குழந்தை வளர்ப்பு - 09 : 'மணவாழ்வில் தொடங்கும் மழலையின் எதிர்காலம்'
http://mazalaipiriyan.blogspot.com/2013/10/blog-post_17.html
குழந்தை வளர்ப்பின்
தொடக்கம் ஒவ்வொரு மனிதனின் மணவாழ்வோடு தொடங்குகிறது. மணவாழ்வின் சரியான துணைதான் குழந்தை
வளர்ப்பின் அடிப்படை.
இந்த உலகில், சாந்தியும்
– சமாதானமும், மனித நேயமும், அறநெறிகளும் தழைத்தோங்க காரணமாக இருப்பவர்கள் இளந்தலைமுறையினர்தான்!
அத்தகைய பண்பு சீலர்களை மண்ணுலகில் உருவாக்கி விண்ணுலக நாயகனான இறைவனின் பேரன்புக்கு
ஆளாக்க பெரிதும் உழைப்பவர்கள் தாய்மார்கள். சமூகப் பொறுப்பும், ஆன்மிக அருங்குணங்களும்
கொண்ட பெண்களை தமது துணைவியராக்கிக் கொள்வதுதான் குழந்தை வளர்ப்பின் முதல் நிலையாகும்.
“இறைவனுக்கு இணை
வைக்கும் பெண்களை அவர்கள் ஈமான் –இறைநம்பிக்கைக் கொள்ளும்வரை நீங்கள் ஒருபோதும் திருமணம்
செய்யாதீர்கள்!" - (2:221) என்கிறது திருக்குர்ஆன்.
நபிகளார் அறிவுறுத்துகிறார்கள்:
“நான்கு விஷயங்களுக்காக பெண் மணமுடிக்கப்படுகிறாள். அவளுடைய செல்வத்திற்காக, அவளுடைய
குலச் சிறப்புக்காக, அவளுடைய அழகுக்காக, அவளுடைய மார்க்கப் பற்றுக்காக. நீங்கள் மார்க்கப் பற்றுள்ள
பெண்ணையே மணந்து கொள்ளுங்கள்! உங்களுக்கு நலம் உண்டாகும்!” (அறி: அபூஹீரைராஹ் (ரலி),
நூல்: புகாரி, முஸ்லிம்)
இறைவன் பெண்களுக்கு
கண்ணியமளிக்க அறிவுறுத்துவதோடு, அவர்களில் சிறந்தவர்கள் இறைநம்பிக்கை கொண்டவர்கள்தான்
என்று அடையாளமும் காட்டுகின்றான். திருமண பந்தத்தின் மூலமாக இஸ்லாம் ஆண், பெண் மற்றும்
குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்கிறது. அவர்களது பௌதீக, ஆன்மீகத் தேவைகளையும் நிவர்த்தி
செய்கிறது.
“எங்கள் இறைவனே!
எங்கள் மனைவிமார்களையும், எங்கள் குழந்தைகளையும், எங்கள் கண்களுக்குக் குளிர்ச்சி அளிக்கக்
கூடியவர்களாய் விளங்கச் செய்வாயாக! மேலும், எங்களை இறையச்சமுடையோர்க்குத் தலைவர்களாய்
திகழச் செய்வாயாக!” (திருக்குர்ஆன்: 25:74)
மனைவியரிடம் இல்லற
உறவுகொள்ளும் அந்த நேரத்தில்கூட, “இறைவா! ஷைத்தானின் தீங்கிலிருந்து எங்களைப் பாதுகாப்பாயாக!"
(முஸ்லிம்) - என்று பிரார்த்திக்கும்படி சொல்கிறார்கள் நபி பெருமானார். அதேபோல, பிறக்கும்
குழந்தைகளுக்கு நல்ல பெயர் சூட்டி அழைக்கும்படியும் அறிவுறுத்துகிறார்கள்.
