குழந்தை வளர்ப்பு - 11: 'முக்கோண வடிவிலான இளந்தலைமுறை'


இறைவனின் திருவேதமான திருக்குர்ஆன் ஓர் அழகிய பிரார்த்தனையைக் கற்றுத் தருகிறது.

“இறைவா! எங்களுக்கு இம்மையிலும், வெற்றி அளிப்பாயாக! மறுமையிலும் வெற்றி அளிப்பாயாக! நரக நெருப்பிலிருநது பாதுகாப்பாயாக!” – என்பதே அது. 

மனித இனம் இம்மை, மறுமை ஆகிய ஈருலகிலும் வெற்றிப் பெற வேண்டும் என்பதே இந்தப் பிரார்த்தனையின் நோக்கம். மனிதன் இம்மை எனப்படும் இந்த உலக வாழ்க்கைக்குப் பிறகு வரவிருக்கும் மறுமை வாழ்க்கையிலும் வெற்றி பெற வேண்டும். இதுவே மனித வாழ்க்கையின் இலட்சியம்.

உலக மக்கள் இஸ்லாத்தைப் பின்பற்ற வேண்டும் என்பதற்குப் பல காரணங்கள் உண்டு.

இவற்றில் முதலாவது காரணம், இஸ்லாம் படைத்தவனால், தனது படைப்புகளுக்காக அருளப்பட்ட மார்க்கம் அதாவது அவரவர்க்குச் சொந்தமான வாழ்க்கை முறை.

அடுத்தது, இந்த உலக வாழ்வில் ஒவ்வொரு மனிதனும் அமைதியுடனும், நிம்மதியுடனும் வாழ வேண்டும். இதற்கு இஸ்லாம் ஒன்றால் மட்டுமே நிரந்தரமான தீர்வு தர முடியும். தற்போது ஒவ்வொரு நாளும் பெருகிவரும் ஒழுக்க வீழ்ச்சிகளும், சமூகத்தீமைகளும் இதற்கு சாட்சி.


உலகின் சூப்பர் பவர் வல்லரசான அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் புள்ளிவிவரங்கள் அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன. இளந்தலைமுறையினரைக் காப்பதற்காக விரைந்து செயல்பட வேண்டும் என்னும் அவசியத்தை வலியுறுத்துகின்றன.


  • மது அருந்தி வாகனம் ஓட்டுவதால் அமெரிக்காவில் சராசரியாக 33 நிமிடத்திற்கு ஒருவர் படுகாயமடைகிறார்.
  • மது அருந்தி வாகனமோட்டுவதால்.. ஒவ்வொரு நாளும் 8 இளைஞர்கள் மரணமடைகிறார்கள். ஒவ்வொரு 30 விநாடிக்கும் ஒருவர் மது சம்பந்தமான பிரச்னைகளால் காயமடைகிறார்.
  • இந்த மரணங்களைக் கணக்கிட்டால் இதுவரை அமெரிக்கா மற்ற நாடுகள் மீது தொடுத்து கொன்றவர்களைவிட அதிகம்.
  • அமெரிக்காவில் ஒவ்வொரு நாளும் புதிதாக 5.800 பேர் மர்ஜுனா என்னும் போதைப் பொருளுக்கு அடிமையாகிறார்கள்.
அமெரிக்க இளையவர்களைக் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் நாட்டின் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 17 வயதை அடைவதற்குள் தகாத பாலுறவு கொள்கிறார்கள் என்கிற தகவல் வெளியாகியுள்ளறது.

10 பெண்களில் 7 பேர் பதினான்கு வயதை அடைவதற்குள் தகாத பாலுறவில் ஈடுபடுகிறார்கள்.

16 – 19 வயதுக்குட்பட்ட இளம் பெண்களில் மூன்றில் 1.5 பகுதியினர் வன்புணர்ச்சி மற்றும் பாலியல் தொந்திரவுகளுக்கு ஆளாகிறார்கள்.

18 வயதை அடைவதற்குள் சுமார் 82 விழுக்காடு பேர் புகைப்பிடிக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் இந்த வயதுடைய 3000 இளையவர்கள் தொடர் புகை பிடிப்பவர்களாக மாறுகிறார்கள். 5 மில்லியனுக்ககும் அதிகமான சிறுவர்கள் புகைப்பிடித்தல் தொடர்பான நோய்களால் பாதிக்கபடுகிறார்கள். 

அமெரிக்கா மட்டுமல்ல.. நமது நாட்டின் நிலைமையும் இதற்குச் சற்றும் குறைந்ததல்ல. நாள்தோறும் பெருகிவரும் ஒழுக்க வீழ்ச்சிகளுக்கு அளவேயில்லை. இவற்றிலிருந்து நமது இளைய தலைமுறையை மீட்டெடுக்க வேண்டும். வலிமையான இந்தியாவை உருவாக்க வேண்டும். இதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. அத்தகைய வளமையான இந்தியாவை உருவாக்க ஒவ்வொருவரும் தமது குழந்தைகளை ஒழுக்க மாண்புகளில் வார்த்தெடுக்க வேண்டும். அதற்கான ஒரே வழிகாட்டுதல் இஸ்லாம்தான்!

முஸ்லிம் சமுதாயத்தில் தற்போது மிகைத்துவரும் கொள்கைத் தடுமாற்றங்கள் இளைய தலைமுறையினரிடம் முக்கோண வடிவிலான மாற்றங்களை நிகழ்த்தி வருகின்றன.

முதல் வகையான இளைய தலைமுறை:

இப்பிரிவினர் இஸ்லாமிய சட்டவியல் கருத்து விபேதங்களில் அதிகளவு ஈடுபடுத்தப்படுகிறார்கள். நானூறு ஆண்டுகளுக்கு முன் வட நாட்டில் ஆக்ரோஷத்துடன் வீசி.. ஓய்ந்து போன அலை இது. காலம், உழைப்பு, திறமைகள் வீணானதுதான் மிச்சம்.

இரண்டாவம் பிரிவினர்:

இவர்கள் பதிலுக்கு பதில் என்ற வன் குணாம்சம் ஊட்டப்பட்டவர்களின் குழாம். இஸ்லாத்தின் அடித்தளத்தைத் தகர்க்கும் போக்கு இது. உணர்ச்சிவசப்படல் என்னும் கருவியால் மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள். திருக்குர்ஆனையும், திருநபிகளாரின் வழிமுறைகளையும் சரியான முறைகளில் விளங்கிக் கொள்ளாமையே இந்த விபரீதத்துக்கான காரணம்.

மூன்றாவது வகையினர்:

இஸ்லாம்தான் வாழ்வியல் தீர்வு என்கிற பெரும் நோக்கத்துடன் நாட்டின் சட்டம் ஒழுங்கை சீர்க்குலைக்காமல் ஜனநாயக நடைமுறைகளுக்கு உட்பட்டு அழைப்புப் பணியில் தங்கள் இளமையை அர்ப்பணித்துக் கொண்ட இளைய தலைமுறையினர். இவர்கள் எப்போதும் எண்ணிக்கையில் சிறுத்தவர்கள்தான்! ஆனாலும், இந்தக் குழுதான் எப்போதும் வெற்றியாளர்களின் குழு.

சமீபத்தில் என் மனதை பெரிதும் பாதித்த சம்பவம் இது:

பள்ளிகளுக்கான கோடை விடுமுறை விடப்பட்டிருந்த நேரமது. சென்னை அண்ணா சாலையின் பிரபல பள்ளிவாசல் ஒன்றில் முஸ்லிம் மாணவர்களுக்கான கோடைப் பயிற்சி முகாம் ஒன்று ஏற்பாடாகி இருந்தது. அதன் ஒரு பகுதியாக தற்காப்புப் பயிற்சிக்கான ‘கராத்தே’ வகுப்புகள் பள்ளிவாசலின் கீழ்த்தளத்தில் நடத்தப்பட்டன.

நபிகளாரின் காலத்தில் இஸ்லாமிய சமூகத்தின் மையப்பகுதியாக பள்ளிவாசல் இருந்தது உண்மைதான். நீதிமன்றமாகவும், உணவு பண்டகசாலையாகவும் ஆயுதத் தளவாடக் கிடங்காகவும், இன்னும் சமூகத்தில் பல்வேறு கூறுகளின் நிலையமாகவும் இருந்தது எல்லாம் உண்மைதான்.

ஆனால், இன்று ஒட்டுமொத்த சமூக அமைப்பும் சீர்குலைந்து போயுள்ள நிலைமை. முஸ்லிம்களிடையே இஸ்லாமிய அறிவு வீழ்ச்சியடைந்துள்ள நேரம். இதையே வாய்ப்புகளாகக் கொண்டு இஸ்லாத்தின் எதிரிகள் தரும் தொல்லைகள்.. எழுப்பும் பிரச்னைகள் கொஞ்சம் நஞ்சமல்ல. இதன் பாதிப்பு அழைப்புப் பணியின் களத்தில் உள்ளவர்களுக்குத்தான் தெரியும்.

இந்த யதார்த்தநிலையில், சமூகத்தைச் சீர்செய்ய வேண்டியது விழிப்புணர்வு கொண்ட ஒவ்வொருவரின் தலையாயப் பணி. ஒன்றும் இல்லாதபோதே பள்ளிவாசலில் முஸ்லிம்கள் ஆயுதங்கள் குவித்திருக்கிறார்கள் என வகுப்புவாதிகள். மிக மட்டமான பிரச்சாரம் செய்வது வாடிக்கையாகிவிட்ட சூழலில் பள்ளிவளாகத்துக்குள் தற்காப்புக் கலைகள் சொல்லித் தரப்படுவது விஷமப் பிரச்சாரத்துக்கு இன்னும் தூபம் போட்டதாகிவிடும்.

தன்னைக் காத்துக் கொள்வதற்காக எதிர்த் தாக்குதல் தொடுப்பதையோ அல்லது உடல் வலிமைக்காகவும், தற்காப்புக்காகவும் கற்றுக் கொள்வதையோ இந்திய அரசியல் சட்டம் தடுக்கவில்லை. அதற்கான உடற்பயிற்சி நிலையங்களில் கற்றுக் கொள்ளும்போது அங்கு இஸ்லாத்தைப் பரிச்சயப்படுத்தவும், செயல்படுத்திக் காட்டவும் வாய்ப்புகள் கிட்டும். நல்லிணக்கம் மலரும். இத்தகைய விபரீத நிலைகளிலிருந்து இளந்தறைமுறையினரைக் காப்பதற்கும் இஸ்லாத்தைப் பின்பற்றுவது அவசியம். 

இஸ்லாத்தில் இறைவணக்கம் என்பதைக் குறிக்க ‘இபாதத்’ என்னும் சொல் கையாளப்படுகிறது. இபாதத் என்னும் சொல் ‘அப்த்’ என்னும் வேர்ச் சொல்லிலிருந்து பெறப்பட்டது. இதற்கு ‘அடிமைப்படுதல்’ என்பது பொருள் அதாவது இறைவணக்கங்களில் மட்டுமல்லாமல் மனிதன் தனது வாழ்வு முழுக்கவும் இறைவனின் அடிமையாக இருக்க வேண்டும் என்று பொருள். அது தனிநபர் வாழ்க்கையாக இருந்தாலும் சரி, கூட்டு வாழ்க்கையாக இருந்தாலும் சரியே! வாழ்வின் எந்தத் துறையாக இருந்தாலும் சரி மனிதன் இறைவனின் கட்டளைகளுக்கு அடிபணிந்து வாழ வேண்டும்.

பெற்றோர்கள் தமது குழந்தைகள் இஸ்லாமிய வடிவமைப்புக்குள் வருவதற்கான அனைத்துப் பயிற்சிகளையும் அளிக்க வேண்டியது மிகவும் முக்கியம். இஸ்லாமியப் பண்பு நலன்களை இளைய தலைமுறை வளர்த்துக் கொள்வதன் மூலமே தன்னையும் காத்துக் கொள்ள முடியும். தன்னைச் சுற்றி வாழும் மனிதர்களையும் காக்க முடியும். இதற்காக உளவியல் ரீதியில் திட்டமிடுதல் அவசியம். நற்பண்புகளை வளர்த்துக் கொள்ள குழந்தைகளைப் பெற்றோர் ஊக்கப்படுத்த வேண்டும்.

  • தூய்மை, எதற்கும் கலங்காத மனோ தைரியம்,
  • தமது பொறுப்புணர்ந்து நடக்கும் மனப்பாங்கு,
  • நேர்மறையான எண்ணங்கள்,
  • நன்னடத்தை
இவற்றைக் குழந்தைகளுக்குப் போதிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

‘ஹாவார்ட்’ பல்கலைக்கழகம் நடத்திய ஓர் ஆய்வில் 85 விழுக்காடு பேர் வேலை பெறுவதற்குக் காரணமாக இருப்பதும், அந்தப் பணிகளில் மேன்மேலும் உயருவதற்குக் காரணமாக இருப்பதும் அவர்களது நற்பண்புகள்தான் என்று தெரிந்தது.

நேர்மறையான எண்ணங்கள் குழந்தைகளின் எதிர்காலத்துக்குச் சிறகு விரிக்கும். எதிர்மறையான சிந்தனைகளோ அவர்களின் எதிர்காலத்தை இருள்மயமாக்கிவிடும்.

நற்பண்புகளின் நிறைவாக இருப்பவர்கள் நபிகளார் ஆவார்கள். மனித குலத்தக்கு அருளாக இறைவனால் அனுப்பப்பட்டவர்கள். நபிகளாரைக் குறித்து இறைவன் தனது திருமறையில் இப்படிப் புகழ்ந்துரைக்கின்றான்:

“மேலும், திண்ணமாக நற்குணத்தின் மிக உன்னதமான நிலையிலேயே இருக்கின்றீர்” (68:4)

“நபியே! நாம் உம்மை உலகத்தாருக்கு அருட்கொடையாகவே அனுப்பியுள்ளோம் (21:107)

‘மைக்கேல் ஹார்ட்’ அமெரிக்க நாட்டைச் சேர்ந்த கிருத்துவ அறிஞர். இவர் எழுதிய நூல் ‘தி ஹண்ட்ரட்’ (அந்த நூறு பேர்). மக்கள் மனங்களைக் கொள்ளைக் கொண்ட உலகின் தலைசிறந்த நூறு பேரின் வாழ்க்கை வரலாற்றின் தொகுப்பு அது. நூலில் நபிகளாரை முதலாவதாக வைத்து அதற்கான காரணத்தையும் அவர் கூறுகிறார்: ‘தமது வாழ்நாளிலேயே சொன்னதை அனைத்துத் தளங்களிலும் செயல்படுத்திக் காட்டிய மாபெரும் ஆளுமைப் பண்பாளர் நபிகளார் என்கிறார் மைக்கேல் ஹார்ட்.

“நபிகளாரைப் போன்ற நற்குணங்களில் சிறந்த ஒருவர் சர்வாதிகாரியாக இருந்திருந்தால்.. இந்த நவீன உலகத்தின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைத்திருக்கும். உலகில் சாந்தியும், சமாதானமும் தவழ்ந்திருக்கும்!” – என்கிறார் பெர்ணாட் ஷா.

நபிகளர் தம்மைப் பற்றிக் கூறும்போது, ‘நற்குணங்களை நிறைவு செய்வதற்காகவே இறைவனால் நான் அனுப்பப்ப்டிருக்கின்றேன்!’ – என்கிறார்கள்.

Related

குழந்தை வளர்ப்பு 2379823615912135042

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress