குழந்தை வளர்ப்பு - 10 : 'அமுதோடு அறிவையும் ஊட்டி..'


நாம் வசிக்கும் இந்த அண்டச்சாரம் முழுவதும் இறைவன் மனிதனுக்குச் செய்துள்ள பேருதவியாகும். மனிதன் இல்லாமல் சூரியன் இருக்கலாம். ஆனால், சூரியன் இல்லாமல் மனித வாழ்க்கை இல்லை. மனிதன் இல்லாமல் காற்று வீசலாம். ஆனால், காற்றில்லாமல் மனிதன் ஒரு நொடியும் வாழ முடியாது. மனிதன் இல்லாமல் செடி, கொடிகள், தாவரங்கள் இருக்கலாம். ஆனால், உணவு இல்லாமல் மனிதன் உயிர் வாழ முடியாது.

இப்படி அணு முதல் அண்டம்வரை மனிதன் உயிர் வாழ்வதற்கு தேவையான எல்லா ஏற்பாடுகளையும் செய்தவன் இறைவன். அத்தோடு மனிதன் எப்படி வாழ வேண்டும்? என்று வழிகாட்டுதலையும் அவன் காட்டியுள்ளான். அதன் பெயர்தான் இஸ்லாம் அதாவது இறைநெறி.

  • பகுத்தறிவுதனமான
  • எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய
  • எல்லா நாட்டு மக்களுக்கும் வழிகாட்டக் கூடிய
  • இம்மை, மறுமை ஈருலகங்களிலும், வெற்றித் தரக்கூடிய 
- மார்க்கத்தை காட்டியிருப்பது இறையருள் அன்றி வேறென்ன?

“இன்று உங்களுடைய தீனை, வாழ்க்கை நெறியை உங்களுக்காக நான் முழுமையாக்கிவிட்டேன். எனது அருட்கொடையையும் உங்கள் மீது நான் நிறைவு செய்துவிட்டேன். இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுவிட்டேன். எனவே, உங்கள் மீது விதிக்கப்பட்ட ‘ஹலால்’ அனுமதிக்கப்பட்டவை, ஹராம் விலக்கப்பட்டவை என்னும் வரம்புகளைப் பேணி நடந்து வாருங்கள்! “ – என்கிறான் இறைவன் (திருக்குர்ஆன்-5:3)

ஒரு மனிதன் சக மனிதனுக்குச் செய்யும் சிறு உதவிக்கும் நாம் நன்றி சொல்கிறோம். ஒரு சாதாரணமான பொருள், பென்சில். அது தொலைந்து போனால் அதைக் கண்டெடுத்து தரும் நபருக்குகூட “ரொம்பவும் நன்றி!” – என்று சொல்வது நளினம். இறைவன் உலகில் மனிதனைப் படைத்தான். அவன் உயிர் வாழ எல்லாத் தேவைகளையும் தந்தான். இந்த உலகில் அமைதியாக வாழ்வதற்காக தெளிவான வழிகாட்டுதலையும் அளித்தான். அந்த வழிமுறைகளின் தொகுப்பாக வேதங்களையும் அருளினான். வேதங்களை போதிப்பதற்காக.. விளக்குவதற்காக இறைத்தூதர்களையும் அனுப்பினான். 

இறைவனின் அருளுக்கு நன்றி செலுத்துவது எப்படி?

இறைவன் மனிதர்களுக்கு அருளிய வாழ்க்கையை முழுமையாக பின்பற்றி வாழ்வதுதான் இறைவனுக்கு செலுத்தும் நன்றியாகும்.

இறைவனின் விருப்பு, வெறுப்புகளுக்கு ஏற்ப தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதே இறைவனுக்குச் செலுத்தும் உண்மையான நன்றியாகும்.

அதேபோல, இறைத்தூதர்களில் கடைசியாக வந்த அன்பு நபிகளாரின் வழிமுறையை முழுமையாகப் பின்பற்றி வாழ்வதே இறைவனுக்குச் செலுத்தும் நன்றியாகும்.


இதை சுருக்கமாக இப்படி சொல்லலாம்: ‘இறைவனின் கட்டளைகளையும், இறைத்தூதர் அன்பு நபிகளாரின் வழிமுறைகளையும் முழுக்க.. முழுக்க பின்பற்றி நல்ல முஸ்லிமாக வாழ்வதே இறைவனுக்குச் செலுத்தும் நன்றியாகும்.

  • முஸ்லிம் என்பது ஒரு இனத்தின் பெயரோ அல்லது
  • ஒரு குறிப்பிட்ட நாட்டில் வசிக்கும் மக்களின் பெயரோ அல்லது
  • பெற்றோர் மூலமாக வழி வழியாக பிறப்பின் மூலம் வரும் பெயரோ அல்ல.
  • முஸ்லிமுடைய மகன், முஸ்லிமுடைய பேரன் அல்லது பேத்தி என்ற வழியிலோ வரும் குடும்ப உறவும் அல்ல.

ஐரோப்பாவில் பிறந்த ஒருவர் கிருத்துவராக இருக்கலாம். இந்தியாவில் பிறந்த ஒருவர் இந்துவாக அழைக்கப்படலாம். ஆனால், அரபு நாட்டில் பிறந்த ஒரே காரணத்தால் ஒருவர் முஸ்லிமாக இருக்க முடியாது. முஸ்லிமுக்கு பிறந்த ஒரே காரணத்துக்காக மட்டும் ஒருவர் முஸ்லிமாகிவிட முடியாது. இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஒப்புக் கொண்டவர் அதைச் செயல்படுத்தி வாழ்வதன் மூலமே முஸ்லிமாகின்றார்.


ஆனால், ஐரோப்பாவில் பிறந்த ஒரு ஐரோப்பியர் இஸ்லாத்தைத் தழுவி அந்த வாழ்க்கையைச் செயல்படுத்தி வாழ்வதன் மூலமாக முஸ்லிம் என்று சொல்லிக் கொள்ள முடியும். அமெரிக்காவில் பிறந்த ஒருவர் இஸ்லாத்தை ஏற்று அதன்படி வாழ்வதால் முஸ்லிமாக முடியும். ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த கருநிறத்து மனிதர்கூட இஸ்லாத்தை ஒப்புக் கொண்டு அந்த வாழ்க்கை முறையை செயல்படுத்தும்போது முஸ்லிமாக முடியும்.

மொத்தத்தில், முஸ்லிம் என்றால் …

  • ஒரு இனத்துக்கோ,
  • ஒரு நாட்டுக்கோ
  • குறிப்பிட்ட மொழி பேசும் மக்களுக்கோ
  • பெற்றோர் மூலமாக வழிவழியாகவோ
  • வரும் வாரிசுரிமை அல்ல.
இஸ்லாம் என்பது – 

  • ஒரு கொள்கை
  • ஒரு சித்தாந்தம்
  • ஒரு மார்க்கம்
  • ஒரு மார்க்கம்
  • மனிதருக்கான வாழ்க்கை முறை
  • பிரபஞ்ச நியதி
இந்த வாழ்வியல் கோட்பாடுகளை பின்பற்றி வாழ முன்வருபவர்கள் அவர்கள் யாராக இருந்தாலும் முஸ்லிம்தான். இந்த வழிமுறையைப் போதித்த நபிகளாரை தம்முடைய வழிகாட்டியாக ஒப்புக் கொண்டு செயல்படுத்தி வாழ்வோர் அனைவரும் முஸ்லிம்களே!

இஸ்லாம் என்பது முதலில் அறிவுக்குப் பெயர். அந்த அறிவை செயல்படுத்தி வாழ்பவனே முஸ்லிம் என்பவன். ஆக, அறிவு பெறாமல் ஒருவர் முஸ்லிமாக முடியாது. அப்படி வாழ முடியும் என்பது பொருள் தெரியாமல் ஏதோ ஓதி ஜபிக்கும் வேத விற்பனர்களைப் போலதான்! பொருளே விளங்காதபோது அந்த அறிவுரைகள் யாருக்கும் எந்தவிதமான பயனையும் தர வாய்ப்பே இல்லை.


அதனால், அறிவு பெறாமல் முஸ்லிம்களாக வாழவே முடியாது. இஸ்லாத்தைத் தழுவும்போது, ஒவ்வொருவரும் எடுத்துக் கொள்ளும் உறுதிமொழி, ‘லா இலாஹா இல்லல்லாஹ்! முஹம்மதுர் ரஸீலுல்லாஹ்!’ –வணக்கத்துக்குரியவன் ஒரே இறைவனான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை! முஹம்மது நபிகள் இறைவனின் தூதர்! – என்பதாகும்.

இந்த உறுதி மொழியிலிருந்து ஆரம்பித்து, தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் போன்ற இஸ்லாம் சம்பந்தப்பட்ட அனைத்து கட்டாயக் கடமைகளுக்கும் குறைந்த பட்ச அறிவு இன்றியமையாதது. தொழுகை சம்பந்தமான அறிவு இல்லாமல் தொழுகைகளை நிறைவேற்ற முடியாது. நோன்பு குறித்த சட்டத்திட்டங்கள் தெரியாமல் நோன்பு நோற்க முடியாது.

ஜகாத் சம்பந்தமாக தெரிந்து கொள்ளாமல் தன் செல்வத்திலிருந்து ஏழைகளின் உரிமைகளைப் பங்கிட முடியாது. இதேபோலத்தான் ஹஜ்ஜீம். ஹஜ் குறித்த அறிவு பெறாமல் வாழநாளில் ஒவ்வொரு முஸ்லிமும் மேற்கொள்ள வேண்டிய பெரும் பொருள் செலவிலான கடமையையும் நிறைவேற்ற முடியாது.

இறை மட்டுமல்ல மனித வாழ்வின் எந் ஒரு துறையையும் அது குறித்த அறிவு பெறாமல் பின்பற்றி வாழவே முடியாது. நேர்வழி, தீய வழி, நல்லது – கெட்டது என்று விவரம் புரியாமல் மனிதன் எப்படி வாழ முடியும்? இறைநம்பிக்கை, இறைநிராகரிப்பு இவை குறித்துத் தெளிவு பெறாமல் இறைநம்பிக்கையை எப்படி உறுதிப்படுத்த இயலும்?

அறிவு என்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் மிக முக்கியமானது. ஜீவனைப் போன்றது. அதனால்தான் அறிவு சம்பந்தமாக திருக்குர்ஆனும், திருநபிகளாரும்அதிகதிகமாக வலியுறுத்துகிறார்கள்.

“தந்தை தன் மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்புகளில் மிகச் சிறந்தது அவர்களுக்கு அளித்திடும் நல்ல கல்வியும், நல்லொழுக்கப் பயிற்சியுமேயாகும்!” (மிஷ்காத்)

“கல்வி பெறுவது ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கட்டாயக் கடமை!” (தபரானீ, பைஹகீ)

“இரவின் ஒரு சிறுபாகத்தில் கல்வி கற்பதும், கற்பிப்பதும் இரவு முழுவதும் விழித்திருந்து இறைவணக்கம் புரிவதைவிடச் சிறந்ததாகும்” (மிஷ்காத்)

“அறிவு முஸ்லிம்களின் காணாமல் போன சொத்தாகும். அதை எங்கு கண்டாலும் பெற்றுக் கொள்ளுங்கள்!” (திர்மிதி, மிஷ்காத்)

இறைவன் தனது திருவேதமான திருக்குர்ஆனில் கூறுகின்றான்:

“உண்மையில், அதிக கண்ணியம் வாய்ந்தவர் உங்களில் அதிக இறையச்சம் கொண்டவர்கள்தான்ள!” (49:13)

இந்த இறையச்சத்தை உருவாக்கும் சாதனமாக இருப்பது அறிவுதான்! அதனால், பெற்றோர்கள் குழந்தைகளுக்கு பாலோடு ஊட்டி வளர்க்க வேண்டியவற்றுள் முக்கியமானது இஸ்லாமிய கொள்கை, கோட்பாடுகள் ஆகியவற்றின் அறிவாகும்.

இஸ்லாத்தை ஏன் ஊட்டி வளர்க்க வேண்டும்? இதனால் உலகியல் நன்மைகள் என்னென்ன? அடுத்து பார்ப்போம்.

Related

குழந்தை வளர்ப்பு 2745881933637778907

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress