் பார்!" - என்றார்.

இளைஞனும் துறவியார் சொன்னபடியே குட்டையிலிருந்த நீரை இரு கரங்களாலும் எடுத்து திருப்தியாக குடித்து முடித்தான். 

"மகனே! நீரின் சுவை எப்படியிருக்கிறது?" - என்று கேட்டார் அந்த துறவி.

"நல்ல சுவையாக.. உப்பின் கரிப்பு தெரியாமல் இருக்கிறது அய்யா!" - என்றான் இளைஞன்.

துறவியார் இப்போது வாய்விட்டு சிரித்தார். அவனது கரங்களைப் பற்றிப் பிடித்துக் கொண்டார். மென்மையான குரலில் இப்படி சொன்னார்:

"மகனே, அதே நீர் .. அதே ஒரு கைப்பிடி அளவு உப்பு.. ஒன்று கரிக்கிறது. மற்றொன்று  கரிப்புத் தெரியாமல் சுவைக்கிறது!

இந்த உப்பைப் போன்றதுதான் நமது துன்பங்களும்..  அளவில் மாறாதவை.. எப்போதும் ஒன்றுபோல நம்மை வருத்துபவை. 

ஆனால், அந்த துன்பங்களின் சுவை அதாவது தாக்கம் நாம் கையாளும் விதத்தில் இருக்கிறது. சிறிய குடுவை நீர் கரித்தது போல! குட்டையின் நீர் கரிப்புத்தன்மையில்லாமல் சுவையாக இனித்தது போல தான் இவையும். 

மகனே! நீ துன்பத் துயரங்களில் இருக்கும் போது உனது மனதை விரிவாக வைத்துக் கொள்! குடுவையைப் போல இல்லாமல் ஒரு குட்டையைப் போல!"

இளைஞனின் அறிவுக் கண் திறந்தது. துறவிக்கு நன்றி சொன்னவன்.. நெஞ்சு நிறைய காற்றை இழுத்துவிட்டுக் கொண்டான். உடல் நிமிர்ந்து வீட்டை நோக்கி நடந்தான்.


Related

அறிவமுது 9001961629342114954

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress