அறிவமுது: 'அந்த இரண்டு வகை வாசகங்கள்!'
http://mazalaipiriyan.blogspot.com/2013/05/blog-post.html
பார்வை இழந்த அந்த மனிதர் ஜனசந்தடி மிக்க அந்த ரயிலடி நிறுத்தத்தில் அமர்ந்திருந்தார். அவர் எதிரே ஒரு துணி விரிக்கப்பட்டிருந்தது. அதன் பக்கத்தில் “நான் பார்வையற்றவன். எனக்கு உதவுங்கள் தர்மப்பிரபுக்களே!” – என்று எழுதப்பட்டிருந்தது.
அதன் பிறகு, அந்த வழியே வந்த ஒருவர் தனது பர்ஸிலிருந்து இரண்டு ஐந்து ரூபாய் நாணயங்களை எடுத்து விரிக்கப்பட்டிருந்த துணியில் போட்டார். பக்கத்தில் எழுதப்பட்டிருந்த எழுத்துக்களை அழித்தார். புதிதாக ஏதோ எழுதினார்.
அந்தப் பக்கம் வருவோர் போவோர் அனைவரும் நிற்பதும் அந்த வாசகங்களைப் படிப்பதும் பிறகு பாக்கெட்டில் கையைவிட்டு காசை எடுத்து துணியில் போடுவதுமாய் இருந்தார்கள்.
கொஞ்ச நேரத்தில் அந்த துணி காசுகளால் நிரம்பி வழிந்தது.
மாலையில் மீண்டும் காலையில் வாசகங்களை திருத்தி எழுதிய அதே மனிதர் அந்த வழியே வந்தார். அவருடைய காலடி சத்தத்தால் வந்தவர் யார் என்று ஊகித்துக் கொண்டார் அந்த பார்வையிழந்தவர்.
அவரை அருகில் அழைத்த அந்த பார்வையிழந்தவர், “மிகவும் நன்றி அய்யா!” – என்றார் மகிழ்ச்சியுடன். கூடவே, “அய்யா, நீங்கள் அப்படி என்னதான் திருத்தி எழுதினீர்கள்?” – என்று வியப்புடன் கேட்கவும் செய்தார்.
அவர் சொன்னார்:
“அய்யா! நீங்கள் ஏற்கனவே “நான் பார்வையற்றவன். எனக்கு உதவுங்கள் தர்மப்பிரபுக்களே!” என்று எழுதியிருந்தீர்கள். அதை நான் கொஞ்சம் இப்படி திருத்தி எழுதினேன் – “இன்றைய அற்புதமான பொழுதை என்னால் பார்க்க முடியவில்லை தர்மப்பிரபுக்களே!” – என்றார் அவர் புன்னகையுடன்.
இரண்டிலும் பொருள் உண்டு.
ஆனால், முதலாவது வாசகத்தைவிட இரண்டாவது வாசகம் எவ்வளவு உயிர் துடிப்பு மிக்கது என்று பாருங்கள்!
“அய்யகோ! என் விதி.. உங்களால் பார்க்க முடிந்த இந்த அழகிய உலகை என்னால் பார்க்க முடியவில்லையே!” – என்று நெஞ்சைப் பிழியும் பொருள் கொண்ட வாசகமல்லவா அது! அதனால், அதன் பாதிப்பும் அதிகம்தானே?
- படைப்பாக்கமும்,
- நேர்மறையான புதிய சிந்தனைகளும்
வாழ்வில் வெற்றிகளைக் குவிக்கக் கூடியவை மறந்துவிட வேண்டாம்!