சாந்திவனத்து கதைகள்: ' ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும்..'
http://mazalaipiriyan.blogspot.com/2013/04/blog-post_8.html
சாந்திவனத்தை ஒட்டி இருந்த ஊருக்கு ஒதுக்குபுறமாய் ஒரு குளம் இருந்தது. அதில் ஒரு கெண்டை மீன்குட்டி வசித்து வந்தது. அது பார்க்க அழகாக இருக்கும். வேகமாக நீந்தும். இதனால், அது கர்வம் கொண்டது. “தான்தான் உயர்ந்தவன்; வேறு யாருடைய நட்பும் தேவையில்லை!”-என்று அது நினைத்தது. குளத்தில் வாழும் மற்ற மீன்களுடன் அது சேருவதில்லை.
ஒரு மாலை வேளை.
அந்த நேரத்தில் காற்று வாங்க கெண்டை மீன்குட்டி குளத்தின் மேற்பரப்புக்கு வந்தது. அருகிலிருந்த அரசமரத்தை உற்றுப் பார்த்தது.
அரசமரம் புது தளிர்விட்டு சலசலத்துக் கொண்டிருந்தது. இளம் பழுப்பு நிறத்தில் நிறைய இலைகள் துளிர்த்திருந்தன.
ஏதோ நினைத்துக் கொண்ட மீன்குட்டி இலைகளைப் பார்த்தது. உரத்த குரலில் கேட்டது:
“ஓ..! இலைகளே..! இலைகளே! அரசமரத்தில் உள்ள நீங்கள் தனி ஆள்தானே?”
மீன் குட்டியின் குரலை இலைகள் கேட்டன.
“இல்லை மீன் தம்பி! நாங்கள் தனி ஆளோ.. முழு ஆளோ கிடையாது. நாங்கள் தனியாக வாழ முடியாது. எங்கள் உறவு கிளைகளுடன் ஒட்டி உள்ளது. அது பிரிக்க முடியாதது!”-என்றன மெல்ல.
மீன்குட்டிக்கு ஆச்சரியமாக இருந்தது. “இவ்வளவு இலைகள் தனியாக வாழ முடியாதாமே!” – என்று வியப்படைந்தது.
அதன்பின் கிளையிடம் மீன்குட்டி கேட்டது: “கிளையே..! கிளையே..! நீ தனி ஆளா.? முழு ஆளா?”
இதைக் கேட்ட கிளை அவசர அவசரமாக பதில் அளித்தது:
இதைக் கேட்ட கிளை அவசர அவசரமாக பதில் அளித்தது:
“இல்லை. என் உறவு மரத்தண்டுடன் தொடர்புடையது. அது இல்லாமல் நான் இல்லை!”
“அட ஆச்சரியமே! கிளைகள் தனியாக வாழ முடியாதாமே!”- மீன் குட்டி முணு முணுத்துக் கொண்டது.
பிறகு மரத்தண்டைப் பார்த்துஈ “பெரிய மலைப் பாறையைப் போல தடித்திருக்கும் ஓ..! மரத்தண்டே நீ தனி ஆளா?”- என்று கேட்டது.
இதைக் கேட்ட உடன் மரத்தண்டு பதைபதைத்துப் போனது. பரபரப்புடன் சொன்னது:
“இல்லை..! இல்லை..! என் வாழ்வும்.. தாழ்வும்.. அதோ பூமிக்குள் மறைந்திருக்கின்றானே.. என் தம்பி வேர்.. அவனுடன் பிரிக்க முடியாதது!”
கெண்டை மீன்குட்டி கொஞ்ச நேரம் மௌனமாக இருந்தது.
“இலைகள்..கிளைகள் இல்லாமல் இல்லை!”
“கிளைகள் .. மரத்தண்டு இல்லாமல் இல்லை!”
“மரத்தண்டோ .. வேர்கள் இல்லாமல் வாழ முடியாது!”-என்கிறது. ம்.. சரி.. கடைசியாக ஒரு முயற்சி. வேரிடமே கேட்டுப் பார்க்கலாம்.
குளத்தில் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த வேரைப் பார்த்து, “ஓ..! வேரே! அரசமரத்து வேரே! நீ தனி ஆளா?” – என்றது கெண்டை மீன்குட்டி.
“ஊஹீம்! நான் தனி ஆளோ.. முழு ஆளோ கிடையாது! என் வாழ்வு மரத்தண்டுடன், கிளைகளுடன், இலைகளுடன் பிரிக்க முடியாதது. இவைகள் இல்லாமல் என் வாழ்க்கையே இல்லை!”
இதைக் கேட்ட மீன்குட்டி, ரொம்ப நேரம் யோசனையில் மூழ்கிவிட்டது.
“மரத்தின் எல்லாப் பகுதிகளும் ஒன்றுடன் ஒன்று வலுவாக இணைந்துள்ளன. அதனால்தான் மரமும் இவ்வளவு பெரிதாக காணப்படுகிறது. பலமாகவும் இருக்கிறது.
தனித்து வாழ்வது அறிவுடைமையல்ல. அது அறிவீனம். சேர்ந்து வாழ்வதே அறிவுடைமை. அதுவே வெற்றிக்கு வழி!”-என்ற நல்ல சிந்தனை அதற்கு உருவானது.
இருள் வேகமாகப் படர்ந்து கொண்டிருந்தது. மீன் குட்டிக்கோ அறிவு பிரகாசமாக உதயமானது.
‘பேசுவதா? வேண்டாமா?’- என்று பக்கத்தில் தயங்கி.. தயங்கி நின்று கொண்டிருந்த தவளையுடன், “வாங்க தவளையாரே! நலமா?”-என்று மகிழ்ச்சியுடன் .. சிநேகிதத்துடன் பேச்சுக் கொடுத்தது கெண்டை மீன்குட்டி.