குழந்தை வளர்ப்பு – 05: 'பேரீத்த மரமும், மதீனத்து சிறுவனும்'
http://mazalaipiriyan.blogspot.com/2013/09/04.html
மதீனாவில் ஒரு சிறுவன் இருந்தான்.
அவன் நல்ல பையன். ஆனால், அவனிடம் ஒரு கெட்ட பழக்கம் இருந்தது.
‘பழமரங்கள் மீது கல்
எறிவது; கல்லடி பட்டுக் கீழே விழும் பழங்களை எடுத்து உண்பது’ – இதுதான் அவனிடமிருந்த
கெட்டப்பழக்கம்.
ஒருநாள்.
மதீனாவுக்கு வெளியே ஒரு தோப்பு
இருந்தது. அந்தத் தோப்புக்குள் சிறுவன் நுழைந்தான்.
தோப்பில் பேரீத்தம் மரங்கள் காய்த்துக்
குலைத் தள்ளியிருந்தன.
அதைப் பார்த்ததும் அச்சிறுவன்
சில கற்களை எடுத்தான். பழமரங்களை நோக்கி எறிந்தான்.
பேரீத்தம் குலைகளில் கற்கள் பட்டதும்
பழங்கள் கீழே உதிர்ந்தன.
மண்ணில் விழுந்த பழங்களை அச்சிறுவன்
பொறுக்கி எடுத்தான். அவற்றைச் சப்புக் கொட்டிக் கொண்டே உண்ண ஆரம்பித்தான்.
பேரீத்தம் பழங்கள் மிகவும் சுவையாக
இருந்தன. எல்லாப் பழங்களையும் அந்தச் சிறுவன் தின்று முடித்தான்.
கற்கள் பட்டுப் பேரீத்தம் பழமரங்கள்
பாதிக்கப்பட்டன. அதைப் பற்றி எல்லாம் அச்சிறுவன் கவலைப்படவில்லை.
பழத்தோட்டம் அடுத்தவருக்குச் சொந்தமானது.
அதில் அனுமதியில்லாமல் நுழையக்கூடாது.
பழத்தோட்டத்தில் அனுமதியில்லாமல்
நுழைந்தது பற்றியோ, அனுமதியில்லாமல் பழங்களைப் பறித்தது பற்றியோ, பழமரங்களுக்கு உண்டான
சேதத்தைப் பற்றியோ சிறுவன் கவலைப்படவில்லை.
சற்று நேரம் கழிந்தது.
தோப்பின் உரிமையாளர் அங்கே வந்தார்.
பேரீத்தம் மரங்களைச் சுற்றி கற்கள்
சிதறிக் கிடப்பதைக் கண்டார். மரங்கள் சேதமடைந்திருப்பதையும் பார்த்தார். “யாரோ தோப்பில்
அத்துமீறி நுழைந்திருக்கிறார்கள். பழங்களைத் திருடியிருக்கிறார்கள்” – என்பதை அவர்
தெரிந்து கொண்டார். கோபமடைந்தார்.
‘திருடன் மீண்டும் திருட தோப்புக்கு
வருவான். கல்லெறிந்து பழங்களைப் பறிப்பான். அப்போது கையும் – களவுமாக அவனைப் பிடித்துவிடலாம்!’
– என்று அவர் நினைத்தார். தோப்பிலேயே மறைவாக ஒளிந்து கொண்டார்.
சிறுவன் மீண்டும் தோப்புக்குள்
வந்தான். மரங்கள் மீது கற்களை எறிந்தான். கல்லடிப்பட்டு விழுந்த பழங்களைப் பொறுக்க
ஆரம்பித்தான்.
அதுதான் நல்ல சமயம் என்று தோப்பின்
உரிமையாளர் நினைத்தார். மறைவிடத்திலிருந்து வெளியே வந்தார். சிறுவனைப் பிடித்துக் கொண்டார். சிறுவன் பயந்தே போனான். உரிமையாளரின்
பிடியிலிருந்து தப்பிக்க முயன்றான். முடியவில்லை.
பழத்தோப்பின் உரிமையாளர் அந்தச்
சிறுவனை நேரே நபிகளாரிடம் அழைத்துச் சென்றார். நடந்ததை சொன்னார்.
சிறுவன் பயத்தால் நடுங்கினான்.
நபிகளாருக்குக் கோபம் வரும். தன்னை நபிகளார் நிச்சயம் தண்டிப்பார்கள் என்று அவன் நினைத்தான்.
ஆனால், நபிகளார் கோபப்படவில்லை.
சிறுவனை அருகில் அழைத்தார்கள். அவனது பதட்டம் தணியும்வரை காத்திருந்தார்கள்.
“மகனே! நீ மரங்கள் மீது கல்லெறிந்தது
உண்மையா?” – என்று விசாரித்தார்கள்.
“ஆம்..! இறைவனின் தூதரே!” – என்றான்
சிறுவன் வெளிப்படையாக.
“மகனே! அது தப்பில்லையா? ஏன் அப்படி
செய்தாய்?”
“பழங்களைச் சாப்பிடவே அப்படி செய்தேன்.
கல்லெறியாமல் பழங்கள் மரத்திலிருந்து எப்படி விழுமாம்? பிறகு அவற்றை நான் எப்படித்தான்
சாப்பிடுவதாம்?”
சிறுவன் வெகுளியாகக் கேட்டான்.
நிலைமையின் விபரீதம் அவனுக்குப் புரியவில்லை. குழந்தைத்தனம்தான் அவனது பேச்சில் வெளிப்பட்டது.
சிறுவனது பதில் நபிகளாருக்குச்
சிரிப்பை வரவழைததுவிட்டது.
‘சிறுவன் திருடன் இல்லை.; வெகுளி’
– என்பதை நபிகளார் தெரிந்து கொண்டார்கள்.
அன்பு நபி சிறுவனின் தலையை கருணையோடு
வருடிவிட்டார்கள். ஆறுதலாய் முதுகில் தட்டிக் கொடுத்தார்கள். அன்போடு சொன்னார்கள்:
“மகனே! மரங்கள் மீது இனி கல் எறியாதே!
அது தவறான செயல். அப்படிச் செய்தால்.. மரங்கள் பாதுக்கப்படும். அதனால், மரங்களின் காய்ப்புத்
திறன் குறைந்துவிடும். ஆனால், தானாகவே உதிர்ந்து தரையில் விழும் பழங்களை எடுத்துச்
சாப்பிடத் தடையேதுமில்லை”
அதன் பிறகு நபிகளார் சிறுவனை வாழ்த்தினார்கள்.
அவனது அறிவு வளர்ச்சிக்காகவும், நல்ல எதிர்காலத்துக்காகவும் இறைவனிடம் பிரார்த்தித்தார்கள்.
அன்று சிறுவன் வாழ்க்கையின் முக்கியமான
பாடம் ஒன்றைக் கற்றுக் கொண்டான்.
கல்லெறிந்து மரங்களைச் சேதப்படுத்தக்
கூடாது. பழுத்த பழங்கள் தாமாகவே தரையில் உதிரும். அவற்றைச் சிரமமில்லாமல் சேகரித்து
உண்ணலாம் என்பதைத் தெரிந்து கொண்டான். வெகுவிரைவில் அவனது சிந்திக்கும் ஆற்றலும் வளர்ந்தது.
அவன் அறிவாளியானான். அதனால், சொல்ல முடியாத மகிழ்ச்சி அவனுக்கு ஏற்பட்டது.
‘மற்ற குழந்தைகளிடம் அன்பு செலுத்துவதைப்
போலவே, நபிகளார் தம் மீதும் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார்கள்!’ – என்பதைச் சிறுவன்
நேரிடையாகவே கண்டான்.
அன்றிலிருந்து நல்ல பிள்ளையாக
மாறிவிட்டான்.
குழந்தைகளே! நீங்களும் இது போன்ற
தவறுகளை செய்யாமல் .. சீர்த்திருத்திக் கொள்ளலாம் இல்லையா?
-
குழந்தை வளர்ப்பு
தொடரும்.