சாந்திவனத்துக் கதைகள்: 'அதுதான் மனச்சாட்சி!'


அரசாங்க வேலையாக ஒரு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு தன் பரிவாரங்களுடன் திரும்பிக் கொண்டிருந்தது சாந்திவனத்து ராஜாவான சிங்கம். 

களைப்பு மிகுதியால் வழியில் ஓய்வெடுக்க வேண்டி வந்தது.
சற்று நேரத்திற்குப் பின் புறப்பட்ட சிங்கம் பாதி வழியில் மகுடம் காணாமல் திடுக்கிட்டது. அதன் முன்னோர்களின் ஒரே நினைவு அந்த மகுடமாகும். அதனால், அது காணாமல் போனது சிங்கத்திற்கு வேதனை அளித்தது.
காவலர்களான சிம்பன்சி குரங்குகள், சாந்திவனத்தை சல்லடைப் போட்டு தேடின. “ஊஹீம்..” மகுடம் கிடைக்கவேயில்லை.
இப்படியாக நாட்கள் கழிந்தன.
ஒருநாள்.
நகர்வலம் வந்த சிங்கம் அந்த காட்சியைக் கண்டது. அதன் முகம் தாமரை மலராய் மலர்ந்தது. தான் கண்டதை சரிபார்த்துக்கொள்ள ஒரு மரத்தின் பின்னால் மறைந்து நின்றது.
அந்த வழியே சாந்திவனத்து வணிகரான நரி சென்று கொண்டிருந்தது.
அதன் சின்னத்தலை மீது அலங்காரமாக மகுடம் ஜொலித்துக் கொண்டிருந்தது. அதைப் பார்த்துதான் சிங்கம் மகிழ்ந்தது.
ஒன்றிற்கு இரண்டு முறை, “மகுடம் தன்னுடையதுதானா?” – என்று சரிபார்த்த சிங்கம் மறைவிடத்திலிருந்து வெளிப்பட்டது.
சிங்கத்தைக் கண்ட நரி, “சாந்திவனத்து ராஜாவிற்கு இந்த எளியோனின் வாழ்த்துக்கள்!” – என்றது.
“உமக்கும் நரியாரே!” – என்று பதில் வாழ்த்தை தெரிவித்த சிங்கம், “நலம்தானே? வியாபாரமெல்லாம் எப்படி நடக்கிறது?” – என்று விசாரித்தது.
“தங்கள் ஆட்சியில் என்ன குறை அரசே!” – பல்லிளித்தது நரி.
சற்று நேரம் தயங்கிய சிங்கம், “நரியாரே! ஒரு விஷயம்.. தாங்கள் அணிந்திருக்கும் மகுடம் காணாமல் போன என் மகுடமாகும். தயவுசெய்து அதை என்னிடம் கொடுத்து விடுங்கள்!”- என்றது மென்மையாக.
அதைக் கேட்டதும் நரியின் முகம் கறுத்தது. காட்டில் கிடைத்த மகுடம் சிங்கத்திற்குரியது என்பதை நொடியில் புரிந்துகொண்டது. ஆனால், அதை திருப்பித்தர அதன் மனம் ஒப்பவில்லை. அதனால் பொய் பேச ஆரம்பித்தது. மகுடம் தனதுதான் என்று சாதித்தது. நிரபராதியை போல சத்தமிட்டு கத்த ஆரம்பித்தது.
வெகு விரைவில் சாந்திவனமே அங்கு திரண்டுவிட்டது. சிங்கம் பொறுமையை சாதித்தது. 

அதனால், அசம்பாவிதம் ஏதும் நடைபெறவில்லை. 


கடைசியில், வழக்கை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதென முடிவெடுக்கப்பட்டது. 

அரைகுறை மனதுடன் நரியும் ஒப்புக்கொண்டது.
நீதிமன்றம். என்றும் இல்லாத கூட்டம் அன்று முண்டியடித்தது. 

உயரமான மரங்களில் வசிக்கும் பறவைகள் கூட  அன்று தாழ்வான கிளைகளில் அமர்ந்து நடப்பதை ஆவலுடன் எதிர்பாத்தன.
சாந்திவனவாசிகளான மிருகங்களுக்கு ஒரே வியப்பு. சாந்திவனத்து மேன்மை மிக்க அரசர்.. மிக சாதாரணமான நரிக்கு சமமாக நீதிமன்ற கூண்டில் நிற்பதா என்று அவை வியந்தன.
சிங்கத்தின் உயர்ந்த குணத்தை காட்டுக்குயில்கள் போற்ற, நரியின் வஞ்சக குணத்தை காக்கைகள் தூற்றின.
தொலைவில் நீதிபதியான யானை, வந்துகொண்டிருந்தது. உடனே நீதிமன்றம் அமைதியானது.
மரத்தடியில் அமர்ந்த யானை கண்ணாடியை சரி செய்துகொண்டது. சுற்றி நின்றவைகளை பார்த்து மெலிதாக புன்முறுவல் பூத்தது. “ம்.. வழக்கு ஆரம்பமாகட்டும்!” – என்று ஆணை பிறப்பித்தது.
நரியும், சிங்கமும் தங்கள் தரப்பு வாதங்களை எடுத்து வைத்தன. 

அனைத்தையும் யானை பொறுமையுடன் கேட்டது. கடைசியில், சிங்கத்திடம், “மகுடம் தனதே என்று நிரூபிக்க அரசர் இரு சாட்சிகளை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும்!” –என்றது.
சற்று நேரத்தில் சிங்கத்து தரப்பு சாட்சிகளாக புலியும்-சிறுத்தையும் ஆஜராயின. அவைகளை யானை விசாரித்தது.
“நீதிபதி அவர்களே, நான் அரசருக்கு உறவு முறை!” – என்று புலி சொல்ல.. சிறுத்தையோ, “நான் அரசரின் பணியாள்!” – என்றது.
அதைக் கேட்ட யானை, “சாட்சிகளில் ஒருவர் அரசரின் உறவினர். மற்றவரோ அவருடைய பணியாள். இவர்களின் சாட்சி அரசருக்கு சாதகமாகவே அமையக்கூடும் என்பதால்.. இதை ஏற்க முடியாது. எனவே குற்றம் நிரூபிக்க தகுந்த சாட்சிகள் இல்லாததால் வழக்கை தள்ளுபடி செய்கின்றேன்!”-என்று தீர்ப்பளித்தது.
அதைக்கேட்டு சாந்திவனவாசிகள் அதிர்ச்சியடைந்தன.
ஆனால், சிங்கமோ எவ்வித உணர்ச்சியையும் வெளிப்படுத்தாமல் மௌனமாக நீதிமன்றத்தைவிட்டு வெளியேறியது.


வழக்கு என்னவாகுமோ என்று பயந்த நரிக்கு தீர்ப்பு வியப்பளித்தது. “வசமாக சிக்கினோம்!”-என்று நினைத்த அது நிம்மதியடைந்தது. 

சாந்திவனத்தின் சக்திவாய்ந்த ராஜாவான சிங்கம் நீதிக்கு தலைவணங்கிய பண்பு அதை கவர்ந்தது. பலாத்காரத்தைக் கையாளாமல் நீதியின் முன் பிரச்னையை தீர்த்துக் கொள்ள சிங்கம் முன்வந்தபோதே நரி, “மகுடத்தை கொடுத்து விட்டால் என்ன?”-என்று நினைத்தது. 

தற்போதைய தீர்ப்பு அதன் நினைப்பை முற்றிலும் செயலாக்க உதவியது. தன் தவறை எண்ணி நரி வருந்தியது. ‘இனி பிறர் பொருளுக்கு ஆசைப்படக்கூடாது!’ – என்று உறுதி பூண்டது.
சாந்திவனத்தில் கட்டி காக்கப்படும் நீதியின் மாண்பை தான் சீர்குலைக்கக்கூடாது என்ற திடமான முடிவுக்கு வந்தது நரி. 

நடப்பது நடக்கட்டும் என்று உண்மையை ஒப்புக் கொள்ள மகுடத்துடன் சிங்கத்தைத் தேடி சென்றது நரி.



Related

சாந்திவனத்து கதைகள் 847431126270180744

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress