குழந்தை வளர்ப்பு -12: 'நம்ரூதுகளை நடுநடுங்க வைக்கும் ஒரு சொல்!'


பொதுவாகவே அறிவைப் பெறாமல் நாம் எதையும் செயல்படுத்த முடியாது.
 
ஒரு மருத்துவர் நோயாளிகளின் நோய் நீக்க அவர் கட்டாயம் ‘மருத்துவம்’ படித்திருக்க வேண்டும். 

ஒரு சட்ட வல்லுநர், அப்பாவிகளையும், நிரபராதிகளையும் சட்டத்தின் சந்தர்ப்ப சாட்சியங்களிலிருந்து காக்க சட்ட அறிவு பெற்றிருக்க வேண்டும்.

ஒரு விளையாட்டு வீரர் வெற்றி பெற அவர் சார்ந்த விளையாட்டின் நுணுக்கங்களை கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும். அப்போதுதான் அவர் வெற்றியின் சிகரங்களைத் தொட முடியும்.

இப்படி உலகின் எந்தத் துறையாக இருந்தாலும், அறிவு பெற்றிருந்தால் மட்டுமே செயல்படுத்த முடியும் அத்துறையில் சிறக்க முடியும். இல்லையென்றால்.. வெறும் ‘பெயர் தாங்கிகளாக’ (So Called) மட்டுமே இருக்க முடியும்.

இஸ்லாம் என்னும் ‘வாழ்க்கை’ இறைவனின் அருட்கொடைகளில் மிகவும் பெரியது. மனிதனின் இம்மை – மறுமை வெற்றிக்கான வழிகாட்டுதல் இது. அப்படிப்பட்ட இஸ்லாத்தின் போதனைகள் குறித்த அறிவை நாம் பெறாவிட்டால்.. வெறும் உயிரற்ற பொம்மைகளாகவே, பெயர் தாங்கிகளாகவே, ஜீவனற்ற உடல்களாகவே இருக்க வேண்டியிருக்கும்.


பிறப்பினால் மட்டுமே யாரும் முஸ்லிம்களாவதில்லை. இஸ்லாத்தை செயல்படுத்துவதால்தான் முஸ்லிம்களாகிறார்கள். அதனால்தான், ஒரு மனிதன் எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும், எந்த இனத்தைச் சேர்ந்தவாராக இருந்தாலும், எந்த சமயத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், எந்த மொழியைப் பின்பற்றுபவராக இருந்தாலும் இஸ்லாத்தை ஒப்புக் கொள்வதால் முஸ்லிமாகிறார் அதாவது இஸ்லாத்தை செயல்படுத்த முன்வருகிறார் என்பதே இதன் பொருள்.

இஸ்லாம் என்ற இந்த அருட்கொடை யாருக்கும் தாய்-தந்தையர் வழியே.. வழி வழியாக.. கிடைப்பதில்லை; அவர் விரும்பினாலும், அவர் விரும்பாவிட்டாலும் அவருடனேயே கவசக்குண்டலமாய் ஒட்டிக் கொண்டிருப்பதற்கு! இஸ்லாத்தை செயல்படுத்துவதற்கான முயற்சி செய்தால்தான் முஸ்லிமாக முடியும்.

இறையருட் கொடையான இஸ்லாம் அறிவின் அடிப்படையில்தான் உயிர் பெற்றெழுகிறது. அந்த அறிவு பெறாதபோது செயலிழக்கச் செய்யப்படுகிறது. அதன்பிறகு, அரசு பதிவேடுகளில் மட்டும் மக்கள் தொகை கணக்கில் பதியப்பட்டுவிடும்.


இஸ்லாத்துக்கும், ‘குஃப்ரு’ எனப்படும் இறைநிராகரிப்புக்கும் இடையே உள்ள வேற்றுமை என்ன?

ஏகத்துவத்துக்கும், ‘ஷிர்க்’ எனப்படும் இணைவைத்தலுக்கும் இடையேயுள்ள வேறுபாடுகள் என்னென்ன?

- என்பதைப் புரிந்து கொள்ள முடியாத நிலையில், நேர்வழியிலிருந்து தடம் புரண்டிட ஏராளமான வாய்ப்புகள் உண்டு. தனது வாழ்க்கையின் கடிவாளத்தை வழிகேடர்களின் கையில் ஒப்படைத்துவிடும் பேராபத்தும் உண்டு.

ஒரு முஸ்லிம் இஸ்லாத்தின் அறிவுரைகளை தெரிந்து கொள்ளாததே அவனுக்கு எதிர்படும் ஆபத்துகளில் பேராபத்தாகும்.

அன்பு நபிகளார் அறிவுறுத்துகிறார்கள்:
  
“அறிவைப் பெறுவது ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கட்டாயக் கடமையாகும்” (தப்ரானீ, பைஹகீ)
 
இறைவன் திருக்குர்ஆனில் கூறுகின்றான்: “ நீங்கள் அறியாதவர்களாக இருந்தால்.. வேத அறிவு வழங்கப்பட்டவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள்!” (16:43)

பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்கு குழந்தைப் பருவத்திலிருந்தே.

  • ஓரிறைக்  கொள்கை
  • இறைவனை நம்புவதன் அவசியம்
  • இஸ்லாத்தின் அடிப்படைக் கூறுகளான தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ்
  • மரணம், மரணத்துக்குப் பின்னுள்ள வாழ்க்கையின் அவசியம்
  • சொர்க்கம், நரகம்
- இவற்றைப் பற்றி எல்லாம் யார்த்தமாக அறிவியல் கருத்துக்களோடு கலந்து எடுத்துரைக்க வேண்டும். இவை அனைத்தும் ‘அகீதா’ எனப்படும் இஸ்லாமிய கொள்கை, கோட்பாடு சார்ந்த கல்விக்கு உட்படும். இவற்றை குழந்தைகளுக்குப் போதிப்பதுதான் பெற்றோர்களின் முதற் பணி. 


அகீதா என்ற வார்த்தைக்க நிலைகுலையாத இறைநம்பிக்கை என்பது பொருளாகும். தான் சார்ந்துள்ள கொள்கையில் அணு அளவும் சந்தேகம் இல்லாத தெளிவு அது.

இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால்.. இறைநம்பிக்கையின் அடிப்படை விஷயங்கள் இவைதான்:

  • இறைவனை ஒருவன் என்று நம்புவது
  • வானவர்களை நம்புவது
  • இறைவேதங்களின் மீதான நம்பிக்கை
  • இறைத்தூதர்களை நம்புவது
    மறுமை என்னும் மரணத்துக்குப் பின்னுள்ள வாழ்வியல் நம்பிக்கை
  • தீர்ப்பு நாளில் நன்மை, தீமைகளின் அடிப்படையில் கிடைக்கவிருக்கும் சொர்க்கம், நரகம்.
இறைநம்பிக்கையின் மூலாதாரங்களாக இருப்பவை திருக்குர்ஆனும், சுன்னா(ஹ்) எனப்படும் திருநபிகளாரின் வழிமுறைகளும்தான்.


இந்த உலகத்திலுள்ள ஒவ்வொரு மனிதனும், ‘ஆதி பிதா’ ஆதம் நபியின் சந்ததிதான். அப்படியிருக்கும்போது இந்த மனித இனத்திலுள்ள ஒருவர் சொர்க்கவாசியாகவும், மற்றொருவர் நரகவாசியாகவும் எப்படி மாறுகிறார்? ஒருவர் சதா இன்பங்களையும், மற்றொருவர் துன்பத்துயரங்களையும் அனுபவிப்பது எப்படி? ஒருவர் ‘முஸ்லிம்” என்றும், மற்றொருவர் ‘காஃபிர்’ என்றும் பிரிப்பது எது?

மிகவும் சிந்திக்க வேண்டிய பிரச்னை இது.

