சாந்திவனத்து கதைகள்: 'சட்டத்திற்கு கட்டுப்படு'
http://mazalaipiriyan.blogspot.com/2013/03/blog-post_20.html
சாந்திவனத்து அரசரான சிங்கம் குறுக்கும், நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தது. அதன் உள்ளத்தில் பலவிதமான எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தன.
சற்று நேரத்தில், அங்கு வந்த காவலாளியான புலி, " அரசே! தங்கள் உத்திரவுப்படி நீதிபதி அவர்களை அழைத்து வந்திருக்கின்றேன்" - என்று பணிவுடன் சொன்னது.
"நல்லது..! நீ போகலாம்!" - என்று புலியை அனுப்பிவிட்ட சிங்கம், யானையை வரவேற்றது:
"வாருங்கள்! வாருங்கள்! நீதிபதி அவர்களே! இப்படி அமருங்கள்!"
"அரசர் மீது சாந்தியும்-சமாதானமும் பொழிவதாக!" - என்று வாழ்த்திவிட்டு யானை இருக்கையில் அமர்ந்தது.
"நீதிபதி அவர்களே! நாளை நடக்கவிருக்கும் வழக்கைக் குறித்து ஏதாவது ஆலோசித்தீர்களா?"
"யோசித்துக் கொண்டிருக்கின்றேன் அரசே! இதுவரையும் ஒன்றும் புலப்படவில்லை!" - என்று பதிலளித்த யானை கண்களை மூடி மௌனமானது.
சிறிது நேரம் கழித்து யானை சொன்னது:
"அரசே! ஒரு யோசனை!"
சிங்கத்தின் அருகே சென்ற யானை, அதன் காதில் ரகசியமாக ஏதோ சொன்னது. அதைக் கேட்டு மகிழ்ந்த சிங்கம், "அற்புதமான யோசனை! அவ்வாறே செய்வோம்!" - என்று யானையைப் பாராட்டியது.
மறுநாள்.
நீதிமன்றம் களை கட்டியது.
ஆலமரத்தைச் சுற்றி "ஜே..ஜே" - என்று கூட்டம் அலைமோதியது.
சாந்திவனவாசிகள் அனைத்தும் அந்தப் பிரச்னையுடன் தொடர்புடையவையாக இருந்ததால்.. அவை ஆவலுடன் கூடியிருந்தன.
சிங்கம் எழுந்து நின்று பேசலாயிற்று:
"சாந்திவனவாசிகளே! என்னருமை மக்களே! சமீபகாலமாக நம் வனத்து மரங்கள் கணிசமான அளவில் விறகிற்காக வெட்டப்பட்டு வருகின்றன.
சாந்திவனத்தின் ஒரு பகுதி அழிந்துவருகிறது. இதன் மூலம் நம் வனவாசிகள் குடியிருப்புகளை இழந்துவருவதுடன், தரிசு நிலங்களும் அதிகரித்துவிட்டன. மரங்களை இழப்பதால்... மழையின் அளவு குறைந்து நிலங்கள் தரிசாகிவிட்டதாக நம் விஞ்ஞானிகளான குரங்குக் கூட்டத்தார் கவலை தெரிவித்துள்ளனர்.
இன்னும் வெள்ளப் பெருக்கெடுப்பால்.. மண் அரிப்பு ஏற்பட்டு நிலம் அழிவிற்குள்ளாவதையும் நேரிடையாக என்னை அழைத்துச் சென்று காட்டியுளளார்கள். அதனால், நம் நலத்திற்காக வேண்டி முடிவெடுக்கவே இந்த மன்றம் கூட்டப்பட்டுள்ளது"
"மரங்கள் வெட்டக்கூடாதென்றால்.. எங்கள் அடுப்புகள் எரியாது மன்னவா..! உணவு சமைக்க முடியாமல் நாங்கள் பட்டினி கிடந்து சாக வேண்டும் என்கிறீர்களா?" - என்று மான் கூட்டத்தார் சிங்கத்தின் பேச்சை ஆவேசத்துடன் இடைமறித்தன.
"மரங்களை வெட்டாமல்.. எங்கள் ஜீவனம் நடப்பதெப்படி?"-என்று கூக்கிரலிட்டன விறகு வெட்டிப் பிழைக்கும் ஒட்டகச் சிவிங்கிகள்.
"அமைதி.. அமைதி..!" - என்றவாறு யானை எழுந்ததும் நீதிமன்றம் அமைதியானது.
"மக்களே! மரங்கள் நம் வாழ்வுடன் தொடர்புடையவை. பயன்படுத்தப்படுபவை. அதேநேரத்தில் அவற்றின் அவசியத்தையும் சற்றுமுன் அரசர் உங்களுக்குத் தெரிவித்தார். பிரச்னையின் முக்கியத்துவத்தை அறிந்து நான் சொல்வதை அமைதியுடன் ஏற்றுக் கொள்ளுங்கள்!" - யானை பேச்சை நிறுத்தியது. அங்கிருந்தோரை நோட்டமிட்டது.
எல்லோரும் அமைதியுடன் இருக்கவே திருப்தியுடன் மீண்டும் யானை பேச்சைத் தொடர்ந்தது:
".... அதனால், இன்று முதல் சாந்திவனத்தில் ஒரு சட்டம் அமலாக்கப்படுகிறது. மரங்களை வெட்டிப் பிழைப்பு நடத்தும் விறகு வெட்டிகள் முடிந்தவரை முழு மரத்தை வெட்டுவதை தவிர்க்க வேண்டும். தேவையான அளவு கிளைகளை மட்டுமே வெட்டிப் பயன்படுத்த வேண்டும். மீண்டும் அம்மரம் துளிர்விட அவகாசமளிக்க வேண்டும். வயதான மரங்களை வெட்டுபவர்கள் வெட்டிய மரத்திற்கு பதிலாக இரண்டு புதிய மரக்கன்றுகளை நட வேண்டும். அவை வளர்ந்து ஆளாகும்வரை .. பத்திரமாகப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் அவர்களைச் சார்ந்ததே!" - என்று முடித்தது.
"அபாரம்..! அபாரம்..! நல்ல யோசனை!!" - கூடியிருந்தவை யானையைப் பாராட்டின.
சாந்திவனத்தின் நலன் கருதி அச்சட்டத்தை முழுமனதுடன் ஏற்பதாக ஒப்புக் கொண்டன. அதன்படி நடக்க உறுதி பூண்டு கலைந்து சென்றன.
பிரஜைகள் நலம் நாடும் சட்டங்களும், அந்த சட்டங்களுக்கு முழுமையாகக் கட்டுப்படும் பிரஜைகளும் இருக்கும்வரை சாந்திவனத்தில் 'சுபிட்சம்' தழைக்கக் கேட்பானேன்!