சாந்திவனத்து கதைகள்: 'விவேகம் வெல்லும்'
http://mazalaipiriyan.blogspot.com/2013/04/blog-post_14.html
ஒருமுறை.
சாந்திவனத்து சிங்க ராஜா, சிறுத்தையின் வீட்டுக்குச் சென்றது.
குகை வீட்டிலிருந்த 'குட்டி' சிறுத்தைக் குட்டி வெளியே வந்தது.
சிங்க ராஜாவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தது. அதன் பின் அதன் பக்கத்தில் சென்று அடக்கமாக அமர்ந்தது.
சிறுத்தையிடம் உரையாடிய சிங்க ராஜா கடைசியில் சிறுத்தைக் குட்டியின் பக்கம் திரும்பியது. “குட்டிப் பயலே உன்னிடம் ஒரு கேள்வி!” – என்றது.
சிறுத்தைக் குட்டி அதே அடக்கத்துடன் சொன்னது: “கேளுங்கள் மகாராஜா!”
“ம்… சரி.. குட்டிப் பயலே உங்கள் வீடு சிறந்ததா? அல்லது எங்கள் வீடு சிறந்ததா?” – என்று சிங்கம் கேட்டது.
சிறுத்தைக் குட்டி ஒரே ஒரு நிமிடம் யோசித்தது. பிறகு தயங்காமல் சொன்னது: “ இதில் சந்தேகம் என்ன? எங்கள் வீடுதான் மகாராஜா!”
சிங்கத்தின் முகம் மாறிவிட்டது. கோபத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல் சிங்கம் கேட்டது: “எப்படி?”
“ஏனென்றால்.. மதிப்பிற்குரிய எங்களின் மாண்புமிகு அரசரின் வருகையால் எங்கள் வீடு பெரும் சிறப்புப் பெற்றது அல்லவா?”
சிறுத்தைக் குட்டியின் விவேகமான பதிலால் மகிழ்ந்த சிங்கம், “சபாஷ்..! சபாஷ்..! அற்புதம்..! அற்புதம்..!” என்று மனம் விட்டு பாராட்டியது. கூடவே ஏராளமான பரிசுகளையும் தந்தது.
விவேகமும், சாதுர்யமும் வாழ்க்கையில் வெற்றியைத் தரும் அருங்குணங்கள் என்பதை மறக்கக் கூடாது.
தினமணி கதிர்,ஆகஸ்ட் 20, 1995 |