முஸ்லிமுக்கும், காஃபிர் எனப்படும் இறைநிராகரிப்பாளனுக்கும் வேற்றுமை தருபவை இரண்டே இரண்டுதான். அவை:
  1. அறிவு.
  2. செயல்.
ஒருவன் படைத்தவனை அறிந்து கொள்கிறான். அவனது கட்டளைகளைத் தெரிந்து கொள்கின்றான். அவற்றை தனது வாழ்க்கையில் அமல்படுத்தவும் செய்கின்றான். இதன் மூலம் இம்மையில் அவன் வெற்றி பெறுவதுடன், படைத்தவனின் விருப்பத்தையும் பெற்றுவிடுகின்றான்.

அடுத்தவனோ, படைத்தவனை நிராகரிக்கின்றான். தன்னிச்சையாக தனது மன இச்சைகளின் கட்டளைகளை செயல்படுத்துகின்றான். பூமியில் குழப்பம் விளைவிக்கின்றான். தனது வாழ்க்கையை கெடுத்துக் கொள்வதோடு மற்றவர் வாழ்க்கையையும் கெடுக்கின்றான். இதனால் அவன் படைத்தவனின் கோபத்துக்கு ஆளாகின்றான். அதற்காக தண்டனையையும் பெறுகின்றான்.


இந்த நிலைமை நமது பிள்ளைகளுக்கும் ஏற்படக்கூடாது. அவர்கள் எந்த நிலையிலும் படைத்தவனை நிராகரித்து நன்றி கொன்றவர்களாக மாறக்கூடாது. பெயர் தாங்கிகளாக உருவாகக் கூடாது.

குழந்தைகள் மழலை மொழியில் பேச்சைத் தொடங்கியதும் அவர்களுக்கு இஸ்லாத்தின் மூலக் கொள்கையான ‘கலிமா தய்யிபா’ சொல்லித் தரத் தொடங்க வேண்டும்.

கலிமா என்னும் இந்த உறுதிமொழி மூலம்தான் மனிதன் இஸ்லாத்தின் வட்டத்துக்குள் வருகின்றான். வெறும் இரண்டே இரண்டு வாக்கியங்கள்.. “லா இலாஹ இல்லல்லாஹ்! முஹம்மதுர் ரஸீலுல்லாஹ்! – இல்லை இறைவன் ஒருவனைத் தவிர! முஹம்மது நபிகள் இறைவனின் தூதர்!” – என்ற இரண்டு வாக்கியங்கள் … ஒரு மனிதனின் நிலைமையை தலைகீழாக மாற்றி விடுகின்றன.

இவை ஏதோ நமது தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஒளிபரப்பப்படும் மாயஜால கட்டுக் கதைகளின் மந்திர வார்த்தைகள் அல்ல; மலைகள் பறந்து மிதப்பதற்கு! கிராஃபிக் தலையில்லாத முண்டங்கள் அல்ல; துள்ளி குதிப்பதற்கு..!

ஆனால், இந்த சொற்றொடரின் பொருள்தான் உலகையே புரட்டிப் போடுகிறது. அசத்தியவாதிகளை வெறுண்டோடச் செய்கிறது. நம்ரூதுகளின் அரண்மனையை கிடுகிடுக்கச் செய்கிறது. ஃபிர்அவ்ன்களை செங்கடலில் மூழ்கடிக்கிறது. மூஸா நபியின் கைத்தடியாய் மாறி கடலைப் பிளக்க உதவுகிறது. இப்ராஹீம் நபி வீசப்பட்ட நெருப்புக் குண்டத்தை பூஞ்சோலையாக மாற்றிவிடுகிறது. இறைவனின் திருப்திக்கு ஆளாக்கி சொர்க்கத்தின் கதவுகளை திறக்கச் செய்கிறது.

உண்மையில், கலிமாவின் பொருள்தான் என்ன? அதை குழந்தைகளுக்கு போதிப்பதற்கான அவசியம்தான் என்ன?

 - தொடரும்.

Related

குழந்தை வளர்ப்பு 5037680795797863053

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress