குழந்தை இலக்கியம்: 'மன்னித்தலே மகத்தான குணம்!'
http://mazalaipiriyan.blogspot.com/2013/04/blog-post_26.html
“போச்சு..! போச்சு..! என் டிராயிங் நோட் போச்சு..! டேய் அப்பு, சனியனே! ஏண்டா என் நோட்டை எடுத்தே?”
நான் கஷ்டப்பட்டு வரைந்து கலர் பெயிண்ட் செய்திருந்த ரோஜாப் பூவைக் கிழித்து விளையாடிக் கொண்டிருந்தால்.. கோபம் வராத பின்னே?
அடிதாளாமல் அப்பு, “அண்ணே! அண்ணே! இனி எடுக்க மாட்டேன். மன்னிச்சுடுண்ணே! அடிக்காதே வலிக்குது. வலிக்குது. மன்னிச்சுடுண்ணே!” அழ ஆரம்பித்தான். அதற்குள் அம்மா ஓடிவந்து என் பிடியிலிருந்து அவனை மீட்டுச் சென்றாள்.
இரவு. அப்புவுக்கு ஜீரம். கணகணவென்று உடம்பு கொதித்தது. படுக்கையில் படுத்திருந்தவன், “மன்னிச்சிடு.. மன்னிச்சிடு அடிக்காதேண்ணே!” – என்று புலம்பியவாறு இருந்தான்.
அப்பாவும் வந்துவிட்டார். நடந்ததைத் தெரிந்து கொண்டார். “ம்.. அது ஒரு காலம்! எதிரிகளையும் மன்னித்துவிட்ட நல்லவர் வாழ்ந்த காலம். இப்போது சொந்தத் தம்பி என்றுகூட பார்க்காமல், அதுவும் நாலு வயது குழந்தை என்றுகூட பார்க்காமல்… அவன் செய்த தவறையும் மன்னிக்க முடியாத இரும்பு மனம் கொண்ட மனிதர்கள் வாழும் காலம்!”-என்று வருத்தப்பட்டவாறு ஜீர மாத்திரைகளை ஊட்டிவிட்டார்.
அப்புவின் நிலைமையைக் கண்டதும் என் கோபமெல்லாம் போய்விட்டது. தம்பிக்கு ஏதும் ஆகக்கூடாதென்று கவலை சூழ்ந்துகொண்டது.
இரவு உணவு முடிந்தது.
அப்பா அப்புவின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டார். அவனது தலையை லேசாக வருடிவிட்டார்.
நானும் அப்பாவின் அருகே அமர்ந்தேன்.
அம்மாவும் வந்துவிட்டார்.
அப்பா, “இது உண்மையில், நடந்த ஒரு சம்பவம்!” – என்றவாறு சொல்லலானார்:
“ஒருமுறை, ஒருவன் ஒரு இளைஞனைக் கொலை செய்துவிட்டான். அதை ஒருவர் பார்த்துவிட்டார். கொலைக்காரனை விரட்டினார். பயந்துபோன அவனோ ஓடிப் போய் ஒரு ரொட்டிக் கடையில் புகுந்து கொண்டான். அதன் உரிமையாளராக இருந்த முதியவரிடம், “அய்யா! பெரியவரே! என்னைக் காப்பாற்றுங்கள்! என்னைக் கொல்ல ஒருவன் விரட்டி வருகிறான். தயவு செய்து காப்பாற்றுங்கள்!” – என வேண்டினான்.
மனம் இளகிய முதியவர் அவனுக்கு அடைக்கலம் தந்தார். கடையில் பதுங்கிக் கொள்ள இடம் தந்தார். விரட்டி வந்தவர் முதியவரைக் கண்டதும் அதிர்ச்சியடைந்தார். ஏனென்றால் கொல்லப்பட்டது அவருடைய அருமை மகன்! நடந்ததை சொல்லிவிட்டு, “அய்யா! உங்கள் மகனைக் கொலை செய்த படுபாதகன் இங்குதான் வந்தான். எங்கே அவன்?” – என்றார் கோபமாக.
‘மகன் கொலை செய்யப்பட்டான்!’ என்ற செய்தியைக் கேட்டதும் பெற்ற தந்தையின் மனம் பதறியது. துக்கத்தில் இதயம் துவண்டது. கண்களில் கண்ணீர் பீறிட்டது. அழுதுகொண்டே அவர், தேடி வந்தவனிடம், “தம்பி! நீ சொன்ன ஆள் இங்குதான் என் பாதுகாப்பில் இருக்கின்றான். நான் அவனுக்கு புகலிடம் தந்துள்ளேன். அவன் என் மகனைக் கொன்றவனாக இருந்தாலும் சரி, என் வாக்கை கொஞ்சமும் மீற நான் விரும்பவில்லை. நான் அவனை மன்னித்துவிட்டேன். தயவு செய்து நீ போய்விடு!” – என்று சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டார்.
பிறகு உள்ளே சென்றவர், பதுங்கியிருந்தவனைப் பத்திரமாய் வெளியே அழைத்து வந்தார். அவன் பயணம் செய்ய ஒரு குதிரையைத் தந்தார். அவனிடம், “மகனே! நான் உனக்கு வாக்களித்ததைப் போல் காப்பாற்றி விட்டேன். இங்கிருந்து உடனே புறப்படு! இதற்கு மேல் நான் உனக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது!” – என்றார் துயரத்துடன்.
கொலைக்காரன் சென்றதும், முதியவர் அழுது கொண்டே தன் மகனின் உடலைக் காணச் சென்றார்.
எவ்வளவு பெருந்தன்மையான மனம் அவருடையது! எவ்வளவு பொறுமைசாலி அவர்! பார்த்தாயா?” – என்று அம்மாவிடம் சொன்ன அப்பா தொடர்ந்து, “ம்… அது தர்மங்கள் வாழ்ந்த காலம்!”-என்று முடித்தார் என்னைப் பார்த்தவாறு.
குற்ற உணர்ச்சியால் நான் தலை குனிந்து கொண்டேன்.
‘மன்னிக்கும் பண்பு மகத்தானது!’ – என்று புரிந்துகொண்டேன்.
என் கண்களில் கண்ணீர் பெருகியது.