குழந்தை இலக்கியம்: 'நன்மையைக் கொண்டு தீமையை தடுக்கணும் பாப்பா!'
http://mazalaipiriyan.blogspot.com/2013/04/blog-post_15.html
குமரனுக்கு பகீரென்றது.
புத்தம் புதிய செருப்பு தன் கண் முன்னாலேயே அறுக்கப்பட்டு கொண்டிருக்கிறதென்றால்..
அச்செருப்பை வாங்கிக் கொடுத்த அப்பா எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்? அழுகையும், கோபமுமாய், “டேய்! வேணாம்டா!” – தடுக்க ஓடினான்.
ஆனால், சந்திரனோ குமரன் கூப்பாடுகளை சட்டை செய்யவில்லை. அவனைச் சுற்றி நண்பர்கள் குழு. அவர்களைப் பெருமையுடன் பார்த்தவாறு பிளேடால்.. அந்த புதிய செருப்புகளின் பட்டைகளை மெதுவாக அறுத்தான். காரியம் முடிந்ததும் ஒன்றும் நடக்காததைப் போல எழுந்து சென்றான்.
அன்று விளையாட்டு வகுப்பு. செருப்பை ஓரமாய் கழட்டி வைத்து விளையாடப் போனான் குமரன். அதனால் வந்த வினை.
பெற்றோர் கஷ்டம் அறிந்து பொறுப்பாய் படிப்பவன் குமரன்.
சந்திரனோ போக்கிரி. பள்ளி மாணவர்களை அடிப்பதும், அவர்களின் புத்தகங்களைக் கிழிப்பதுமாய் சேட்டைகள் செய்வான். தலைமை ஆசிரியரால் பலமுறை தண்டனைகள் பெற்றவன்.
குமரனின் புத்தகப் பை கிழிந்திருந்தது. அதில் குத்தியிருந்த ‘சேப்டி’ பின்னை எடுத்தவன், செருப்புப் பட்டைகளில் குத்தி இணைத்தான். “போன வாரம்தான் இந்தப் பையைக் கிழித்தான். இந்தச் சட்டையிலும் அவன்தான் ‘இங்க்’ அடித்தவன். இப்போது செருப்பும் போச்சு!”
குமரன் தனக்குள் முணுமுணுத்துக் கொண்டான். சந்திரனின் தவறுகளை தாள முடியவில்லை. நேராகச் சென்று தலைமை ஆசிரியரிடம் புகார் செய்து விடலாமா என்று தோன்றியது.
“இனி ஏதாவது புகார் வந்தால் டீ.சி. கொடுத்துவிடுவதாக ‘அய்யா’ எச்சரித்து இருக்கிறாரே! பாவம்! வேண்டாம்!”
“ரெண்டு போடலாமா? வேண்டாம் வன்முறை. அது எதிர்விளைவுகளையே உருவாக்கும்!”.
அப்பா அடிக்கடி சொல்வது ஞாபகம் வந்தது: “ குமரா! தீமையை மிகச் சிறந்த நன்மையைக் கொண்டு தடுக்கணும்! அப்போது உனது கடும் பகைவர்கள்கூட உற்ற நண்பர்களாய் மாறிவிடுவதைப் பார்க்கலாம்!”
“ஆண்டவனே! சந்திரனுக்கு நல்ல புத்தியைக் கொடு!” – மனமுருக வேண்டிக் கொண்டான் குமரன்.
அன்று பள்ளி முழுக்க ஒரு பரபரப்பு. ஓடும் பேருந்திலிருந்து இறங்கியதால்… சந்திரன் கீழே விழுந்து காயமுற்றதாக செய்தி.
“அவனுக்கு நல்லா வேணும்!”
சந்திரனுக்கு யாரும் பரிதாபம் காட்டுவதாயில்லை.
விஷயத்தைக் கேள்விப்பட்டதும் குமரனுக்கு வருத்தமாக இருந்தது.
சுற்றுலா போக தான் சிறுக சிறுக சேமித்து வைத்திருந்த பணத்தை உண்டியிலிருந்து எடுத்தான். பழங்கள் வாங்கினான். மீதிப் பணத்தை ஒரு கவரில் போட்டுக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்றான்.
அரசாங்க மருத்துவமனை. அவசர விபத்துச் சிகிச்சைக்கான பிரிவு.
சந்திரனின் வலது கால் எலும்பு முறிந்திருந்தது. அதைத் தூக்கி கட்டியிருந்தனர். பக்கத்தில் அவனது ஏழைத்தாய் சோகமாக அமர்ந்திருந்தாள்.
குமரன் சந்திரனை மெதுவாய் தொட்டான். வலியால் கண்களை மூடியிருந்த சந்திரன் மெல்ல கண் திறந்தான். குமரனைக் கண்டு சிரிக்க முயன்றான்.
குமரன் கொண்டு வந்திருந்த பழங்களை படுக்கை அருகே வைத்தான். கவரை சந்திரனின் பாக்கெட்டில் செருகினான். “இதைச் செலவுக்கு வச்சுக்க சந்திரா!”- என்றான் பரிவோடு.
சந்திரனின் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது. தான் அவனுக்குப் பலமுறை தீங்கு செய்திருந்தும் குமரன் அதை மறந்து நன்மையைச் செய்தது அவனைப் பாதித்தது. அவனது அன்பும் அனுசரணையும் அவனுள் மாற்றத்தை ஏற்படுத்தியது. அவன் திருந்தி நல்லவன் ஆனான்.
அப்பா அடிக்கடி சொல்லும் அந்த அறிவுரை, “ குமரா! தீமையை மிகச் சிறந்த நன்மையைக் கொண்டு தடுக்கணும்! அப்போது உனது கடும் பகைவர்கள்கூட உற்ற நண்பர்களாய் மாறிவிடுவதைப் பார்க்கலாம்!” நிஜமானதை குமரன் கண்ணாரக் கண்டான்.
அருமை..சிறுவர்களுக்கு மட்டுமல்ல என்னைப் போன்றவர்களுக்கும் மிகச் சிறந்த அறிவுரை!!
ReplyDelete