இப்னு உமர் அவர்கள்,
தமது தந்தையார் உமர் அவர்கள் அறிவித்ததாகக் கூறுகிறார்கள்: “உமர் அவர்கள் தமது மகளுக்கு
ஆஸியா என்று பெயர் சூட்டியிருந்தார்கள். இதை அறிந்த நபிகளார் அந்தப் பெயரை மாற்றி
‘ஜமீலா – அழகானவள், அழகி’ என்று பெயர் சூட்டினார்கள். (முஸ்லிம்)
“இறைவனுக்குப்
பிடித்தமான பெயர்கள் ‘அப்துல்லாஹ், அப்துற் றஹ்மான்’ – என்கிறார்கள் நபிகளார். (முஸ்லிம்)
அதேபோல, இறைவனுக்குப்
பிடிக்காத பெயர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது, ‘மாலிக்குல் அம்லாக் – அரசர்கெல்லாம்
அரசர்!' (புகாரி) என்றும் சுட்டிக் காட்டுகிறார்கள்.
அதுபோலவே, ‘இஸ்லாத்தில்
அடையாளப் பெயர்களைக் கொண்டு அழைக்கலாம்!’ – என்றும் அனுமதி அளிக்கிறார்கள்.
உதாரணமாக, ‘அப்துற் றஹ்மான் மிஸ்பிர் அத்தம்மாஸ்’ அதாவது ‘தம்மாஸ் குடும்பத்தைச் சேர்ந்த
மிஸ்பிரின் மகன் அப்துற் றஹ்மான்’ என்று பொருள்.
நல்ல பெயர்களை
குழந்தைகளுக்குச் சூட்ட வேண்டும்.
தந்தையரின் பெயரோடு
குழந்தைகள் அழைக்கப்படல் வேண்டும்.
‘குழந்தை பிறந்ததும்,
அதன் வலது காதில் ‘பாங்கும்’ இடது காதில் ‘இகாமத்தும்’ கூறி பெயர் சூட்டுவது நபி வழியாகும்’
(அஹ்மது, அபூதாவூது, திர்மிதி)
‘கால்நடையை அறுத்து
‘அகீகா’ கொடுங்கள்; தலைமுடியை நீக்குங்கள்!” –என்கிறார்கள் (புகாரி) நபிகளார்.
“நபிகளாரிடம் அகீகா
பற்றிக் கேட்டபோது, ‘ஆண் குழந்தைக்கு இரண்டு ஆடுகளும், பெண்குழந்தைக்கு ஓர் ஆடும்’
அறுக்கும்படி கூறினார்கள். (திர்மிதி)
குழந்தை பிறந்த
ஏழாவது நாளிலும், 14, 21 ஆவது நாட்களிலும் ‘அகீகா’ தரலாம். (தப்ரானி)
இதுவும் முடியாத
பட்சத்தில், எந்த நாளிலும் தரலாம்.
‘ஃபாத்திமாவுக்கு
குழந்தை ஹஸன் பிறந்தபோது, தலை முடியை மழித்து அதன் சம அளவுக்கு வெள்ளியை ஏழை – எளியோர்க்குப்
நபிகளார் பகிர்ந்தளித்தார்கள்!’ (அஹ்மது, திர்மிதி)
குழந்தை வளர்ப்பு
என்பது தாய், தந்தை இருவரும் குழுவாக இணைந்து செய்யும் பணியாகும். சில நேரங்களில் மனைவியின்
வேலையைப் பகிர்ந்து கொள்வதால், அவளுக்குக் கிடைக்கும் அதிகப்படியான நேரத்தை அவள் தனது
குழந்தை வளர்ப்பில் பயன்படுத்த முடியும்.
ஒன்றுக்கு மேற்பட்ட
குழந்தைகள் இருந்தால்.. ‘முதல் குழந்தைக்கு அதிக உரிமை அளிப்பதா?” இரண்டாவது குழந்தைக்கு
அளிப்பதா? பெண் குழந்தைக்கு அதிக உரிமையுள்ளதா? ஆண் குழந்தைக்கு உரிமையள்ளதா?’ – என்ற
கேள்விகள் எழலாம்.
இதற்கு சுருக்கமான
பதில் இதுதான்:
‘பெற்றோர்கள் தமது
எல்லாக் குழந்தைகளிடமும் சரிசமமாகவும், நீதத்துடனும் நடந்து கொள்ள வேண்டும்”
“இறைவனுக்கு அஞ்சிக்
கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளிடம் சரிசமமாக நடந்துகொள்ளுங்கள்!” – என்கிறார்கள் அன்பு
நபிகளார். (புகாரி, முஸ்லிம்)